அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்: குறிவைக்கப்படும் எஸ்.கே

சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் குபீர் வளர்ச்சி பலருடைய வயிற்றெரிச்சலையும் கூடவே சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவரைக் கொத்திக் குதற, வன்மத்தைப் பாய்ச்ச பெரும் கூட்டம் திடீரெனக் கிளம்பியிருக்கிறது

‘டாக்டர்’, ‘டான்’ என வரிசையாக ஹிட் அடித்த சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்திருக்க வேண்டிய படம் “ப்ரின்ஸ்.’ ஏனோ படம் சறுக்கிவிட்டது. ‘பரவாயில்லை ரகம்’தான் என்றாலும், இந்த அளவுக்குக் கழுவி ஊற்றப்பட்டிருக்கவேண்டிய படம் அல்ல ப்ரின்ஸ்!

‘ப்ரின்ஸ்’ விமர்சனம் தொடங்கி ‘மாவீரன்’ படச் சிக்கல் வரை வரிசையாக சிவகார்த்திகேயனைக் குறிவைத்து ஆன்லைன் பரபரப்புகள் கிளம்பிக்கொண்டேயிருக்கின்றன!

மிஸ்டர் மியாவ்: குறிவைக்கப்படும் எஸ்.கே

ரிலீஸுக்கு முன்னரே வீழ்த்தப்பட வேண்டிய படமாக ஆன்லைன் ஆட்களால் குறிவைக்கப் பட்டதாம் ‘ப்ரின்ஸ்’. “அடுத்த ரஜினி, அடுத்த விஜய் எனத் தன்னை சிவகார்த்திகேயன் எந்த இடத்திலும் சொல்லிக்கொள்ளவில்லை. ‘நான் யார் இடத்துக்கும் ஆசைப்படுகிற ஆள் இல்லை’ என்றே பல பேட்டிகளிலும் சொல்லிவருபவர் சிவா. ஆனால், ‘ப்ரின்ஸ்’ ரிலீஸின்போது ரஜினி, விஜய் இடத்தைப் பிடிக்க ஆசைப்படுகிறவராக சித்திரிக்கப்பட்டார். ‘இந்தப் படத்துக்குப் போயிடாதீங்க…’ எனக் கைகூப்பி விமர்சனம் சொல்கிற அளவுக்குத் திட்டமிட்டு நெகடிவ் கருத்துகள் பரப்பப்பட்டன” என்கிறார்கள்!

‘ப்ரின்ஸ்’ விமர்சனங்களைப் புறந்தள்ளி, ‘மாவீரன்’ ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் தீவிரமானார். ஆனால், ‘அதெப்படி விடுவோம்?’ என அடுத்தகட்ட சர்ச்சையைத் தொடங்கினார்கள் ஆன்லைன் ஆட்கள். சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் அஸ்வின் மடோனுக்கும் ஷூட்டிங்கில் தகராறு, படப்பிடிப்பு நிறுத்தம் எனப் பரபரப்பாகின சமூக வலைதளங்கள். படத்தில் தனக்காக சில சீன்களைச் சேர்க்கச் சொல்லி சிவகார்த்திகேயன் தலையீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. ஆனால் “அவர், இயக்குநர் அஸ்வினுடன் ‘மாவீரன்’ ஷூட்டிங்கை ஜாலியாக நடத்திக்கொண்டிருக்கிறார்” என்கிறார்கள் படத்தரப்பில்!

மிஸ்டர் மியாவ்: குறிவைக்கப்படும் எஸ்.கே

அடுத்த பரபரப்புதான் கொஞ்சம் தீவிரமானது. இதுகாலம் வரை சிவகார்த்திகேயனைச் சம்பந்தப்படுத்தி இத்தகைய சர்ச்சைகள் வந்ததே இல்லை. ‘ப்ரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த உக்ரைன் நாட்டு அழகி மரியாவைக் குறிவைத்த குற்றச்சாட்டு அது. தன்னிடம் எல்லை மீறி நடந்துகொண்டதாக சிவகார்த்திகேயன் மீது மரியா புகார் சொன்னதாகப் பிரபல ஊடகங்களின் இணையதளச் செய்திகள்போல் போலி வடிவமைப்புகள் ரெடி செய்யப்பட்டு முகநூல், ட்விட்டர் தளங்களில் பரப்பப்பட்டன. ஒரு கட்டத்தில் முக்கிய ஊடகங்கள், ‘இது போலியான செய்தி’ என மறுப்புப் போடுகிற அளவுக்கு விவகாரம் தீவிரமானது. ஆனால், “மரியா குறித்த பரபரப்பு துளியளவுகூட உண்மையற்றது. திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அவதூறு அது” என்கிறார்கள் சிவாவுக்கு நெருக்கமானவர்கள்!

“சிவகார்த்திகேயனின் குபீர் வளர்ச்சி பலருடைய வயிற்றெரிச்சலையும் கூடவே சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவரைக் கொத்திக் குதற, வன்மத்தைப் பாய்ச்ச பெரும் கூட்டம் திடீரெனக் கிளம்பியிருக்கிறது. டார்கெட் வைத்து தீர்மானிக்கப்படும் ஆன்லைன் அலப்பறைகளில் சிவகார்த்திகேயனுக்கு எதிரான வியூகங்கள் வரிசைகட்டுகின்றன. வெற்றியைத் தீர்மானிக்கவும், தோல்வியை ஏற்படுத்தவும் வியூகங்கள் வகுக்கும் ஆன்லைன் மாஃபியாக்களின் இப்போதைய அசைன்மென்ட் சிவகார்த்திகேயன்தான். இந்த மாஃபியாக்களுக்கு ‘இரை’ போடும் ஆட்கள் யார் என்பதுதான் மர்மமாக இருக்கிறது” என்கிறார்கள் சினிமா உள்விவரப் புள்ளிகள்!