Published:Updated:

சினிமா விமர்சனம் : பொன்மகள் வந்தாள்

ஜோதிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதிகா

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து முதல் படத்திலேயே பேசியிருக்கிறார் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக். வாழ்த்துகள்!

பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட கொலைவழக்கைத் தோண்டியெடுத்து, அறியப்படாத உண்மைகளை அடையாளப்படுத்துபவளே `பொன்மகள் வந்தாள்.’

2004-ம் ஆண்டு ஊட்டியில், சில குழந்தைகள் கடத்திக் கொலைசெய்யப்படுகிறார்கள். ஒரு குழந்தையைக் காப்பாற்றும் போராட்டத்தில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகளைச் செய்தது, வடமாநில சைக்கோ கொலைகாரிதான் எனக் கண்டறியும் காவல்துறை, அந்தப் பெண்ணைச் சுட்டுக்கொன்று வழக்கை முடிக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, விளம்பரத்துக்காக வழக்கு தொடுக்கும் `பெட்டிஷன்’ பெத்துராஜ் எனும் பாக்கியராஜ், இந்த வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை வைக்க, வழக்கறிஞர் வெண்பாவாக வாதாடக் களமிறங்குகிறார் ஜோதிகா. குழந்தைக் கடத்தல், கொலை என அடுத்தடுத்து குற்றங்களை நிகழ்த்தியவருக்காக வெண்பா வாதாடுவது ஏன் என்பதைப் பல முடிச்சுகளுடன் முன்வைக்கிறது க்ளைமாக்ஸ்.

ஜோதிகா
ஜோதிகா

வெண்பாவாக ஜோதிகா. சிரிப்பின் சுருக்கங்கள் காணாத கன்னங்கள், துயரம் தேங்கி நிற்கும் கண்கள் என இறுக்கமான கதாபாத்திரம். அந்தச் சோகத்தை நமக்கும் கடத்தியிருக்கிறார். நடிப்பிலும் மிகையில்லை. எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ராஜரத்தினமாக பார்த்திபன். தன் டிரேடுமார்க் ஒன்-லைனர்களால் கட்டம் கட்டிக் கலக்கியிருக்கிறார். பாக்யராஜ், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன், வினோதினி என நட்சத்திரக் கூட்டம். இருந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து முதல் படத்திலேயே பேசியிருக்கிறார் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக். வாழ்த்துகள்! ஆனால் கருத்து சொல்வதில் இருக்கும் முனைப்பு கதை சொல்வதன் சுவாரஸ்யத்தில் இல்லையே? ‘நீதிமன்றத்துக்குத் தேவை ஆதாரம்’ என்று படத்தில் பலமுறை சொல்லப்பட்டாலும், ஜோதிகா வெறும் பிரசங்கம் நடத்தியே வழக்கில் வெற்றிகாண்பது எப்படி, நீதிபதி ஏன் லஞ்சம் வாங்குகிறார், தியாகராஜன் மரியாதைக் குறைவாகப் பேசினாலே நீதிமன்றத்தில் உளறக்கூடிய அளவுக்கு சாமர்த்தியம் இல்லாத பலவீனமானவரா, ஜோதிகாவின் உண்மை அடையாளம் இறுதியில் பார்த்திபனுக்குத் தெரிவது எப்படி என்று நாமே கறுப்புக் கோட்டை மாட்டி ஆயிரம் கேள்விகள் கேட்கலாம் யுவர் ஆனர்!

சினிமா விமர்சனம் : பொன்மகள் வந்தாள்

ஊட்டியைப் படம்பிடித்திருக்கும் ராம்ஜியின் கேமரா, குளிரின் நடுக்கத்தையும், குரூரத்தின் நடுக்கத்தையும் ஒருசேர உடம்பில் ஏற்றுகிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், பாடல்களும் ரொம்பவே சுமார்.

சமூகத்திற்கான கருத்தைச் சொன்னாலும் சாமர்த்தியமான திரைக்கதை இல்லாமல் தடுமாறுகிறாள் பொன்மகள்.