அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
சமந்தா

பேசித் தீர்க்கிற சாதாரண விஷயத்தைத்தான் பெரிசாக்கிட்டாங்க. எல்லாம் சீக்கிரமே சுபமாகும்

‘சர்வைவைர்’ நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியிருக்கிறார் சிருஷ்டி டாங்கே. ‘பழைய வாழ்வுக்குத் திரும்புவது அவ்வளவு எளிதல்ல’ எனக் காரணம் சொன்ன சிருஷ்டி, ‘அங்கு நடக்கும் முழு விஷயங்களையும் என்னால் சொல்ல முடியாது’ என்றும் போகிறபோக்கில் வெடியை வீசிவிட்டுப் போயிருக்கிறார். நிகழ்ச்சியின் முக்கியப் புள்ளி மீது ஏற்கெனவே மீ டூ பிரச்னைகள் கிளம்பியிருக்கும் நிலையில், சிருஷ்டியின் வார்த்தைகளைவைத்துக் கூடுதல் பரபரப்பு கிளம்பிவிட்டது. யூனிட் தரப்பில் விசாரித்தால், ‘ஏ.சி இல்லாமல் அந்தப் பொண்ணால தாக்குப்பிடிக்க முடியலை சார்… மற்றபடி வேறுவிதமான சர்ச்சைகளுக்கு இடமே இல்லை’ என்கிறார்கள். எப்படியோ, நிகழ்ச்சிக்குத் தேவையான பரபரப்பு கிடைத்துவிட்டது.

‘நாக சைதன்யா - சமந்தா திருமண வாழ்க்கையில் விரிசல்’ என திடீர் பரபரப்பு. இருவருமே இதற்கு விளக்கம் கொடுத்தாலும், ‘நெருப்பில்லாமல் புகையுமா?’ என ஊடகங்கள் ஊறுகாய் போடும் வேலைகளைத் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. சமந்தா 50 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்பதாகப் பரபரப்பு கிளம்பிய நிலையில், நாகார்ஜுனா முன்னணிப் பத்திரிகையாளர்கள் சிலரிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார். “பிரச்னை யார் வீட்லதான் நடக்கலை? பேசித் தீர்க்கிற சாதாரண விஷயத்தைத்தான் பெரிசாக்கிட்டாங்க. எல்லாம் சீக்கிரமே சுபமாகும்” என நம்பிக்கையாகச் சொன்னாராம் அவர்.

மிஸ்டர் மியாவ்

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் பொங்கலுக்குத் தள்ளிப்போனதில் இயக்குநர் ஹெச்.வினோத்துக்குக் கடுமையான வருத்தம். ‘‘பிறகு எதற்கு என்னை இவ்வளவு அவசரப்படுத்துனீங்க?’’ என்று தயாரிப்பாளர் போனி கபூரிடம் பொங்கியிருக்கிறார். ‘முடிஞ்சதை விடுங்க. நம் அடுத்த படத்துக்கான கதையை ஆரம்பிங்க…’ என அஜித் சமாதானம் செய்தாராம். இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் ‘வலிமை’தான் என்கிறார்கள்.

‘நாய் சேகர்’ டைட்டில் கிடைக்காமல் போனதில் வடிவேலுக்குக் கடும் வருத்தம். ‘முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் இப்படிப் பண்ணலாமா?’ என வடிவேலுக்கு ஆதரவாகத் திரைத்துறைக்குள்ளும் கடுமையான கண்டனக் குரல்கள். உண்மையில் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் ‘நாய் சேகர்’ படம், அந்தப் பெயரை மையப்படுத்தித்தான் மொத்தமும் எடுக்கப்பட்டிருக்கிறதாம். ‘‘படம் ரிலீஸ் ஆகப்போகிற நேரத்தில் தலைப்பை எப்படி மாற்ற முடியும்?’’ எனக் கேட்கும் ஏஜிஎஸ். நிறுவனம், ‘‘வடிவேலுக்குப் படத்தைப் போட்டுக்காட்டவும் தயார்’’ என்கிறதாம். ‘இனி தலைப்பு கிடைக்க வாய்ப்பில்லை’ என்பதால், வேறு தலைப்பு தேடத் தொடங்கிவிட்டார் வடிவேலு.

இசை இமான் என்றாலே, நிச்சயமாக அந்த ஆல்பத்தில் ஸ்ரேயா கோஷலின் பாடல் ஒன்றாவது இருக்கும். கொரோனா நெருக்கடியாலும், ஸ்ரேயா கோஷலுக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்ததாலும் சில காலம் அவர் குரலைக் கேட்க முடியாமல் போனது. இந்த இடைவெளி நீடிக்கக் கூடாது என நினைத்த ஸ்ரேயா கோஷல், மும்பையிலிருக்கும் தன் வீட்டிலேயே ஸ்டூடியோ அமைத்து, தானே பாட்டுப் பாடி பதிவுசெய்யத் தொடங்கிவிட்டாராம். லேட்டஸ்ட்டாக இமான் இசையில், ‘அண்ணே யாருண்ணே மண்ணுல ஒன்னாட்டம்…’ என்கிற அண்ணன், தங்கை பாசத்துக்கான பாடலைப் பக்காவாகப் பாடி அனுப்பியிருக்கிறாராம் ஸ்ரேயா கோஷல். பாடலை சோனி நிறுவனம் வெளியிடுகிறது.