
இறுதியில், தமிழரின் வீரக்கலையான அடிமுறையில் வந்து முடிகிறது ‘பட்டாஸ்.’
தமிழரின் வீரக்கலையான அடிமுறை, வீரம் குறையாத தலைமுறை, விட்ட குறை, தொட்ட குறை என எல்லாம் சேர்த்துக் கட்டி, பற்ற வைத்த சரமாக `பட்டாஸ்.’

கொலைக்குற்றத்துக்காக 16 வருடச் சிறைத் தண்டனையை முடித்துவிட்டு வெளியுலகம் வருகிறார் சிநேகா. வந்ததும் வராததுமாய் வில்லன் நவீன் சந்திராவைப் போட்டுத்தள்ள வாட்டர் பாட்டில் துப்பாக்கியோடும் கொலைவெறியோடும் கிளம்புகிறார். கிளம்பும் வழியில், தன் கணவனின் முகச்சாயலில் இருக்கும் இளைஞன் தனுஷைப் பார்க்க, சிநேகாவை வில்லன் பார்க்க, இந்த மூவருக்கும் இடையில் என்ன சம்பந்தம் என ஒரு ஃப்ளாஷ்பேக் ஓட... இறுதியில், தமிழரின் வீரக்கலையான அடிமுறையில் வந்து முடிகிறது ‘பட்டாஸ்.’
இருவேடத்தில் தனுஷ். அப்பா திரவியம் பெருமாளாக `தக் லைஃப்’ காட்டுபவர், மகன் சக்தி (எ) பட்டாஸாக சில் ப்ரோ! துறுதுறு தனுஷைப் பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டதால், பச்சக் என ஒட்டிக்கொள்கிறார் பட்டாஸ். கன்னியாகுமரியாக சிநேகா, நாயகனுக்கு நிகரான கதாபாத்திரம்.

ஸ்டன்ட், மாஸ், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவிலும் கலக்கியி ருக்கிறார். இன்னொரு நாயகியான மெஹ்ரீன் பிர்சாடாவின் அலப்பறைகள் ரசிக்கவைக்கின்றன. நவீன் சந்திராவின் வில்லத்தனம், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் கவனிக்கவைக்கிறது. நாஸர் மற்றும் முனீஸ்காந்த் தங்களின் வேலையைத் தரமாக முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஒன் லைனர்களில் பிஜிலி கொளுத்தும் சதீஷ், நல்வரவு!
விவேக்-மெர்வின் இசையில் `சில் ப்ரோ’ பாடலும், ஜானியின் நடன வடிவமைப்பும் செம பொருத்தம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு வண்ணமிகு வாண வேடிக்கை. ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அடித்து நொறுக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர், பிரகாஷ் மப்புவின் எடிட்டிங் பக்கா!

அடிமுறை எனும் பழந் தமிழர்களின் கலையை மக்களுக்குக் கொண்டு சேர்க்க நினைத்த இயக்குநர் துரை செந்தில் குமாரின் முயற்சி பாராட்டுக் குரியது. அதை ஒரு பொழுதுபோக்குப் படத்தில் புகுத்த நினைத்து, அந்தப் பொழுதுபோக்கு ஏரியா விலும் புதுமை காட்டத் தவறியதில்தான் முயற்சி பயிற்சியாகவே முடிந்தி ருக்கிறது.