
‘துணிவு’ தூள் கிளப்பிய மகிழ்விலிருக்கும் அஜித், அடுத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஆயத்தமாகிவிட்டார்.
ரஜினிகாந்த், தன் அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை யாருக்குத் தரலாம் என்பதில் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். தேசிங்கு பெரியசாமி சொன்ன கதையில் கிராபிக்ஸ் தொழில்நுட்பச் செலவு பல கோடிகளுக்குத் திட்டமிடப்பட்டதால், அதற்கு வாய்ப்பில்லை என்றாகிவிட்டதாம். ‘டான்’ சிபி சக்கரவர்த்தி சொன்ன கதையில் ரஜினி சொன்ன மாற்றங்கள் இன்னமும் சரிசெய்யப்படவில்லையாம். அதனால், கிட்டத்தட்ட சிபியைத் தவிர்க்கிற முடிவுக்கே ரஜினி வந்துவிட்டாராம். அடுத்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் பெயரை யோசித்தாராம் ரஜினி. சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை முடிக்க அவருக்கு தாமதம் ஆகும் என்பதால், இப்போதைக்கு ‘ஜெய் பீம்’ ஞானவேல் பெயரை ஓகே லிஸ்ட்டில் வைத்திருக்கிறாராம் ரஜினி. அட்வான்ஸ் கொடுத்திருக்கும் லைகா நிறுவனம் இயக்குநர் பெயரை அறிவிக்க அவசரப்படுத்துவதால், ஞானவேல் பெயர் `டிக்’ அடிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘துணிவு’ தூள் கிளப்பிய மகிழ்விலிருக்கும் அஜித், அடுத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஆயத்தமாகிவிட்டார். த்ரிஷா தொடங்கி ஹீமா குரேஷி வரை அடிபட்ட ஹீரோயின் லிஸ்ட்டில், யாரும் யூகிக்காத விதமாக, திடீரென சாய் பல்லவி பெயரைப் பரிசீலனை பட்டியலில் `டிக்’ அடித்திருக்கிறார்கள். அஜித் - சாய் பல்லவி காம்பினேஷன் பக்காவாக வொர்க்அவுட்டாகும் என நம்புகிறது படக்குழு. “அஜித் சாருடன் நடிப்பது என் கொடுப்பினை. அதேநேரம், எனக்குக் கதை பிடித்திருக்க வேண்டும்” எனத் தெளிவாகச் சொன்னாராம் சாய் பல்லவி. அம்மணியிடம் கதை சொல்லக் கிளம்பியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

‘வாரிசு’ படம் ஃபேமிலி ஆடியன்ஸைப் பெரிதாக ஈர்த்த சந்தோஷத்திலிருக்கும் விஜய், அடுத்த இரண்டு படங்களையும் தயாரிக்கும் வாய்ப்பை லலித்துக்கே கொடுத்திருக்கிறாராம். சன் பிக்சர்ஸ் தொடங்கி தேனாண்டாள் ஃபில்ம்ஸ் வரை பல நிறுவனங்கள் காத்துக்கிடக்க, அடுத்த இரண்டு படங்களையுமே லலித்துக்கு வழங்கி பலரையும் திகைக்கவைத்திருக்கிறார் விஜய். ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டு விஷயங்களில் லலித் காட்டிய அணுகுமுறையும், தெளிவான திட்டமிடலும்தான் விஜய்யைப் பரவசப்படுத்தியதாம்.
“பெரிய கதை வேண்டாம்… பிரமாண்டம் வேண்டாம்… சின்னக் கதையாகப் பிடியுங்கள்” என இயக்குநர் அ.வினோத்திடம் சொல்லியிருக்கிறாராம் கமல். ‘துணிவு’ படத்தின் வெற்றிக் களிப்பிலிருக்கும் வினோத்துக்கு இந்தத் தகவல் ரொம்பவே ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறதாம். கமலுக்கான சம்பளம் தவிர்த்து பிற வேலைகளுக்கான பட்ஜெட்டாக 25 கோடி திட்டமிடப்படுகிறதாம்!

உஷ்...
பொங்கல் ரிலீஸில் பந்த பாசத்தைச் சொன்ன படத்தில், ஸ்லிம்மாகியிருக்கும் பூ நடிகையின் காட்சிகளை மொத்தமாக வெட்டிவிட்டார்களாம். படத்தில் அம்மணி நடித்ததற்கான சுவடே தெரியாமல்போக, உச்சபட்ச கோபத்துக்குப் போய்விட்டாராம். படத்தின் நாயகன், தனிப்பட்ட வகையில் போனில் பேசிய பிறகுதான் அம்மணி அமைதியானாராம்!