Published:Updated:

அஜித்துக்கு மூணு, ரஜினியும் விஜய்யும் ஒண்ணு! - யூடியூபில் வியூஸ் அள்ளிய பாடல்கள் #2019Rewind

அதிக வியூஸ்களை அள்ளிய பாடல்கள்
Listicle
அதிக வியூஸ்களை அள்ளிய பாடல்கள்

இந்த ஆண்டு யூடியூபில் அதிக வியூஸ்களை அள்ளிய பாடல்கள்!


வெள்ளித்திரையில் வெளியாகவிருக்கும் படங்களின் போக்கை முதலில் தீர்மானிப்பது யூடியூப்தான். 24 மணி நேரத்தில் இத்தனை வியூஸ்களைக் கடந்திருக்க வேண்டுமென்ற டார்கெட்டோடுதான் டீசரும் டிரெய்லரும் வெளியாகின்றன. அதன் பிறகு பாட்டுடைய லிரிக்கல் வீடியோ, அப்புறம் முழு வீடியோ எனப் பல பிசினஸை முன்னிறுத்திதான் ஒவ்வொரு வீடியோவும் வெளியாகிறது. அப்படி இந்த ஆண்டு (2019) யூடியூபில் அதிக வியூஸ்களை அள்ளிய பாடல்களின் லிஸ்ட் இதோ!


1

01. மரண மாஸ் - 109 மில்லியன் (பேட்ட)

ரஜினியின் இன்ட்ரோ பாடலான `மரண மாஸ்' வீடியோ, 109 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதல் இடத்தில் உள்ளது. காலங்காலமாக ரஜினியின் இன்ட்ரோ என்றாலே எஸ்.பி.பிதான் பாடுவார். ஆனால், `கபாலி', `காலா', `2.0' போன்ற படங்களில் மிஸ்ஸாக, `பேட்ட' படத்தில் அது நிறைவானது. இதைத் தொடர்ந்து `தர்பார்' படத்திலும் `சும்மா கிழி'த்துள்ளார் எஸ்.பி.பி.


2

02. அடிச்சுத்தூக்கு - 67 மில்லியன் (விஸ்வாசம்)

பல வருடங்கள் கழித்து அஜித் வேட்டியை மடித்துக்கட்டி குத்தாட்டம் போட்ட பாடல் `அடிச்சுத்தூக்கு'. விவேகா இப்பாடலுக்கு வரிகள் எழுத, இமான் இசையமைத்துப் பாடியிருந்தார். இதோடு சேர்த்து அஜித்தின் அசத்தலான ஆட்டமும் இப்பாடலுக்கு பலம் சேர்த்தது. 67 மில்லியன் பார்வைகளைக் கடந்து 2-வது இடத்தில் உள்ளது `அடிச்சுத்தூக்கு'. இமான் - அஜித் காம்போவில் வெளிவந்த முதல் படமும் இதுவே.


3

03. அன்பே பேரன்பே - 55 மில்லியன்  (என்.ஜி.கே)

மரண மாஸும் அடிச்சுத்தூக்கும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்க, யுவன் தன்னுடைய மெல்லிசையைக் கொண்டு 3-வது இடத்தைப் பிடித்துக்கொண்டார். `என்.ஜி.கே' படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு உமாதேவி வரிகள் எழுத, சித் ஶ்ரீராமும் ஷ்ரேயா கோஷலும் பாடியிருந்தனர். பலரையும் முணுமுணுக்கச் செய்த இப்பாடல், 36 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்பாடல் தனக்கு மிகவும் ஃபேவரைட் எனப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார் சூர்யா.


4

04. காந்தக்கண்ணழகி - 51 மில்லியன் (நம்ம வீட்டுப் பிள்ளை)

இமான் என்றாலே ஃபேமிலி என்டர்டெயினர் ஸ்பெஷலிஸ்ட் என்றாகிவிட்டது. `விஸ்வாசம்' எனும் ப்ளாக்பஸ்டரைத் தொடர்ந்து `நம்ம வீட்டுப் பிள்ளை'க்கு கம்போஸிங் செய்தார் இமான். கவுண்டமணியின் எபிக் டயலாக்கான, `காந்தக்கண்ணழகி'யை வைத்தே வரிகளைச் செதுக்கினார் சிவகார்த்த்கேயன். அனிருத் - நீத்தி மோகனின் குரல், இப்பாடலின் கொண்டாட்டத்தை மேலும் வலுப்படித்தியது. விஷுவலும் சூப்பராய் வொர்க்அவுட் ஆக, பாடலும் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.


5

05. வானே வானே - 46 மில்லியன் (விஸ்வாசம்)

`அடிச்சுத்தூக்கு' பாடலில் அதிரடி இசையை வழங்கிய இமானின் வாத்தியங்கள், `வானே வானே' பாடலில் இன்னிசையைக் கொடுத்திருந்தது. ஹரிஹரன் - ஷ்ரேயா கோஷலின் குரல், திரையில் அஜித் - நயன்தாராவின் கெமிஸ்ட்ரி எனத் திரைக்கு முன்னும் பின்னும் சிறப்பாக க்ளிக்காக, பாடலும் செம ஹிட்டடித்தது. பலரது ப்ளே லிஸ்டில் ரிப்பீட் மோடில் ஒலித்துக்கொண்டிருக்கும் இப்பாடல் 46 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.


6

06. சிங்கிள் பசங்க - 45 மில்லியன் (நட்பே துணை)

`மீசைய முறுக்கு' ஹிட்டைத் தொடர்ந்து, `நட்பே துணை' எனக் களமிறங்கினார் ஹிப் ஹாப் ஆதி. `சிங்கிள்', `முரட்டு சிங்கிள்' போன்ற வார்த்தைகள் வைரலான சமயத்தில் அதையே தன்னுடைய பாடல் வரிகளுக்குப் பயன்படுத்தி `சிங்கிள் பசங்க' என்று கொடுத்திருந்தார். அறிவு இப்பாடலுக்கு வரிகள் எழுத, கானா உலகம் தரணி பாடியுள்ளார். 45 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கும் இப்பாடல்தான் பல சிங்கிள் பசங்களின் சுப்ரபாதம்.


7

07. யாயும் யாயும் - 41 மில்லியன் (சகா)

இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ மூன்று வருடங்களுக்கு முன்பே வெளியாகி 33 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இவ்வருடம் வெளியாகியிருந்த வீடியோ பாடலானது 41 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. `சகா' படத்தில் சபீர் இசையமைத்திருந்த இப்பாடலை நரேஷ் ஐயர் - ரீடா தியாகராஜன் ஆகியோர் பாடியிருந்தனர்.


8

08. கண்ணம்மா உன்னை- 40 மில்லியன் (இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்)

`புரியாத புதிர்' படத்தைத் தொடர்ந்து, `இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்தின் மூலம் இரண்டாம் முறையாக இணைந்தது ரஞ்ஜித் ஜெயக்கொடி - சாம் சி.எஸ் கூட்டனி. தமிழ் சினிமா பல கண்ணம்மா பாடல்களைக் கண்டிருந்தாலும் இதில் இடம்பெற்றிருந்த கண்ணம்மா பாடல் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. படத்தின் ஜானர் என்னவாக இருந்தாலும் அதில் ஒரு மெலடி பாடலின் மூலம் நம்மைக் கரைத்துவிடுவார் சாம் சிஎஸ்.


9

09. வெறித்தனம் - 38 மில்லியன் (பிகில்)

இந்த வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த படம், 'பிகில்'. விஜய் - அட்லி - ரஹ்மான் - விவேக் காம்போ இரண்டாம் முறையாக `பிகில்' படத்தின் மூலம் கூட்டணியமைத்தது. `வெறித்தனம', `புள்ளிங்கோ' போன்ற டிரெண்டிங் வார்த்தைகளில் உருவானது இப்பாடல். தவிர, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடிய முதல் பாடலும் இதுதான்.


10

10. கண்ணான கண்ணே வீடியோ - 35 மில்லியன் (விஸ்வாசம்)

`வா வா என் தேவதையே', `ஆனந்த யாழை' போன்ற டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் பாடல் வரிசையில் வெளியான பாடல் `கண்ணானே கண்ணே'. `அடிச்சுத்தூக்கு' அடாவடி, `வானே வானே'வில் ரொமான்ஸ், இந்தப் பாட்டில் அப்பா - மகளென்ற அழகிய உறவு என உருக்கியிருப்பார் இமான். படத்தின் மொத்த உயிரும் க்ளைமாக்ஸ்தான். அதில் ஒலித்த இப்பாடலைக் கேட்டுப் பல தகப்பன்களும் குட்டிக் குட்டி தேவதைகளும் கதறியழுதுக் கட்டிப் பிடித்துக்கொண்டனர்.


11

இந்தப் பாடல்கள் தவிர, `வேங்க மவன்', `பைசா நோட்டு' ஆகிய பாடல்கள் 34 மில்லியன் வியூஸ்களையும், `சிங்கப்பெண்ணே', `தாரமே தாரமே', `எங்க அண்ணன்', `ஊலாலா', `டங்கா டங்கா' உள்ளிட்ட பாடல்கள் 29 மில்லியன் வியூஸ்களையும் கடந்துள்ளன. `ஹாய் சொன்னா போதும்', `வேட்டிக்கட்டு' ஆகிய இரண்டு பாடல்கள் 27 மில்லியன், `பிகிலு பிகிலுமா' 26 மில்லியன், `டக்குனு டக்கு'னு 25 மில்லியன் வியூஸ்களையும் கடந்துள்ளன.