
விஜய்க்கு சொன்ன கதை அப்படியே அஜித்துக்குப் போகிறது.
* 2020-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே விஷாலுக்குச் சிக்கல்கள். மிஷ்கினுடன் சண்டை. தொடர்ந்து ‘துப்பறிவாளன்-2’ படத்தைத் தானே இயக்குவதாக அறிவித்தார். அடுத்து, ஐடி ரெய்டு நடந்து, விஷாலின் கணக்குகள் முடக்கப்பட்டன. இப்போது விஷாலின் பணம் 45 லட்சம் ரூபாயை அலுவலகத்தில் வேலை பார்த்த பெண் ஒருவர் கையாடல் செய்துவிட்டார் என்று புகார் அளித்திருக்கிறார் விஷாலின் மேலாளர் ஹரி. தொடர்ந்து, ஹரியின் கார் உடைக்கப்பட்டிருக்கிறது. தன்னைச் சுற்றி ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என்று கடும் மன அழுத்தத்தில் இருக்கிறாராம் விஷால்.
* `நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய டெக்னீஷியன்கள் தற்போது வாங்கும் சம்பளத்திலிருந்து 30-50 சதவிகிதம் குறைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற முடிவை, தயாரிப்பாளர்கள் ஒன்றுகூடி எடுத்திருக்கிறார்கள். இத்துடன், ‘அடுத்த ஓர் ஆண்டுக்குப் புதிதாக எந்தப் படங்களையும் தயாரிக்கக் கூடாது; பொருளாதாரச் சூழல் சரியான பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்றும் பேசியிருக்கிறார்கள். ‘மீறி யாரேனும் படம் எடுத்து நஷ்டத்தையோ, படப்பிடிப்பில் சிக்கலையோ சந்தித்தால் நாங்கள் உதவிக்கு வர மாட்டோம்’ என்றும் மூத்த தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.

* நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனாவால் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தைத் தவிர ‘நெற்றிக்கண்’, ‘அண்ணாத்த’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என மூன்று படங்களுமே கிடப்பில் இருப்பதால், திருமணம் 2021-க்கு தள்ளிப்போகும் என்கிறார்கள்.
* விஜய்க்கு சொன்ன கதை அப்படியே அஜித்துக்குப் போகிறது. ‘மாஸ்டர்’ படத்துக்கு அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார் விஜய். ஆனால், இந்தக் கதையில் கிராஃபிக்ஸ் அதிகம், ப்ரீ புரொடக்ஷனுக்கு நிறைய நாள்கள் வேண்டும் என சுதா கேட்டதால், சன் டி.வி பின்வாங்கியது. இதனால் இந்தக் கதையை அஜித்திடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார் சுதா. ‘வலிமை’ ஷூட்டிங்கின்போதே இந்தப் படத்துக்கான வேலைகளும் நடக்குமாம்.
* த்ரிஷா, சமந்தா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகைகள் பலரும் வெப்சீரிஸுக்கு வந்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் எகிறுகிறது இவர்களின் சம்பளம். லாக்டெளன் முடிந்ததும், இந்தச் சம்பளத்தில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.