சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: காட் ஃபாதர்

லால்
பிரீமியம் ஸ்டோரி
News
லால்

எமோஷனல் கதை, திரில்லர் திரைக்கதை என திரைக்குள் இழுத்துவிடுகிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர்.

சிங்கத்தின் வேட்டையிலிருந்து தன் குட்டியைக் காக்க, ஆண் மான் ஒன்று போராடும் கதையே `காட்ஃபாதர்.’ சிங்கமாக மருதுசிங்கம், மானாக அதியமான்!

சினிமா விமர்சனம்: காட் ஃபாதர்

நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தலைவரான அதியமான் தீயவற்றைக் கண்டால் ஒதுங்கி வாழ்வதே பெருவாழ்வு என வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே ஊரின் பெரிய தாதா மருது சிங்கம், தான் வாழ, பல தீமைகளைச் செய்தவன். அவனின் ஒரே மகன், மருத்துவ மனையில் உயிருக்குப் போராட, அவன் குணமாக வேண்டுமென்றால் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதற்கு அதே வயதில், அதே ரத்த வகைகொண்ட ஒரு சிறுவன் வேண்டும் என மருத்துவர் கொளுத்திப்போட, தேடியதில் அதியமானின் மகனிடம் அத்தனை மருத்துவப் பொருத்தமும் பொருந்திப்போக, வேட்டைக்குக் கிளம்புகிறார்கள் மருதுசிங்கமும் அவன் ஆட்களும். அவர்களிடமிருந்து தன் மகனை அதியமான் காப்பாற்றினாரா, இல்லையா என்பதை, அபார்ட்மென்ட் ஒன்றை அடர் வனமாக்கிக் கதை சொல்லியிருக்கிறார்கள்.

அதியமானாக நட்டி. பரபரவென நகரும் படத்தில் அங்கங்கே நடிப்பதற்கான இடமும் கிடைக்கிறது. அதை நிரப்ப, முடிந்த அளவு முயன்றிருக்கிறார். அதியனின் மனைவியாக அனன்யா, முதற்பாதி முழுக்க மென்புன்னகை மாறாமல் வலம் வருபவர், இரண்டாம் பாதியில் இருந்துதான் நடிக்கத் தொடங்கு கிறார். அதியனின் மகன் அர்ஜுனாக, அஸ்வந்த் - டீலக்ஸ் லெவல் நடிப்பு. மருதுசிங்கமாக லால், அத்தனை ஆண்டுக்கால அனுபவம், அசால்டாக வந்து மிரட்டிவிட்டுப் போகிறார். மற்ற சின்னஞ்சிறு வேடங்களில் நடித்தவர்கள் அனைவருமே தம் பங்கைச் சிறப்பாகச் செய்துமுடித்திருக்கிறார்கள்.

காட் ஃபாதர்
காட் ஃபாதர்

எமோஷனல் கதை, திரில்லர் திரைக்கதை என திரைக்குள் இழுத்துவிடுகிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர். ஒரே அபார்ட்மென்ட்டில் நடக்கும் கதை என்றாலும் அதிலிருக்கும் சாத்தியங்கள் அத்தனையையும் பயன்படுத்தியது புத்திசாலித்தனம். எதிர்வீட்டில் ஒரு பாத்திரம் கீழே விழுந்தாலே சத்தம் கேட்கிறதென்றால் அவர்கள் பேசுவதெல்லாம் எப்படிக் கேட்காமல் போகும்? கமர்ஷியல் பில்டிங் இப்படியா கட்டப்பட்டிருக்கும்? ஒரு போலீஸைத் தவிர வேறு யாரிடமும் அங்கு நடக்கும் பிரச்னையைப் பகிரமாட்டார்களா எனத் தள்ளி நின்று கேட்பதென்றால் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். ஆனால், திரைக்கதை அத்தனை லாஜிக்குகளையும் மறைத்து எமோஷனல் முகம் காட்டுகிறது.

விபின் ஆர் மற்றும் நவீன் ரவீந்திரனின் பின்னணி இசையும் புவன் ஸ்ரீனிவாசனின் எடிட்டிங்கும் திரில்லர் தோரணையைத் தக்க வைக்க உதவியிருக்கின்றன. அருண் சங்கர் துரையின் கலை இயக்கம், பாராட்டுக்குரியது. சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு யதார்த்தம். திரைக்கதையின் விறுவிறுப்பும், திடீர்த் திருப்பங்களில் உண்டாகும் படபடப்புமே `காட்ஃபாதர்’ எனும் அபார்ட்மென்ட்டைத் தாங்கி நிற்கும் வலுவான பேஸ்மென்ட்.