
வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம்-2’ பட ஷூட்டிங்கை அடுத்த மாதம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்குள் தன் அடுத்த மூன்று படங்களை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் சூரி.
ஜெயம் ரவி நடிப்பில், ‘அடங்க மறு’ படத்தை இயக்கிய கார்த்திக், அமீரின் சிஷ்யர். படம் மிகப்பெரிய கவனம்பெற்ற நிலையிலும், அடுத்த படத்தை இயக்க ரொம்பவே காலம் எடுத்துக்கொண்டார். விஜய், விஷால், ஆர்யா உள்ளிட்டவர்கள் கார்த்தியிடம் வலிய கதை கேட்ட நிலையிலும், ஏனோ அவரின் பட முயற்சி தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் ஜெயம் ரவியை வைத்து ஒருவழியாக அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் கார்த்தி. கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் சீக்கிரமே ஷூட்டிங் ஸ்டார்ட்!

“இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் சொன்ன ‘தீராக்காதல்’ கதைக்குத் தயாரிப்பாளர் கிடைக்க திருப்பதிக்கு மலையேறி பிரார்த்தனை செய்தேன்” என ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய பேச்சு செம வைரலாகியிருக்கிறது. மலையேறியது மட்டுமல்லாமல், லைகா நிறுவனத்தின் தமிழ்க்குமரனிடம் பேசி படத்தைத் தயாரிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை வைத்து ‘நல்ல கதைகளை சப்போர்ட் செய்ய ஹீரோக்களும் இந்த அளவுக்கு முன்வர வேண்டும்’ எனக் கோடம்பாக்கத்தில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷின் நல்ல மனதுக்கும் இயக்குநர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்.

படத் தொகுப்பாளர் பிரவீன் கே.எல்., தான் பணியாற்றும் படங்கள் மட்டுமல்லாமல் பிற படங்களுக்கும் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்துகொடுக்கிறாராம். நல்ல கதைகளுடன் வரும் புதுமுக இயக்குநர்களுக்குத் தயாரிப்பு நிறுவனங்களைச் சிபாரிசு செய்கிறாராம். படங்கள் குறித்த மதிப்பீடுகளை ஒளிவு மறைவின்றி சொல்லி, படத்தின் மேம்பாட்டுக்கு உதவுகிறாராம். அணுக முடியாத பெரிய ஹீரோக்களுக்கு நல்ல கதைகளைப் பரிந்துரைக்கும் பாலமாகவும் விளங்குகிறார் பிரவீன் கே.எல் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம்-2’ பட ஷூட்டிங்கை அடுத்த மாதம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்குள் தன் அடுத்த மூன்று படங்களை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் சூரி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரெடியாகும் ‘கொட்டுக்காளி’, ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’, துரை செந்தில்குமார் இயக்கும் பெயரிடப்படாத படம் என மூன்றையும் முடித்துவிட்டு முழு அர்ப்பணிப்புடன் வெற்றிமாறன் படத்தில் பங்கேற்க நினைக்கிறாராம் சூரி. இரண்டு படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், துரை செந்தில்குமாரின் படத்தை முடிப்பதில் மட்டும் தாமதமாக வாய்ப்பிருக்கிறதாம். ‘விடுதலை’ படத்தில் நடிக்கிறபோது வேறு படம் குறித்த எண்ணமே தன் மனதில் இருக்கக் கூடாது என நினைக்கிறாராம் சூரி.

உஷ்...
கண்ணாடி இயக்குநர் மிகுந்த மெனக்கெடலுடன் எடுத்த திகில் படம், இன்னமும் போணியாகாமல் பெட்டிக்குள் கிடக்கிறது. இத்தனைக்கும் படம் கண்ணாடி இயக்குநருக்குப் பெரிதும் பிடித்திருக்கிறது. ‘எடுத்த காசைக் கொடுத்தால் போதும்’ என்கிற அளவுக்கு இயக்குநர் இறங்கிவந்தும், படத்தை வாங்காமல் உதட்டைப் பிதுக்குகிறார்களாம் பிசினஸ் புள்ளிகள். கண்ணாடி இயக்குநர் தன் மொத்த ஆதங்கத்தையும் பிரஸ் மீட் வைத்து வெடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்!