
‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் பெரிய கவனம் ஈர்த்த எம்.சரவணன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படம் ‘ராங்கி.
அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. ஆனாலும், அஜித்தின் மேனரிசம் தொடங்கி ஆர்ட் டைரக்ஷன் வொர்க் வரை ஈர்ப்பான விஷயங்களும் நிறைய இருக்கின்றனவாம். ‘பெரிய அளவுக்கு ஹைப் ஏற்ற வேண்டாம்’ என அஜித் சொன்னதன் பேரில்தான், ட்ரெய்லரில் இந்த அளவுக்கு அடக்கிவாசித்தார்களாம். ‘மொத்தப் படமே பேங்க் கொள்ளைதான்’ என ரசிகர்களை நினைக்கவைத்து, படத்துக்குள் ஹெச்.வினோத் உருவாக்கியிருக்கும் ட்விஸ்ட்தான் மிரளவைக்கப் போகிறதாம். ‘ஏழைகள் தொடங்கி பணக்காரர்கள் வரை பேங்க்குடன் தொடர்புவைத்திருக்கும் அனைவருக்குமான கனெக்ட்டை ‘துணிவு’ நிச்சயம் கொடுக்கும்’ என்கிறார்கள்.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் பெரிய கவனம் ஈர்த்த எம்.சரவணன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படம் ‘ராங்கி.’ படத்தை அவர் முடித்துக்கொடுத்து ஒரு வருடமாகியும் படத்தின்மீது பெரிய நம்பிக்கை இல்லாமல் ரிலீஸைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது லைகா நிறுவனம். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் த்ரிஷா மார்க்கெட் எகிறியதால், அதைவைத்து ரிலீஸ் செய்தார்கள். அவர்கள் நினைத்ததைக் காட்டிலும் நல்ல கவனம் பெற்றிருக்கிறது ‘ராங்கி’ படம். லைகா மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியிட்ட ‘நாய் சேகர்’, ‘பட்டத்து அரசன்’ படங்களைக் காட்டிலும் ‘ராங்கி’ சாதித்ததுதான் ஹைலைட்.

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடித்த ‘லெஜண்ட்’ படம் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வெளியானது. ஆனால், இதுவரை சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸை எந்த நிறுவனமும் வாங்கவில்லை. காரணம், படத்தின் ரிசல்ட். ஆனாலும், மனம் சளைக்காமல் வந்த விலைக்கு இரு ரைட்ஸுகளையும் தள்ளிவிட்டு மக்களை ‘லெஜண்ட்’ படத்தைப் பார்க்கவைத்தே ஆக வேண்டும் என்பதில் அண்ணாச்சி உறுதியாகிவிட்டாராம். இந்த நிலையில், அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் அவர் வெளியிடப்போகிறாராம். படத்தின் கதை விவாதம் வரை முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

‘ஜெயிலர்’ படத்துக்குப் பிறகு, ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. தேசிங்கு பெரியசாமி தொடங்கி ‘டான்’ சிபி சக்கரவர்த்தி வரை பலருடைய பெயர்கள் அடிபட்டாலும், யாருமே உறுதிசெய்யப்படவில்லை. சமீபத்தில் பெரிய ஹிட் அடித்த ‘லவ் டுடே’ டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் பெயரும் இப்போது பரபரப்பாக அடிபடுகிறது. பலருடைய கதைகளையும் கேட்ட வகையில் சிபி சக்கரவர்த்தி கதைதான் ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம். அவருடைய ஜாதகமும் சாதகமாக இருக்கிறதாம். அதனால், அடுத்து அவர் பெயரையே அறிவிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் ரஜினி!
உஷ்...
உடல்ரீதியான தளர்வு உலக நடிகரை ரொம்பவே படுத்துகிறதாம். விரைவில் சிகிச்சைக்காக வெளிநாடு பறக்கிற திட்டமும் இருக்கிறதாம். ‘வருடத்துக்கு ஒரு படம் நடிப்பு… நான்கு படம் தயாரிப்பு’ எனத் திட்டமிட்டிருக்கிறாராம் உலக நடிகர்!