
சைக்கிளிங் நடிகரின் ‘மிருக’ படம் படுதோல்வியைச் சந்தித்த நிலையிலும் ரிலீஸுக்கு முன்னரே பிசினஸை முடித்து பக்கா லாபம் பார்க்கப்பட்டது.
வெற்றிகரமான இயக்குநரின் சுதந்திரமான படம், பலவிதமான விமர்சனங்களையும் தாண்டி வசூலைக் குவித்துவிட்டது. இதே வேகத்தில் பார்ட் -2-வையும் ரிலீஸ் செய்துவிட நினைக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர். “இன்னும் 20 நாள்கள் ஷூட்டிங் இருக்கிறது” என வெற்றிகரமான இயக்குநர் சொல்ல, “ஐயய்யோ…” என அலறிவிட்டதாம் தயாரிப்புத் தரப்பு. 40 நாள்களில் முடிப்பதாகச் சொல்லி 250 நாள்கள் ஷூட்டிங்கை இழுத்தடித்த பின்னணி மனக்கண்ணில் வந்துபோனதுதான் அலறலுக்குக் காரணமாம். ‘முதல் பாகம் இந்த வருட விருதுகளுக்கு… இரண்டாம் பாகம் அடுத்த வருட விருதுகளுக்கு...’ எனக் கணக்கு போடுகிறாராம் வெற்றிகரமான இயக்குநர். விருது நோக்கத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், ‘ஷூட்டிங் பேலன்ஸ்’ எனச் சொல்லி வண்டியைக் கிளப்பத் தயாராகிவருகிறாராம்.

சங்க நாயகன், வேர்ல்டு நாயகனுடன் கைகோக்கும் படத்தின் பூஜை வெற்றிகரமாக நடந்திருக்கிறது. அட்வான்ஸ் கொடுத்து ஆண்டுகள் பலவான நிலையிலும், சங்க நாயகனின் தேதிக்காகப் பொறுமையோடு காத்திருந்தார் வேர்ல்டு நாயகன். ஒருகட்டத்தில் படத்தின் ஃபைனான்ஸ் நிர்வாகத்துக்கு மதுரைக்காரப் புள்ளியை இணைத்தார். எங்கே அடித்தால் அம்மி நகரும் என்கிற வித்தையை வேர்ல்டு நாயகன் செய்ய, அதன் பிறகே அடித்துப் பிடித்து தேதி கொடுத்தாராம் சங்க நாயகன். இளவரசனாக சங்க நாயகன் நடித்த படத்தை விநியோகித்த வகையில் நஷ்டத்துக்கு ஆளான மதுரைக்காரப் புள்ளி இழப்பீட்டை மிரட்டியே வாங்கினாராம். பூஜையில் அதே மதுரைக்காரருடன், சங்க நாயகன் சிரித்துக் கைகோத்து நடந்துவர, ‘என்ன உலகம்டா இது?’ எனத் திரையுலகமே திகைத்துப்போனதாம்.
சைக்கிளிங் நடிகரின் ‘மிருக’ படம் படுதோல்வியைச் சந்தித்த நிலையிலும் ரிலீஸுக்கு முன்னரே பிசினஸை முடித்து பக்கா லாபம் பார்க்கப்பட்டது. படத்துக்கான ஓ.டி.டி உரிமையை ரிலீஸுக்கு முன்பே வாங்கி கையைச் சுட்டுக்கொண்டவர்கள், சைக்கிளிங் நடிகருக்கு இன்னமும் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்களாம். கிட்டத்தட்ட 15 சி வரை இன்னமும் செட்டில் செய்யப்படவில்லையாம். யாரை அணுகி, இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவது எனத் தெரியாமல் திண்டாடுகிறாராம் சைக்கிளிங் நடிகர்.

எவ்விதச் சர்ச்சையிலும் சிக்காத இளம் இயக்குநர் அவர். குளிர்ப் பிரதேச ஷூட்டிங்குக்குப் போனவர் குளிரிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அடித்த கூத்துகள் எக்கச்சக்கமாம். ‘தினம் தினம் கொண்டாட்டம்… குதூகலம்…’ என விளையாடினாராம். ஆனாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் சிங்கமாக கர்ஜித்தாராம். ‘வளர்ச்சி, ஒரு மனிதனை இப்படியெல்லாம் மாற்றுமா?’ என வாயடைத்துக் கிடக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!
சமீபத்தில் மறைந்த இயக்குநரும் நடிகருமான கலகல புள்ளிக்கு, கடைசி நேரக் கடன் நெருக்கடிகள் நிறைய இருந்தனவாம். வேட்டையாடிய படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வாங்கிய கடனை செட்டில் செய்ய முடியாத நெருக்கடி, அவரைக் கடைசி நேரத்தில் படுத்தி எடுத்ததாகச் சொல்கிறார்கள். இறப்புக்குப் பிறகும் அவர் குடும்பத்துக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படாமல் கடன்காரர்களை அமைதிப்படுத்திப் பிரச்னையைப் பேசி முடிக்க, சங்கத்து ஆட்கள் மெனக்கெட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.