சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: கன்னி மாடம்

கன்னி மாடம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்னி மாடம்

நடிகர் போஸ் வெங்கட்தான் படத்தின் இயக்குநர்.

சாதித்திமிரையும், அதனால் ஏற்படும் ரணங்களையும், அதற்கான காரணங்களையும் சொல்லும் படமே ‘கன்னி மாடம்!’

காதல் பிரச்னையால் ஊரை விட்டுச் சென்னைக்கு ஓடிவரும் விஷ்ணுவும் சாயாதேவியும் ஆட்டோ ஓட்டுநரான நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் வீட்டுக்கு அருகில் குடிவருகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் விஷ்ணு பலியாகிவிட, ஸ்ரீராம் சாயாதேவிக்குக் கணவனாக நடிக்க நேர்கிறது. ஸ்ரீராம் ஏன் அப்படி நடிக்கிறார் என்பதும், அதன் பின்விளைவுகளுமே கதை.

நடிகர் போஸ் வெங்கட்தான் படத்தின் இயக்குநர். முதல் படத்திலேயே ஆணவக்கொலை என்கிற அழுத்தமான விஷயத்தைக் கையிலெடுத்து மிகவும் கவனமாகவும் கதை சொல்லியிருக்கிறார். இந்தியச் சமூகத்தின் கொடூரமான யதார்த்தமான சாதிவெறியைக் கதைக்களமாக்கி, காட்சிப்படுத்திய இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

சினிமா விமர்சனம்: கன்னி மாடம்
சினிமா விமர்சனம்: கன்னி மாடம்

ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ் என்று யார் நடிப்பிலும் குறையில்லை. கதாநாயகியாக நடித்திருக்கும் சாயா தேவிக்கு வசனங்கள் குறைவு என்றாலும் முகபாவனையிலேயே உணர்வுகளைக் கடத்துகிறார். நடிகனாகும் ஆசையில் சுற்றும் சூப்பர்குட் சுப்பிரமணி, ஒரு தலைக்காதலியாக வரும் வலீனா ப்ரின்ஸ், ஹவுஸ் ஓனராக நடித்திருக்கும் பிரியங்கா ரோபோ சங்கர் என மூவருமே கவனிக்க வைக்கிறார்கள்.

பின்னணி இசையும் பாடல்களும் ஓகே ரகம்தான். பாடல்கள் படத்தின் வேகத்தை சோதிக்கின்றன. இனியன் ஜெ. ஹாரிஸின் கேமரா சின்னச் சின்னத் தெருக்களில் புகுந்து நிறைவாய்ப் பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் ரிஷால் ஜெய்னி இன்னும் மெனக்கெட்டு நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

சினிமா விமர்சனம்: கன்னி மாடம்

ஆணவக்கொலைதான் களம் என்றான பிறகு அதையொட்டி மட்டும் திரைக் கதையை நேர்த்தியாகச் செதுக்கியிருக்கலாம். தேவை யில்லாமல் ஒருதலைக்காதல், வில்லனாக ஒரு கதாபாத்திரம் என்று பார்வையாளர்களை சஸ்பென்ஸில் வைப்பதற் கென்றே திணிக்கப் பட்ட சில காட்சிகள் படத்தின் நோக்கத்தை நோகடிக்கின்றன. நேரத்தைக் குறைத்து, திரைக்கதையை நறுக்கியிருந்தால் ‘கன்னி மாடம்’ இன்னும் முழுமையாகி யிருக்கும்.