சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: பாரம்

பாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்

திரைப்படமாகவும் மாறாமல் ஆவணப்படமாகவும் மாறாமல் கலைநேர்த்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் பின்தங்கி, பார்வையாளர்களுக்கு பாரமாக மாறியிருக்கிறது.

வயதான பெற்றோர்களை பாரமாக நினைக்கும் சில குடும்பங்கள் அவர்கள் இருப்பை அழிக்கும் கொடூரங்கள்தான் ‘பாரம்.’

வாட்ச்மேன் கருப்பசாமி (ராஜு) வயதானாலும் சொந்தக் காலில் நிற்க நினைப்பவர். நகரத்திலிருக்கும் தங்கை வீட்டில் வசிக்கிறார். ஒரு விபத்தில் கருப்பசாமியின் இடுப்பில் முறிவு ஏற்பட அறுவைசிகிச்சை செய்யவேண்டிய சூழல். செலவு செய்யத் தயாரில்லாத, கிராமத்தி லிருக்கும் அவர் மகன் (சுப.முத்துக்குமார்) வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுகிறார். ஊர்ப்பேச்சுக்கு பயந்து அப்பாவை அழைத்துவந்த மகன் தந்தையை பாரமாக நினைக்கிறார். அதனால் அவர் எடுக்கும் ஒரு விபரீத முடிவுதான் கதை.

பல ஆண்டுகளாகச் சில கிராமங்களில் வழக்கத்திலிருக்கும் ‘தலைக்கூத்தல்’ என்ற கொடுமையை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் பிரியா கிருஷ்ணசுவாமி. இந்தச் சமூகம் வெட்கப்படவேண்டிய, உணர்ந்து திருந்தவேண்டிய ஒரு முக்கியமான பிரச்னையைப் பேசியிருக்கிறார்.

பாரம்
பாரம்

முதியோர்களின் துயரத்தையும், தங்கள் கடமைகளைக் கைகழுவும் அவர்கள் குழந்தைகளின் பொறுப்பற்றதனமும்தான் கதைக்களம். அதை வன்முறை பொதிந்த ஒரு சமூகப்பழக்கத்தின் ஊடாகச் சொல்ல நினைத்தது வரவேற்கத்தக்கது. ஆனால் எந்த ஜீவனும் இல்லாத காட்சிகள், உணர்வுகளைப் பார்வையாளர்களுக்கு எந்த விதத்திலும் கடத்தாத திரைக்கதை, பெரும்பாலான நடிகர்களின் முதிர்ச்சியற்ற நடிப்பு, முறையற்ற படத்தொகுப்பு, எப்போதாவது ஒலிக்கும் பொருந்தாத பின்னணி இசை என, கலையம்சத்திலும் தொழில்நுட்பத்திலும் கால்கிணறு தாண்டாத முயற்சியாகவே இருக்கிறது படம்.

ஆழமான காட்சிகள் இல்லாமல், மூன்றாந்தர நாடகபாணியிலான விஷ ஊசி சதிக்காட்சிகள் ஆவணப்படம் என்னும் அம்சத்தைக்கூட நெருங்கவிடாமல் படத்தைக் கீழிறக்குகின்றன. ‘கலைப்படம்’ என்ற பாவனைக்காக, கருப்பசாமியை மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் நான்கைந்து டெம்போவில் வைத்துக்கொண்டு செல்வது, கருப்பசாமியின் மகன், வீரா கதாபாத்திரம் பைக்கில் செல்லும் நீளமான காட்சி ஆகியவை அயர்ச்சியூட்டு கின்றன.

பாரம்
பாரம்

கருப்பசாமி தன் தங்கை வீட்டில் தங்கியிருந்து வேலை செய்கிறாரா, விருந்தாளியாக வருகிறாரா என்று முதல் காட்சியில் தொடங்கும் தெளிவற்ற சித்திரிப்பு படம் முழுவதும் தொடர்கிறது.

குறைந்தது நான்கு பேராவது கூட்டு முயற்சியாகச் செய்யும் கொலைக்குக் கிடைக்கும் பணம் வெறும் மூவாயிரம் ரூபாய்தான். அப்படியொன்றும் பணம்கொழிக்கும் தொழில் இல்லையென்னும்போது ஏன் இந்த முதியோர் கொலைமுயற்சி என்பது பற்றிய எந்தத் தகவல்களும் விரிவாக இல்லை. கொலை செய்பவரை மாற்றுத்திறனாளியாகக் காட்டுவது இயக்குநரின் பழைமைவாத மனநிலையையே காட்டுகிறது.

திரைப்படமாகவும் மாறாமல் ஆவணப்படமாகவும் மாறாமல் கலைநேர்த்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் பின்தங்கி, பார்வையாளர்களுக்கு பாரமாக மாறியிருக்கிறது.