
ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தைத் திட்டமிட்ட நாள்களுக்குள்ளேயே முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் நெல்சன்
அஜித் பத்திரிகையாளர்கள் பக்கமே தலைகாட்டாமல் இருக்க, விஜய்யோ தனது ‘வாரிசு’ படத்தின் புரொமோஷனுக்காகப் பத்திரிகையாளர்கள் சிலரைப் பிரத்யேகமாக அழைத்துப் பரிசு கொடுத்ததாகப் பரபரப்பு கிளப்பியிருக்கிறார் நடிகை கஸ்தூரி. தொலைக்காட்சி லைவ் விவாதம் ஒன்றில் அவர், ‘வாரிசு’ பட புரொமோஷனுக்காகப் பத்திரிகையாளர்களுக்கு விஜய் பரிசு கொடுத்தார் என்று புயல் கிளப்ப, விவகாரம் பெரிதாகப் பற்றிக்கொண்டது. அந்த விவாதத்தில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் அதை மறுக்க, அவர்களைப் பேசவிடாமலும் கடுமை காட்டியிருக்கிறார் கஸ்தூரி. இதனால், ஒருபக்கம் மீடியா, இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் என ஆன்லைனில் இருமுனைத் தாக்குதலுக்கு ஆளான கஸ்தூரி. “விஜய் தரப்பினர் வழக்கு போட்டாலும் எதிர்கொள்ளத் தயார்” என்கிறாராம்.

ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தைத் திட்டமிட்ட நாள்களுக்குள்ளேயே முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் நெல்சன். ‘அடுத்து நெல்சன் இயக்கப்போவது விஜய், சிவகார்த்திகேயன் இருவரில் யார்?’ என இப்போதே கேள்விகள் கிளம்பிவிட்டன. ‘பீஸ்ட்’ ஷூட்டிங் நேரத்திலேயே விஜய்க்கு அடுத்த ஒன்லைன் சொல்லி ஓகே வாங்கிவைத்திருந்தார் நெல்சன். ‘பீஸ்ட்’ சரியாகப் போகாத நிலையிலும், நெல்சனுடன் நல்ல தொடர்பில்தான் இருக்கிறார் விஜய். அதேபோல், ‘டாக்டர்’ முடிந்த பிறகு சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு படம் செய்யவும் வாக்கு கொடுத்திருந்தார் நெல்சன். இந்த நிலையில், கமல் கம்பெனியும் நெல்சனைக் கதை சொல்ல அழைத்திருக்கிறதாம்.

இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தை முடித்துவிட்டு, விக்ரமின் மகன் துருவ்வை வைத்து அடுத்த படத்தைத் தொடங்குவார் என்றே பலரும் கணித்திருந்தார்கள். ஆனால், எவரும் யூகிக்காதவிதத்தில் கலையரசனை ஹீரோவாக்கி ‘வாழை’ என்கிற படத்தை இயக்கத் தொடங்கியிருக்கிறார். ஹாட் ஸ்டாருடன் சேர்ந்து இந்தப் படத்தை அவரின் மனைவி திவ்யா பெயரில் தயாரிக்கவும் செய்கிறார். நல்ல கதையம்சம்கொண்ட படங்களை, சிறுமுதலீட்டில் தொடர்ந்து தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார் மாரி.
விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் பாசத்தால், பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘துணிவு’ படத்தின் ஓவர்சீஸ் உரிமையை நல்ல விலைக்கு வாங்கியிருக்கிறது லைகா நிறுவனம். அடுத்த படத்துக்கான சம்பளம், தேதி உள்ளிட்ட எந்த விஷயத்திலும் லைகா கெடுபிடி காட்டவில்லையாம். அட்வான்ஸ் தொகையாகவே பெரிய தொகையை அஜித்துக்குக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கும் லைகா நிறுவனம், அஜித்தின் அடுத்தடுத்த தேதிகளையும் கைப்பற்றிவிட நினைக்கிறதாம்!
உஷ்...
பிரமாண்ட இயக்குநர், கிடப்பில் போட்டிருந்த பார்ட் 2 படத்தை மறுபடியும் தொடங்கியிருக்கிறார். கன்டினியூட்டி தொடங்கி பல விஷயங்களில் சிக்கல் நீடிக்க, கதையையே புதிதாக மாற்றிவிட்டாராம். விளைவு, பேசிய பட்ஜெட் இன்னும் பெரிதாக நீள்கிறதாம். மறுபடியும் பஞ்சாயத்து தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்!