அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அக்ஷரா கவுடா
பிரீமியம் ஸ்டோரி
News
அக்ஷரா கவுடா

அஜித்துடன் ‘துணிவு’ படத்தில் இணைந்த மஞ்சு வாரியருக்கு அடுத்தடுத்து தமிழிலிருந்து நிறைய வாய்ப்புகளாம். ஆனால் கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டும் மஞ்சு வாரியர், இன்னும் ஒரு படத்துக்குக்கூட ஓகே சொல்லவில்லையாம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒரே நேரத்தில் ஐந்து படங்களுக்கான அறிவிப்பை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது. ரஜினி, தனுஷ், லோகேஷ் கனகராஜ் - அனிருத் ஆகியோரிடம் பேசி முடித்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்து சிவகார்த்திகேயனை வளைத்துப்போடும் முடிவில் இருக்கிறாராம். பல வருடங்களுக்கு முன்னரே சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட சாட்டிலைட் உரிமையை வாங்கியிருந்தது சன் நிறுவனம். படம் தாமதமானதால் பெரிய இழப்பு எனச் சொல்லி, சிவகார்த்திகேயனின் மனதை மசியவைத்து தேதி வாங்கியிருக்கிறதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமாரே இந்தப் படத்தையும் இயக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.

அஜித்துடன் ‘துணிவு’ படத்தில் இணைந்த மஞ்சு வாரியருக்கு அடுத்தடுத்து தமிழிலிருந்து நிறைய வாய்ப்புகளாம். ஆனால் கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டும் மஞ்சு வாரியர், இன்னும் ஒரு படத்துக்குக்கூட ஓகே சொல்லவில்லையாம். ‘ஆக்‌ஷன் சம்பந்தப்பட்ட கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்’ என்கிற விஷயத்தை மட்டும் அனுமானித்திருக்கும் நம்மூர் இயக்குநர்கள், வரிசையாக வெட்டுக் குத்துக் கதைகளைச் சொல்ல, மஞ்சு வாரியருக்கு மயக்கம் வராத குறையாம். அதனால், மலையாளத்தின் பக்கமே தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார் அம்மணி.

அக்ஷரா கவுடா
அக்ஷரா கவுடா

ராம் இயக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இதில் நிவின் பாலிக்கு நிகரான பாத்திரத்தில் இன்னொரு கதாநாயகனாகவே களம் இறங்குகிறாராம் சூரி. வெளிநாடு போய் பல வருடங்கள் கழித்து தாய்நாடு திரும்பும் சூரி, நிவின் பாலியிடம் மாட்டிக்கொண்டு படுகிற அவஸ்தைதான் மொத்தப் படமாம். “என்னையக் கொன்னுடாத… பொறந்ததுலருந்து எம்புள்ளைய நான் பார்த்ததே இல்லை…” எனக் கெஞ்சுகிற காட்சியில் மொத்த யூனிட்டையும் கலங்கடித்தாராம் சூரி. ‘விடுதலை’ படம் சூரிக்கு உருவாக்கியிருக்கும் மரியாதையை ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் இன்னமும் பெரிதாக்கும் என்கிறார்கள் சூரிக்கு நெருக்கமானவர்கள்.

அக்ஷரா கவுடா
அக்ஷரா கவுடா

‘அவெஞ்சர்ஸ்’ பாணியில் ஐந்தாறு ஹீரோக்களை வைத்துப் படம் செய்கிற எண்ணத்துக்கு மாறியிருக்கிறார் இயக்குநர் மணி ரத்னம். அதற்கேற்ற வகையில் இரண்டு திரைக்கதைகளை எழுதித் தயாராக வைத்திருக்கிறாராம். ‘பொன்னியின் செல்வன்’ பாகங்களை முடிப்பதற்கான இடைவெளியில், இந்தக் கதைகளை உருவாக்கியிருக்கும் மணி ரத்னம் இது குறித்து கமலிடம் கலந்து பேசுகிற முடிவில் இருக்கிறாராம். கமல் இதற்குச் சம்மதித்தால், ‘விக்ரம்’ படத்தை மிஞ்சுகிற அளவுக்கு மெகா கூட்டணியைக் கட்ட மணி ரத்னம் திட்டமிட்டிருக்கிறாராம்.

அக்ஷரா கவுடா
அக்ஷரா கவுடா

உஷ்...

பீட்சாவை விரும்பிச் சாப்பிடும் நடிகர், தன் அபிமானம் பெற்ற நடிகைக்காகப் பல தயாரிப்பாளர்களிடமும் வாய்ப்பு கேட்கிறாராம். காஷ்மீர் பக்கம் ஷூட்டிங் போன தயாரிப்பாளரிடமும் கோரிக்கை வைக்க, அவர் பதிலுக்குப் பாய… இருவருக்கும் இடையே மோதல் தூள் பறந்ததாம். “உங்களுக்கு அந்தப் பொண்ணைப் புடிச்சிருந்தா நீங்களே பணம் போட்டுத் தயாரிங்க…” என முகத்தில் அடித்தாற்போல் சொன்னாராம் அந்தத் தயாரிப்பாளர். நடிகர், கடும் கோபத்திலிருக்கிறாராம்!