
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில், விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என இப்போதும் உறுதியாகச் சொல்லிவருகிறார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி
அஜித் படம் கைநழுவிப்போனாலும், அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் விக்னேஷ் சிவன். ‘விக்கி லெவன்’ என்கிற கிரிக்கெட் டீமை ஆரம்பித்து, மாலை நேரங்களில் வியர்க்க விறுவிறுக்க விளையாடுகிறார். ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனை வைத்துப் படம் இயக்கும் முடிவும் தயாரிப்பாளர் தலையீட்டால் தள்ளிக்கொண்டே போவதால், குழந்தைகளோடும் கிரிக்கெட் டீமுடனும் பொழுதைக் கழிக்கிறார். அஜித்துக்காக பக்கா மாஸாகச் செய்த கதையை இந்தி, தெலுங்கு ஸ்டார்களிடம் சொல்லி, ‘இப்படிப்பட்ட கதையைத்தான் அஜித் சார் மிஸ் பண்ணிட்டார்’ என நிரூபிக்க நினைப்பது மட்டுமே விக்கியின் ஒரே டார்கெட்டாக இருக்கிறதாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து படம் நடிக்கவிருப்பதும், அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், காதலும் மோதலுமான கதைக்களமாம். கமல் தொடங்கி பிரபாஸ் வரையிலான பல ஹீரோக்களுக்கான கதைக்காக அட்வான்ஸ் வாங்கியிருக்கும் லோகேஷ், திடீரென நடிப்பில் இறங்கியிருப்பது பலரையும் திகைக்கவைத்திருக்கிறது. ‘கமல் புராஜெக்ட் இப்போதைக்குக் கிடையாது’ என லோகேஷ் வீசிய வெடிகுண்டு, ராஜ்கமல் நிறுவனத்தையே அதிரவைத்திருக்கிறதாம்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில், விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என இப்போதும் உறுதியாகச் சொல்லிவருகிறார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. கிட்டத்தட்ட 99 படங்களை நெருங்கிவிட்ட நிலையில், விஜய்யிடம் மறுபடியும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்கள். நன்றிக்கடன் மறக்காமல் நிச்சயம் நடித்துக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் விஜய், சம்பளமாகக் கேட்பது பெரிய தொகையையாம். உண்மையாகவே விஜய்தான் இவ்வளவு பெரிய சம்பளம் கேட்கிறாரா... இல்லை மீடியேட்டர்கள் ஏற்றிவிடுகிறார்களா எனத் தெரியாமல் மௌனம் காக்கிறார் ஆர்.பி.சௌத்ரி. தன் நிறுவனத்தின் 99-வது படத்தை ஆர்யாவை வைத்துத் தொடங்கும் திட்டத்தில் தீவிரமாகியிருக்கிறார் சௌத்ரி.

‘அங்காரகன்’ பட முன்னோட்டத்திலேயே, “நான் கட்சி ஆரம்பிப்பேன்னு சொல்லி யாரையும் ஏமாற்ற மாட்டேன்” என ரஜினியைச் சீண்டி டயலாக் பேசியிருக்கிறார் சத்யராஜ். படத்தின் முன்னோட்டம் பரவலான கவனம் பெற்றிருக்கும் நிலையில், ரஜினிக்கும் அது குறித்த தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். முன்னோட்டத்தைப் பார்த்த ரஜினி, எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதியாகிவிட்டாராம். இத்தனைக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கும் வெப் சீரீஸுக்கு சத்யராஜ்தான் ஹீரோவாகப் பேசப்பட்டுவருகிறார். ரஜினி தரப்பிலிருந்து அட்வான்ஸ் கைமாறிய நிலையிலும், வழக்கமான சீண்டலை சத்யராஜ் கைவிடாததுதான் ஆச்சர்யம்.
உஷ்...
சங்கப் படத்தில் நடித்த நடிகையின் செல்போன் காணாமல்போய் திரும்பக் கிடைத்துவிட்டாலும், அதிலிருந்த பல வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பது இப்போது தெரியவந்திருக்கிறதாம். துணை நடிகைதான் என்றாலும், பல ஹீரோக்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களாம் அவை. கிலியடித்துக் கிடக்கிறது ஒரு கூட்டம்!