
உடல், பொருள், ஆவி எனத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் தந்து படத்தைத் தாங்கி நிற்கும் ஜீவாவின் நடிப்பு மட்டுமே படத்தின் மிகப்பெரிய பலம்.
பழைய கமர்ஷியல் டெம்ப்ளேட்டை கீறி உள்ளே நானோகிராம் அளவுக்கு கொஞ்சமே கொஞ்சம் புது மசாலாவைத் திணித்தால் அதுதான் ‘சீறு’.

நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்காதவர் ஜீவா. கேபிள் டிவி நடத்தும் அவருக்கும் உள்ளூர் அரசியல்வாதிக்கும் முட்டிக்கொள்கிறது. ஜீவாவைப் போட்டுத்தள்ள வெளியூர் ரவுடி வருணை களத்தில் இறக்குகிறார் அந்த அரசியல்வாதி. கொல்லவரும் வருணே எதிர்பாராதவிதமாய் ஜீவாவுக்கு உதவி செய்ய, பதிலுக்கு வருணுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க நினைக்கிறார் ஜீவா. இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தின் இறுதியில் நிஜ வில்லனைக் கண்டுபிடித்து ஹீரோ அழிப்பதுதான் கதை.
உடல், பொருள், ஆவி எனத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் தந்து படத்தைத் தாங்கி நிற்கும் ஜீவாவின் நடிப்பு மட்டுமே படத்தின் மிகப்பெரிய பலம். ஆனால் அரதப்பழைய கதை அவர் உழைப்பிற்கு கொஞ்சமும் நியாயம் சேர்க்காததுதான் சோகம். படத்துக்கு ஹீரோயின் வேண்டுமே என ரியா சுமனை நடிக்க வைத்திருக்கிறார்கள். வில்லனும் வேண்டும் என்பதால் நவ்தீப்பிற்கும் அதே நிலைமை. நண்பராய் வரும் வருண் நல்ல தேர்வு. ஆனால் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் இன்னமும் மெருகேற வேண்டும்.

சதீஷ் செய்வதெல்லாம் மொக்கை காமெடி என அவர்கள் படத்திலேயே சொல்லிவிடுவதால் நமக்கு வேலை மிச்சம். தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணாவுக்கும் ஜீவாவுக்கும் இடையிலான காட்சிகள் ஓரளவு ஒர்க் அவுட் ஆகின்றன. இரண்டாம் பாதியில் வரும் பெண்கள்தான் தேங்கிப்போன கதையை நகர்த்துகிறார்கள்.
கதையைப் போலவே இமானின் பாடல்களும் பின்னணி இசையும் ஒரு வட்டத்திற்குள் சிக்கித் தவிக்கின்றன. பிரசன்ன குமாரின் கேமரா கண்கள் வழியே புதிதாக எந்தக் காட்சிகளும் தென்படவில்லை.

திரைக்கதையில் வரும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் படத்தை ஓகே ரகத்திற்கு உயர்த்துகின்றன. ஆனால், அவை மட்டுமே போதாதே! தமிழ்நாட்டின் மோஸ்ட் வான்டட் லாயர் யாரோ ஒரு விடலைப்பெண் பேசுவதற்காக பதறுவதும் மொத்த அதிகார வர்க்கமும் அதற்காக அலறுவதும் படத்தை ரொம்பவே அந்நியப்படுத்துகின்றன.
ஓப்பனிங் காட்சியில் பெண்களின் காவலனாக, அண்ணனாக அறிமுகமாகிறார் ஹீரோ. சண்டை எல்லாம் போட்டுக் காப்பாற்றிவிட்டு ஓப்பனிங் பாடலில் பெண்களை துரத்தி வர்ணித்து, இறுதியாக ‘பொண்ணுங்கள நம்பாத, மோசம் போயிடுவ’ என ஆண்களுக்காகப் பாடுகிறார்.அடடே!
சொல்ல வந்த மெசேஜை இன்னும் திருத்தமாக சொல்லியிருந்தால் ‘சீறு’ சீறிப் பாய்ந்திருக்கும்.