
இரவு ஒரு பழைய போன் வழியே இறந்தவர்களின் ஆவியோடு பேசும் மீடியம்.
அமானுஷ்யத்திற்கும் மனோதத்து வத்திற்கும் இடையில் ஓடும் ஒரு இருள்கோடுதான் இந்த ‘அந்தகாரம்.’
பகலில் நூலகத்தில் பணிபுரிகிறார் விழித்திறன் சவால்கொண்ட வினோத். இரவு ஒரு பழைய போன் வழியே இறந்தவர்களின் ஆவியோடு பேசும் மீடியம். நகரத்தின் மற்றொரு இடுக்கில் ஒருவித குற்றவுணர்ச்சியோடே காலத்தைக் கடத்தும் கிரிக்கெட் பயிற்சியாளராக அர்ஜுன் தாஸ். இன்னொருபக்கம் ஒரு அசம்பாவிதத்தில் குடும்பத்தை இழந்து தனிமையில் வாடும் மனநல மருத்துவர் குமார் நடராஜன். வெளிப்பார்வைக்கு சற்றும் தொடர் பில்லாத இந்த மூவரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய சரடு பிணைக்கிறது. அதனால் ஏற்படும் திக்திக் தருணங்களை இருட்டின் அதிகாரத்தோடு சொல்லிச் செல்கிறார் அறிமுக இயக்குநர் விக்னாராஜன்.

‘காசுன்னு சொல்லி வெறும் பேப்பரைத் தருவாங்க’, `நான் பார்க்காத இருட்டா?’ எனக் கதைக்குத் தேவையான உணர்ச்சிகளைத் தன் தேர்ந்த உடல் மொழியாலும் குரலாலும் தெளித்தபடி கதை முழுக்கப் பயணிக்கிறார் வினோத். கோபம், ஆற்றாமை, குற்றவுணர்ச்சி, கேள்வி, பயம் என ஏகப்பட்ட உணர்ச்சிகளைக் கொட்ட வேண்டிய கதாபாத்திரம் அர்ஜுன் தாஸுக்கு. எதிலும் குறைவைக்காத நேர்த்தியான நடிப்பு. அமைதியாய் மிரட்டும் டாக்டர் வேடத்தில் அப்படியே பொருந்திப்போகிறார் குமார் நடராஜன். இவர்கள் மூவருக்குமான கதையில் கிடைத்த இடங்களிலெல்லாம் ஸ்கோர் செய்கிறார் பூஜா.
த்ரில்லர் படங்களின் முக்கியத் தேவையான இசையையும் ஒளிப்பதிவையும் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு விளையாடித் தீர்க்கிறார்கள் பிரதீப் குமாரும் எட்வின் சாகேயும். வெளிச்சம் புகா இடங்களையும் எட்வினின் கேமரா எட்டிப் பிடிக்க, அந்த இருளின் கனத்தை நெஞ்சில் ஏற்றுகிறது பிரதீப்பின் இசை. நான் லீனியர் திரைக்கதையைத் தெளிவாகக் கோத்ததற்காக எடிட்டர் சத்யராஜ் நடராஜனைப் பாராட்டலாம்.

சிக்கலான கதைசொல்லல், அதற்குள் ஒளிந்திருக்கும் ட்விஸ்டுகள், ஒவ்வொன்றையும் காரணத்தோடு அவிழ்க்கும் திரைக்கதை என முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைக்கிறார் விக்னாராஜன். கேமராக் கோணங்கள் வழியே திடுக்கிட வைப்பது, பின்னணி இசை மூலம் திகிலூட்டுவது போன்ற க்ளிஷேக்களெல்லாம் இல்லாமல் கதையின் போக்கில் பயமுறுத்திச் செல்லும் படங்கள் தமிழில் மிகக்குறைவு. அந்த வகையில் ‘அந்தகாரம்’ ஒரு நல்ல முயற்சி.
ஆனால் ஸ்லோ பர்னர் வகை த்ரில்லர் அநியாயத்திற்கு ஸ்லோ பர்னர் ஆகி நம் பொறுமையை சோதிப்பதுதான் படத்தின் பெரிய குறை. படம் இரண்டு மணிநேரத்தைத் தாண்டும் போதே புள்ளிகளை இணைத்துக் கோடு போட்டுவிடமுடிகிறது. அதற்கு மேலும் ஒரு மணிநேரம் ஏன்?
நீளும் இரவுகளைக் குறைத்து சட்டென முடிவை நோக்கி நகர்ந்திருந்தால் இன்னும் பலமாய் மிரட்டியிருக்கும் இந்த ‘அந்தகாரம்.’