சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: மாஃபியா

அருண் விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண் விஜய்

மிடுக்கான காவல்துறை அதிகாரியாக உடல்மொழியில் அசத்துகிறார் அருண் விஜய்.

மிகப்பழைய திராட்சை ரசத்தை செம ஸ்டைலான பாட்டிலில் அடைத்து லேபிள் ஒட்டி பார்வைக்கு வைப் பார்களே... கார்த்திக் நரேனின் `மாஃபியா’வும் அப்படித்தான்!

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துறுதுறு அதிகாரி அருண் விஜய். தன் டீம்மேட் களான பிரியா பவானிசங்கர், பாலா ஹசன் ஆகியோரோடு இணைந்து சென்னையை போதைப்பொருள் இல்லாத நகரமாக மாற்ற மெனக்கெடுகிறார். ஆனாலும் புற்றீசல் போல டீலர்கள் முளைத்துக்கொண்டே இருக்க, இவர்களின் லீடரைப் பிடித்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும் என உணர்கிறார். இந்த மாபெரும் நகரத்திற்குள் தொழிலதிபர் போர்வையில் ஒளிந்திருக்கும் வில்லன் பிரசன்னாவை அவர் கண்டுபிடிப்பதும் அதன்பின் நிகழ்பவையும்தான் கதை.

மிடுக்கான காவல்துறை அதிகாரியாக உடல்மொழியில் அசத்துகிறார் அருண் விஜய். ஆனால் கதையில் அவருக்கான ‘வாவ்’ தருணங்கள் இல்லாமல் வெறும் பில்டப்கள் மட்டுமே இருப்பதுதான் பெரிய பிரச்னை. ஹீரோவின் ஆக்‌ஷனைப் பார்த்து ரசிக்கும் க்ளிஷே ஹீரோயினாக பிரியா பவானிசங்கர்! செம ஸ்டைலான அதே சமயம் கேம்பிளான் கொஞ்சமும் இல்லாத டீம் கேப்டனைப்போல வந்துபோகிறார் பிரசன்னா.

அருண் விஜய்
அருண் விஜய்

கோகுல் பினோயின் ஒளிப்பதிவு வித்தையும் ஜேக்ஸ் பிஜோயின் இசையும் மட்டுமே படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. ஆனால் கெத்தாக இருக்கவேண்டும் என மெனக்கெட்டு எடுக்கப்பட்டுள்ள எக்கச்சக்க ஸ்லோ மோஷன் காட்சிகள் சலிப்பையே தருகின்றன.

விறுவிறு ஆக்‌ஷன் த்ரில்லருக்கான வேகமும் இல்லை. ஸ்லோ பர்னர் வகையறாவுக்கான கனமான கருவும் இல்லை. இலக்கின்றி அலையும் திரைக்கதை, இடையிடையே சில ஹாலிவுட் படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் என மாஃபியா ஏகத்துக்கும் தடுமாறு கிறது. படம் பார்ப்ப வர்களே அடுத்து இதுதான் என யூகித்துவிடும் பலவீன மான கதையில் ‘இதுக்கு ஏதோ மோட்டிவ் இருக்கு!’, ‘இப்போ என்ன பண்ணப்போற?’ என வசனங்களை வைத்து ஒப்பேற்றியிருப்பது எரிச்சல்!

மாஃபியா
மாஃபியா

சீனியர் அதிகாரி இறந்துபோகிறார். கொலை நடந்த இடத்திற்கு வரும் அருண்விஜய் அண்ட் கோ முகங்களில் துளியும் உணர்ச்சிகள் இல்லை. இப்படி ஹீரோயிசம், வில்லனிசம் தொடங்கி காதல், பதற்றம் என எந்தவித உணர்ச்சிகளையும் கடத்தாத பிளாஸ்டிக்தன்மையே படம் நெடுக இருக்கிறது. கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டை இன்டர்வெல் ட்விஸ்ட்டாகவைத்துப் படத்தைக் கொண்டுபோயிருந்தால் முழுமையான ஆக்‌ஷன் படமாகியிருக்கும். ஸ்டைலான மேக்கிங் இல்லை... கன்டென்ட்தான் முக்கியம் கார்த்திக்!

பில்ட்அப்களை விட்டுவிட்டு கதைக்கும் திரைக்கதைக்கும் உழைத்திருந்தால் ‘மாஃபியா’ நிச்சயம் மிரட்டியிருக்கும்.