
பெரும்பான்மை சாமானியர்களுக்கு அங்கு நிகழும் அத்தனை துன்பங்களும் நடக்க, பிரபுவால் மீள முடிந்ததா என்பதே கதை.
‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்னும் வாக்கியத்தில் இருக்கும் நகைமுரணைப் பற்றிப் பேசுகிறது ‘காவல்துறை உங்கள் நண்பன்.’
காதலித்து, குடும்பத்தை எதிர்த்துத் தனியாக வாழ்ந்துவருகிறார்கள் பிரபுவும் இந்துவும். வெளிநாட்டு வேலை கிடைக்கும் வரை பிரபு உணவு டெலிவரி செய்துவர, ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் இந்து. எல்லாம் சுபமாகச் சென்றுகொண்டிருக்கும் சூழலில் நடக்கும் அசம்பாவிதங்களால் பிரபு காவல் நிலையப் படி ஏறுகிறார். பெரும்பான்மை சாமானியர்களுக்கு அங்கு நிகழும் அத்தனை துன்பங்களும் நடக்க, பிரபுவால் மீள முடிந்ததா என்பதே கதை.

துணிச்சலும் கோபமும் நிறைந்த இளைஞன் பிரபுவாய் சுரேஷ் ரவி. பாசத் துடனும், பதற்றத்துடனும் நிர்கதியாய் நிற்கும் இந்துவாக ரவீணா ரவி. காவல்துறை ஆய்வாளர் கண்ணபிரானாக மைம் கோபி. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஒரே நல்ல போலீஸ் முருகேசனாக ‘சூப்பர் குட்’ சுப்ரமணி. அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை, அதன் பெயருக்கு மாறாக எப்படி அச்சுறுத்தும் வன்முறை இயந்திரமாக இருக்கிறது என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் RDM. ‘நாங்க பப்ளிக் சர்வன்ட்தான். ஆனா, பப்ளிக் தான் எங்களுக்கு சர்வன்ட்’ என S.ஞானகரவேல் எழுதியிருக்கும் வசனம் ஒரு சோற்றுப் பதம். காவல் நிலையம், பைக் ஷெட் போன்றவற்றில் தெரிகிறது கலை இயக்குநர் ராஜேஷின் உழைப்பு.

சுரேஷ் ரவி போலீஸிடம் மாட்டும் வரை உள்ள அறிமுகக் காட்சிகள் ஈர்க்கவில்லை. சாத்தான்குளக் கொடூரம் நடந்திருக்கும் சமகாலத்தில் காவல்துறை வன்முறைக் காட்சிகள் பார்வையாளர்களிடம் பதற்றத்தையும் கோபத்தையும் உருவாக்கு கின்றன. ஆனால் முதல்முறை காவல் துறையினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கும் நாயகன் ஏன் மீண்டும் மீண்டும் தானாகவே அந்த வதைக்கூடத்தில் போய் மாட்டிக்கொள்கிறார், வழக்கறிஞர், ஊடகம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை, சித்ரவதை வீடியோவை இன்ஸ்பெக்டரே வெளியிடுவாரா, அவர்மீது ஏன் துறைரீதியான விசாரணை நடத்தப்படவில்லை, ஊடகங்களும் சமூக ஊடகங்களும் அந்தப் பிரச்னையைக் கைவிட்டுவிட்டனவா என்று ஏராளமான கேள்விகள் எழுகின்றன.
ஒரு மனித உரிமைப்பிரச்னையைச் சொல்லும்போது அதன் யதார்த்தமும் பின்னணியும் சரியாகச் சித்திரிக்கப்படாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கான உதாரணம் இந்தப் படம்.