அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
News
அமலா பால்

படங்கள்: கிரண் சா

இயக்குநர் அட்லி, ஷாருக் கான் நடிப்பில் படம் பண்ணப்போகும் விஷயம் பரபரப்பு, அமைதி என அடிக்கடி ரூட் மாறிக்கொண்டே இருக்கிறது. உண்மையில் கதையை ஓகே பண்ணி, அட்வான்ஸ் கொடுத்து, அட்லியை ஏற்கெனவே கமிட் செய்துவிட்டார்கள். ஷாருக் கானும் டபுள் ஓகே சொல்லிவிட்டார். கொரோனா இரண்டாம் அலையால்தான் அறிவிப்பு தாமதமாகிறதாம். ‘ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளத்தைவிட அதிகம் வாங்கணும்’ என்பதுதான் அட்லியின் டார்கெட்டாம். அதையும் நிறைவேற்றிக் கொடுக்கச் சொல்லிவிட்டாராம் ஷாருக் கான்!

ட்விட்டர் ஸ்பேஸ் பக்கம் திடீரெனத் தலைகாட்டி, திரைக்கதை அமைப்பது குறித்து விளக்கினார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். உதவி இயக்குநராக இருந்த காலம்தொட்டுப் பல அனுபவங்களை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள, பலருக்கும் ரொம்பவே பிடித்துப்போனது. சினிமாவில் ஜெயிக்க நினைப்பவர்களுக்கு வழிகாட்டும்விதமாக, இப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் ட்விட்டர் ஸ்பேஸ் பக்கம் வந்து நள்ளிரவுவரை தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் ரிலீஸுக்கு தாமதமாகிக்கொண்டே போகிறது. படத்தில் ஐந்து ஃபைட் சீன்களில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தாராம் விக்ரம். ஒருசில காட்சிகளை கௌதம் வாசுதேவ் மேனன் காட்ட, அசந்துபோன விக்ரம், “எப்படியாவது படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா” என வற்புறுத்துகிறாராம். ரிலீஸ் பேச்சுவார்த்தைகள் மறுபடியும் தீவிரமாகிவருகின்றன.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

நடிப்பு, திருமணம், டைவர்ஸ் என, கடகட வேகத்தில் எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அமலா பால், அடுத்து இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். தன் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை அப்படியே திரைக்கதையாக்கி, நண்பர்களுடன் விவாதித்துவருகிறார். தயாரிப்பாளர் கிடைத்தால், ஆக்‌ஷன் சொல்ல அம்மணி ரெடி. நடிப்பு யார் என்றுதானே கேட்கிறீர்கள்… அம்மணியேதான்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஈழ விவகாரங்களைப் பரபரப்பாக்கி, படமெடுத்து சர்ச்சை கிளப்புகிறவர்களுக்கு மத்தியில், ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து தன்னையே மாய்த்துக்கொண்ட திலீபனின் உண்மைக் கதையைப் பல வருடங்களுக்கு முன்பே படமாக்கினார் இயக்குநர் ஆனந்த்மூர்த்தி. நடிப்பு நந்தா, கேமரா வேல்ராஜ், இசை ஜீ.வி.பிரகாஷ், எடிட்டிங் கிஷோர் என வலிமையான டீம். ‘திலீபன்’ என்கிற தலைப்பில் உருவான அந்தப் படத்தின் ஷூட்டிங், சில நாள்கள் மீதமிருந்த நிலையில் பட்ஜெட் பிரச்னையால் நின்றது. இப்போது ஓ.டி.டி நிறுவனங்கள் பலவும் போட்டிபோட ‘திலீபன்’ படத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார்கள். “கதை, மேக்கிங் என இயக்குநர் ஆனந்த்மூர்த்திக்கு இந்தப் படம் பெரிய பிரேக் கொடுக்கும்” என நம்பிக்கையாகச் சொல்கிறார் எடுத்த வரையிலான படத்தைப் பார்த்த இயக்குநர் சசிகுமார்.

‘எப்போது வேண்டுமானாலும் வந்து கதை சொல்லலாம்’ என ரஜினி ஒருவரிடம் சொல்லியிருக்கிறார் என்றால், அது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் மட்டும்தான். ஆனாலும், ரஜினியை நோக்கிப் போக ரொம்பவே தயங்குகிறார் ரவிக்குமார். “அடிச்சா நெத்தியடியா ஒரு கதை சொல்லணும். ரஜினியோட வாழ்க்கையில் அந்தப் படம் தவிர்க்க முடியாத படமா இருக்கணும். அப்படிப்பட்ட கதை அமைஞ்சாதான் பண்ணணும். இல்லைன்னா அமைதியா ஒதுங்கிடணும்” என்கிறாராம் ரவிக்குமார்.

உஷ்…

தன்னை இயக்கிய இயக்குநரோடு அடுத்த படம் இணைந்து இதுவரை நடித்ததில்லை தம்பி நடிகர். அதை உடைத்து இரண்டாவது படத்திலும் அவரோடு கைகோக்க, காய்நகர்த்தினார் சென்டிமென்ட் படங்களின் மன்னராகத் திகழும் இயக்குநர். ஆனால், வில்லேஜ் படங்களில் கொம்பனாகத் திகழும் இயக்குநரோடு இரண்டாவது முறையாகக் கைகோத்துவிட்டார் தம்பி நடிகர். ‘இந்த நடிகர்களே இப்படித்தான்பா’ என நக்கலடித்துப் புலம்புகிறார் மன்னர் இயக்குநர்!