Published:Updated:

சினிமா விமர்சனம்: தாராள பிரபு

தான்யா ஹோப், ஹரிஷ் கல்யாண்
பிரீமியம் ஸ்டோரி
News
தான்யா ஹோப், ஹரிஷ் கல்யாண்

தாராள பிரபுவாக ஹரிஷ் கல்யாண் அட்டகாசமாகப் பொருந்திப்போகிறார்.

எக்ஸ்ட்ரா திறமைகள்கொண்ட விந்தணு கொடையாளருக்கும் ஒரு மருத்துவருக்கும் இடையிலான சிலபல சம்பவங்களே ‘தாராள பிரபு!’

குழந்தை வரம் வேண்டும் மக்கள் அனைவரும் நம்பிவரும் பாரம்பர்ய மருத்துவமனை கண்ணதாசனுடையது. பொய்களையும் புரட்டுகளையும் வைத்து கல்லாகட்டும் கண்ணதாசனிடம் இல்லாத ஒன்றே ஒன்று, உயர்தரமான விந்தணு கொடையாளர் மட்டும்தான். கண்ணதாசனுக்கு கர்ணனாக வருகிறார் வேலை தேடி அலையும் பிரபு கோவிந்த். கட்டுக்கட்டாகப் பணம், தாராள மனம் என எல்லாம் சுபமாகச் சென்று கொண்டிருக்கும் தொழிலில் காதல் குறுக்கிடுகிறது. காதல் விருத்தியடைய, தொழிலுக்கு குட்பை சொல்கிறார் பிரபு. அடுத்தடுத்த பிரச்னைகள், அவை தரும் துன்பங்கள் என ரைட்டில் சென்று, லெஃப்ட்டில் திரும்பி யு டர்ன் போட்டு முடிகிறது ‘தாராள பிரபு.’

பேபி நிகிதா
க்யூட் நடிப்பால் ஈர்க்கிறார்
தாராள பிரபு
தாராள பிரபு

தாராள பிரபுவாக ஹரிஷ் கல்யாண் அட்டகாசமாகப் பொருந்திப்போகிறார். கோபக் காட்சிகளில் கிளாப்ஸ் அள்ளும் ஹரிஷுக்கு, எமோஷனல் காட்சிகளில்தான் கொஞ்சம் தொண்டையைக் கவ்வுகிறது. காதல் ஜோடி நிதி மந்தனாவாக தான்யா ஹோப். இன்னும் கொஞ்சம் நம்பிக்கை அளித்திருக்கலாம். படத்தின் இரண்டாவது ஹீரோ, வில்லன், காமெடியன் எல்லாம் விவேக்தான். சில இடங்களில் 18+ மீட்டர் தாண்டினாலும், நக்கல் மேனரிசங்களில் புகுந்து விளையாடுகிறார். சில காட்சிகளே வந்தாலும் க்யூட் நடிப்பால் ஈர்க்கிறார் பேபி நிகிதா. அனுபமா, சச்சு, ஆர்.எஸ்.சிவாஜி, நமோ நாராயணா, மதுவந்தினி என நீளும் நடிகர்கள் பட்டியலில் சிவாஜியும் சச்சுவும் மட்டும் ஓகே.

விவேக்தான்
படத்தின் இரண்டாவது ஹீரோ

பாலிவுட்டின் ஹாட் ஹிட் பிரியாணி ‘விக்கி டோனர்’ படத்தை தமிழ் பேச வைக்கிறேன் என `குஸ்கா’ வாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப சிலவற்றை மாற்றலாம். ஆனால், படத்தின் ஆன்மாவான எமோஷனல் காட்சிகளையே காவு தந்தால் எப்படி ப்ரோ?

தான்யா ஹோப், ஹரிஷ் கல்யாண்
தான்யா ஹோப், ஹரிஷ் கல்யாண்

படத்தின் நீளமும் அதிகம். படத்தொகுப்பாளர் கிருபாகரன் சற்றுக் குறைத்திருக்கலாம். டஜன் கணக்கில் வரும் படத்தின் இசையமைப்பாளர்கள் பட்டியலில், அனிருத்தின் ‘தாராள பிரபு’ பாடல் மட்டும் ஆட்டம்போட வைக்கிறது. பின்னணி இசையும் சுமார்.

சொல்ல வந்த விஷயத்தை நீட்டி முழக்காமல் சொல்லியிருந்தால் தாராளமாக ரசித்திருக்கலாம்.