அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

நிதி அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதி அகர்வால்

தமிழில் வெப் சீரிஸ் இயக்க கௌதம் வாசுதேவ் மேனனைப் போட்டி போட்டு அணுகுகின்றன ஓடிடி தளங்கள்

‘விடுதலை’ படம் இன்னமும் இழுத்துக்கொண்டே போகிறது. 200 நாள்களைக் கடந்து திட்டமிட்ட பட்ஜெட்டைத் தாண்டி படம் நீள்வதால், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சொல்ல முடியாத வருத்தத்தில் இருந்தார். “இரண்டு பாகங்களாக எடுத்துத் தருகிறேன்” என வெற்றிமாறன் உறுதி கொடுக்க, சற்றே நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். இந்நிலையில், ‘இன்னும் 25 நாட்கள் ஷூட்டிங்’ என வெற்றிமாறன் சொல்ல, எல்ரெட் குமாருக்கு மயக்கம் வராத குறையாம். “தனுஷின் தேதி கைவசம் இருக்கிறது. அந்தப் படத்தையும் உங்களுக்கே செய்துகொடுக்கிறேன்” எனச் சொல்லித் தயாரிப்பாளரைச் சமாதானப்படுத்தியிருக்கிறாராம் வெற்றிமாறன்!

மிஸ்டர் மியாவ்

தமிழில் வெப் சீரிஸ் இயக்க கௌதம் வாசுதேவ் மேனனைப் போட்டி போட்டு அணுகுகின்றன ஓடிடி தளங்கள். ‘நான் ரெடி… ஆனால், கதை இல்லையே…’ என வெளிப்படையாகச் சொல்கிறாராம் கௌதம். “இனி கதைகளுக்குத்தான் எதிர்காலம்…. என் கைவசம் கதைகள் இருந்தால், இந்நேரம் ஐந்து நிறுவனங்களில் அக்ரிமென்ட் முடித்திருப்பேன்” எனச் சொல்லும் கௌதம் மேனன், சீக்கிரமே கதை இலாகா ஒன்றை உருவாக்கப்போகிறாராம். நல்ல எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து கதைகளைத் தீர்மானிக்கும் பொறுப்பை அவர்கள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நற்கவனம் பெற்ற ஸ்ருதி பெரியசாமி, சைலன்ட்டாக ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்னமும் பெயரிடப்படாத அந்தப் படத்தில் கிராமத்துப் பெண் பாத்திரமாம். இதற்காக, புதுக்கோட்டை மாவட்ட கிராமப் பகுதிகளுக்குப் போய், அங்கிருக்கும் பெண்களுடன் பழகி, வீட்டு வேலைகள் தொடங்கி வயற்காட்டு வேலைகள் வரை கற்றுவந்தாராம் ஸ்ருதி. “படம் குறித்த அறிவிப்பு வருகிறபோது நான் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என நம்புவீர்கள்” என்கிறார் ஸ்ருதி.

மிஸ்டர் மியாவ்


திருவையாறு வெற்றிலைத் தோட்டப் பின்னணியை முதன்முறையாகக் கதைக் களமாக்கி, ராஜ்கிரண் - அதர்வாவை நடிக்கவைத்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். இந்தப் படத்துக்கு முதலில் ‘பொத்தாரி’ எனப் பெயர் வைத்தார்கள். தஞ்சை மாவட்டத்தின் பிரபல கபடி வீரராக இருந்த பொத்தாரியின் வாழ்க்கைக் கதை என்பதால், அவரைக் கௌரவப்படுத்தும்விதமாக இந்தப் பெயரைச் சூட்டினார் சற்குணம். ஆனால், படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், ‘பட்டத்து அரசன்’ எனத் தலைப்பு வைத்துவிட்டதாம்.

உஷ்!

“கதைத் திருட்டுச் சர்ச்சையில் மட்டும் அல்ல… சொன்ன பட்ஜெட்டைத் தாண்டி செலவை இழுத்துவிடுவதிலும் அந்த இளம் இயக்குநர் பெயர்போனவர்’’ என்கிறார்கள். பாலிவுட் பக்கம் போய் இயக்குகிற படத்திலும், சொன்ன பட்ஜெட்டைத் தாண்டி சகட்டுமேனிக்குச் செலவு பறக்கிறதாம். படத்தின் நாயகன் பஞ்சாயத்து வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்!