அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

திவி வத்யா
பிரீமியம் ஸ்டோரி
News
திவி வத்யா

இசை மூலமாகத்தான் இண்டஸ்ட்ரிக்கு அறிமுகமானார் யூத்தான ஹீரோ. வரிசையாகப் படங்களைக் கைவசமாக்கியவர், ‘இனி இசை கிடையாது’ என அறிவித்துவிட்டாராம்.

பொங்கல் ரிலீஸ் போட்டியில், வசூல் அதிகமாக இருந்தது உண்மையாகவே குடும்பப் பெருமை பேசிய படத்துக்குத்தானாம். ஃபேமிலி ஆடியன்ஸ் செல்வாக்கில் வசூலில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தாலும், போட்ட முதலுக்குப் போதிய வருவாயாக லாபம் அமையவில்லையாம். ஆனாலும், `நம்பர் ஒன்’ என முழங்கி, ஹீரோவைக் குளிரவைப்பதிலேயே தயாரிப்புத் தரப்பு தீவிரமாக இருக்கிறதாம். ஒருகட்டத்தில் டென்ஷனான ஹீரோ, “படம் குறித்து இனி எந்தச் செய்தியையும் பரப்பாதீங்க…” எனக் கறாராகச் சொல்லிவிட்டாராம். வீட்டுப் பிரச்னையில் வேறு சோர்ந்துபோயிருக்கும் ஹீரோ, விரைவில் அடுத்த ஷூட்டிங்கில் ஐக்கியமாகி மனநிலையை சகஜமாக்க நினைக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்

ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தாலும், காமெடி பாத்திரங்களையும் கைவிடாமல் நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார் யோகமான காமெடி நடிகர். நட்பு, அன்பு, பழக்க வழக்கம் எனப் பார்த்து யாரையும் தவிர்க்க முடியாமல் அனைவருக்கும் தேதி கொடுப்பதால், அவருடைய பல படங்கள் ஒன்றிரண்டு நாள் தேதிக்காகக் காத்துக் கிடக்கவேண்டிய நிலை உருவாகியிருக்கிறதாம். ‘தேதி ஒதுக்குவதில் குளறுபடிகள் இல்லாமல் கவனித்துக்கொண்டால், பல தயாரிப்பாளர்களின் பாரம் குறையும்’ என்கிறார்கள் காமெடி நாயகரை கமிட் பண்ணி வைத்திருப்பவர்கள்.

இசை மூலமாகத்தான் இண்டஸ்ட்ரிக்கு அறிமுகமானார் யூத்தான ஹீரோ. வரிசையாகப் படங்களைக் கைவசமாக்கியவர், ‘இனி இசை கிடையாது’ என அறிவித்துவிட்டாராம். இசையமைக்கக் கேட்ட பல படங்களைத் தவிர்த்துவிட்டாராம். ‘நல்ல சம்பளம் தருகிறோம்’ எனச் சொன்னவர்களுக்கும் அசைந்து கொடுக்கவில்லையாம். ‘சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடிப்பேன்’ எனச் சபதம் போட்டு நடிப்பில் சாதிக்கத் துடிக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்

முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடத் துடிக்கிற வருத்தப்படாத நடிகர், திடீரென முன்னணித் தொலைக்காட்சிகளின் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச விரும்பினாராம். ‘இவரும் அரசியலுக்கு வருகிற ஆசையில் இருக்கிறாரோ’ என்கிற சந்தேகத்துடனேயே பலரும் சந்திக்கப் போயிருக்கிறார்கள். “உங்கள் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கிறேன். ரொம்ப நல்லா பண்றீங்க. பாராட்டத்தான் அழைச்சேன்” எனச் சொல்லி சிற்றுண்டி வழங்கிச் சிறப்பித்து அனுப்பினாராம். ``ஆசை இருக்கோ இல்லையோ… ஆனா, இந்த மனுஷன் நிச்சயம் அரசியலுக்கு வரலாம்” எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் டி.வி புள்ளிகள்.

மிஸ்டர் மியாவ்

படம் வெற்றியடைந்தாலும், பைக் நடிகருக்கு அந்த அளவுக்கு நிம்மதி இல்லையாம். வடக்கத்திய தயாரிப்பாளர் கடைசி நேரத்தில் நடந்துகொண்டவிதம் நடிகருக்கு மனக்கசப்பை உருவாக்கிவிட்டதாம். அதனால், படத்தை ஹீரோ இன்னமும் பார்க்கவில்லையாம். படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கும் வாழ்த்துச் சொல்லிப் பேசவில்லையாம். படத்துக்கான ஹைப்பை ஏற்றும்விதமாக நடத்தப்பட்ட விளம்பர விஷயங்களும் பைக் நடிகரை முகம் சுளிக்க வைத்ததாம்!