சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம்: சாம்பியன்

சாம்பியன்
பிரீமியம் ஸ்டோரி
News
சாம்பியன்

நாயகனாக அறிமுக நடிகர் விஸ்வா; கால்பந்து வீரனாக வாழ்ந்திருக்கிறார்.

ன் மகன், இந்தியக் கால்பந்து அணியில் விளையாடவேண்டுமெனக் கனவுகாணும் தந்தை. தன் தந்தையின் கனவை நிஜமாக்கப் போராடும் மகன். போராட்டத்திற்குக் குறுக்கே வரும் சில தடைகள். அந்தத் தடைகளை அவன் தகர்த்தெறிகிறானா அல்லது அவனைத் தடைகள் துடைத்தெறிகிறதா என்பதே `சாம்பியன்’ படத்தின் கதை.

சினிமா விமர்சனம்: சாம்பியன்

வியாசர்பாடிவாசி ஜோன்ஸ் திரவியத்துக்குக் கால்பந்துதான் எல்லாம். எங்கே தன் கணவன் கோபி திரவியத்தைப்போல் கால்பந்து விளையாட்டால் வாழ்க்கையை இழந்து விடுவானோ என பயப்படுகிறார் அம்மா. அதே ஏரியாவில் அரசியல்வாதியாக இருக்கும் தனசேகர் தன் சுயநலத்திற்காக, துடிப்பாகக் கால்பந்து விளையாடும் இளைஞர்களை வன்முறைக்குள் இழுத்துவிடுகிறான். ஒருநாள், கோபி திரவியத்தின் மரணத்திற்குப் பின்னாலுள்ள ரகசியம் ஜோன்ஸுக்குத் தெரியவருகிறது. அக்கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமெனத் துடிக்கிறான். கால்பந்தைத் தூக்கியெறிந்துவிட்டு, கையில் கத்தியை எடுக்கிறான். எந்தப் பாதையில் சென்றான் ‘சாம்பியன்’ என்பதை மீதிக்கதை சொல்கிறது.

நாயகனாக அறிமுக நடிகர் விஸ்வா; கால்பந்து வீரனாக வாழ்ந்திருக்கிறார். ஜோன்ஸின் அப்பா கோபி திரவியமாக மனோஜ்; நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். தோற்றத்தில் இருவருக்குமான ஒற்றுமை, கூடுதல் பலம். தனசேகராக நடித்திருக்கும் ஸ்டன் சிவாவும் தாறுமாறு. பயிற்சியாளராக நரேன், ஜோன்ஸின் அம்மாவாக வாசவி, கோபியின் நண்பனாக வினோத் என நடிகர்கள், இப்படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

Champion
Champion

நாயகன் கதாபாத்திரத்தை கத்தியைத் தூக்க விட்டு ஹீரோயிசம் காட்டாமல் தவிர்த்ததற்கும், கடைசியாகச் சொன்ன சமர்ப்பணத்திற்கும் இயக்குநர் சுசீந்திரனுக்குப் பாராட்டுகள். டெம்ப்ளேட் கதை, பெரிய சுவாரஸ்யமில்லாத திரைக்கதை, யூகித்துவிடக்கூடிய திருப்புமுனைகள், உயிர்ப்பில்லாத வசனங்கள் என எழுத்தில் படம் பலவீனமாக இருந்தாலும், நடிகர்களின் நடிப்பும் சில காட்சிகளிலுள்ள நேர்த்தியும் படத்திற்குப் பெரும்பலம் சேர்க்கின்றன.

சுஜீத் சாரங்கின் கேமரா, மீண்டும் வடசென்னையைப் பழுப்பு நிறத்திலேயே படம் பிடித்திருக்கிறது. கால்பந்து விளையாட்டு மற்றும் சண்டைக் காட்சிகளில் வித்தை காட்டியிருக்கிறது.

சினிமா விமர்சனம்: சாம்பியன்

அரொல் கொரோலியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பெரிதாய் மனதில் நிற்கவில்லை. தியாகுவின் படத்தொகுப்பு கொஞ்சம் வேகத்தைக் கூட்டியிருக்கலாம்.

திரைக்கதையில் இன்னும் அழுத்தமாய்க் கால்பதித்து ஓடியிருந்தால், நிச்சயம் பதக்கம் வென்றிருப்பான் இந்த `சாம்பியன்.’