
நான் படைப்பாளி மட்டுமில்லை, ரசிகனும்கூட. இசைன்னா சினிமா இசை மட்டும்தான்னு இங்கே நினைக்கிறாங்க. அந்த அளவுக்குப் பாடலும் இசையும் இங்கே முக்கியமாகிவிட்டது.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
``சின்ன வயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் வந்துவிட்டது. எப்படி எந்த விதத்தில் அதன்மீதான ஆர்வம் மேலோங்கியது என்று இன்னைக்கு வரைக்கும் தெரியலை. எப்பவும் பாட்டு, மியூசிக்னு மனசு சுத்திக்கிட்டே இருந்தது. இன்ஜினீயரிங் படிக்கும்போது `இது நமக்கான விஷயம் இல்லை' என்று புரிஞ்சது. சின்ன வயதில் பத்து வருஷம் இசை கற்றுக்கொண்டது அதன் நுணுக்கங்களை அறியத்தந்தது.
சென்னையில் இருக்கும்போது நண்பர் உதவியால் இயக்குநர் மகிழ் திருமேனியைப் பார்த்தேன். புதுப் பையன் என்று பார்க்காமல் திறமையை மட்டும் அவர் கண்டுகொண்டார். `தடம்' படத்திற்காக அழைத்தார். எல்லாமே ஹிட்டாக `இணையே, என் உயிர்த்துணையே' எக்கச்சக்க ஹிட் அடித்தது. திடீரென்று அருண்ராஜ் என்று கவனம் விழுந்தது. இசையோட மந்திரத்தன்மை, அதை ரசிச்சுச் செய்யும்போது கிடைக்கிற பரவசம் எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு'' என்கிற அருண்ராஜ், `தட'த்தில் புறப்பட்டு `கடமையைச் செய்' வரைக்கும் வந்திருக்கிறார். மலையாளத்திலும் முன்னணியில் நிற்கிறார்.

``இவ்வளவு குறைந்த வயதில் அனுபவத்தோட இருக்கீங்க...’
``நான் படைப்பாளி மட்டுமில்லை, ரசிகனும்கூட. இசைன்னா சினிமா இசை மட்டும்தான்னு இங்கே நினைக்கிறாங்க. அந்த அளவுக்குப் பாடலும் இசையும் இங்கே முக்கியமாகிவிட்டது. எல்லோராலும் ரசிக்கப்படுகிற கற்பனைகள் இப்போ இளைஞர்களிடமிருந்து கிடைக்கிறது. வார்த்தைகள், சூழல், இசை கூடி பொருத்தமான, சுகந்தமான இடத்தில் பாடல் வரும்போது அது கவனம் பெறுகிறது. நல்ல பாதையும், நல்ல இசையமைப்பாளர்களும் உருவான பிறகுதான் என் தலைமுறையே வருது. நாங்க தர்ற புதுசுல ஆகப்பழையதோட சாயல் இருக்கும். இளையராஜா, ரஹ்மான்னு கடந்து வந்துட்டு, அதிலிருந்து நாம் எதுவும் பெறாமல் இருந்திட முடியாது.''
``ஓர் இசையமைப்பாளர் தன்னை எப்படி மேம்படுத்திக்கொள்வது..?’’
``நான் எனக்கானதைச் சொல்ல முடியும்... ஓர் இசையமைப்பாளனின் முதல் கடமை தன்னையே பரிசோதனையாக்கிக் கொள்வதுதான். ஒரு பாடல் ஆரம்பிக்கும் போது சாதாரணமாகத்தான் இருக்கும். அதுவே உச்சிக்குப் போய் வேறு ஒரு இடத்தைக் காட்டும். என் மனசுக்கும், கேட்கிற ரசிகன் மனசுக்கும் ஒரு பரிவர்த்தனை நடக்குதில்லையா... அதுதான் விஷயம். ஒரு பாடல் பிறந்து வெளிவருகிற சூழலை விவரிக்கிறது கடினம். ஏதோ ஓர் இடத்தில் நானும் ரசிகனும் அந்தரங்கமா மனதைத் தொட்டுப் பார்க்கணும்னு ஆசைப்படுறோம். எவ்வளவு தூரம் கிட்ட போறோமோ அவ்வளவு தூரம் ஜெயிக்கிறோம்.''

``பாடலின் தன்மை இப்படித்தான் இருக்கணும்னு இருக்கா?’’
``இப்படித்தான் இருக்கணும்னு கம்போஸ் பண்றதில்லை. சமயங்களில் மியூசிக் பண்ணும் போது நம்மையே இழந்த நிலைக்குக் கூட்டிட்டுப் போகும். சமயங்களில் நல்ல பாட்டு கேட்கும்போதுகூட அப்படி நிகழும். விஸ்வநாதன் - ராமமூர்த்தி, இளையராஜா, ரஹ்மான் இவங்க எல்லாம் சந்தோஷம் கொடுத்திருக்காங்க. இளையராஜா, ரஹ்மான் இசையின்பம் பற்றி நாம் தனியாகத்தான் பேச முடியும். ஒவ்வொரு நல்ல பாடலும் வருவது தன்னெழுச்சியான விஷயம். நல்ல பாடலே பெரிய சூட்சமமாக இருக்கும். பாடலுக்கான டியூன் பிடிபடும்போது, அதில் தெரிந்த ஒண்ணும் தெரியாத ஒண்ணும் இருந்துகிட்டே இருக்கும். அதை விளக்க முடியாது.''
``இன்னமும் இளையராஜா, ரஹ்மானின் பேச்சு இருந்துகிட்டே இருக்கே... அடுத்து ஒருத்தர் வந்திருக்கணுமே!’’
``ரொம்பவெல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை. அனிருத் அடுத்து வந்தாச்சு. ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் என எல்லா முக்கிய ஹீரோக்களுக்கும் அவர்தான் இசையமைக்கிறார். எல்லோரையும் அவர் பாடல்கள் போய்ச் சேர்ந்துவிட்டன. இளைஞர்கள் அவர் பக்கமே இருக்கிறார்கள். அவருக்கு இப்பொழுது இருக்கிற நல்ல இடத்தை சொல்லித்தான் ஆகணும்.''