Published:Updated:

``ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட் அடிக்க அந்த இன்ஸ்பிரேஷன்தான் காரணம்!''- ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன்

`கிராண்ட்மாஸ்டர்' நிகழ்ச்சியில ஒரு கிராமியப் பாடகர் கலந்துக்கிட்டார். அவர் அதுல பாடினது எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் அவரை பாட வெச்சேன். ரொம்ப நெகிழ்ந்துட்டார். ஒரு வருஷம் கழிச்சு 'வீடு கட்டிருக்கேன். கிரஹபிரவேசத்துக்கு வாங்க'னு சொன்னார். இப்ப மூணு வீடு கட்டிட்டார். அவர்தான்...

Published:Updated:

``ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட் அடிக்க அந்த இன்ஸ்பிரேஷன்தான் காரணம்!''- ஜேம்ஸ் வசந்தன்

`கிராண்ட்மாஸ்டர்' நிகழ்ச்சியில ஒரு கிராமியப் பாடகர் கலந்துக்கிட்டார். அவர் அதுல பாடினது எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் அவரை பாட வெச்சேன். ரொம்ப நெகிழ்ந்துட்டார். ஒரு வருஷம் கழிச்சு 'வீடு கட்டிருக்கேன். கிரஹபிரவேசத்துக்கு வாங்க'னு சொன்னார். இப்ப மூணு வீடு கட்டிட்டார். அவர்தான்...

ஜேம்ஸ் வசந்தன்

"லாக்டெளன்ல இருக்கிற துயரங்களைப் பத்தி நான் பேச விரும்பலை. இந்தக் காலகட்டத்தை எவ்ளோ சுவாரஸ்யமா பயன்படுத்திக்க முடியுமோ அப்படி பயன்படுத்தியிருக்கேன். சீக்கிரமாவே நான் இயக்கின ரெண்டாவது படம் வெளியாகப்போகுது" என்று உற்சாகமாக பேசத் தொடங்குகிறார், ஜேம்ஸ் வசந்தன்.

விலங்கியல் படிக்கணும்னு ஆசை. ஆனா, ஆங்கிலம் படிச்சிருக்கீங்க. ஆனா, தமிழ் ஆர்வம் எப்படி?

"பள்ளி நாள்கள்ல தமிழ் இலக்கணத்தை கிண்டல் பண்ணியிருக்கேன்; வெறுத்திருக்கேன். தமிழ் எனக்கு பிடிக்க முதல் காரணம், காலேஜ்ல தமிழ் வகுப்பெடுத்த ஜீவா பொன்ரத்தினம் அம்மாதான். மத்தபடி மீடியாவுக்குள்ள வந்த பிறகுதான் என் அனுபவத்துல நான் பார்த்த மனிதர்கள், வாய்ப்புகள் மூலமா எனக்குள்ள தூண்டப்பட்ட இயற்கையான உணர்வுதான் தமிழ். காட்சி ஊடகத்துல வரும்போது சரியா பேசணும், உச்சரிக்கணும்னு தோணும்ல. யாரும் நம்மளை திட்டிடக்கூடாதுனு நினைச்சு நான் வளர்த்துக்கிட்ட விஷயம். அதுவரைக்கும் தமிழ் உணர்வு, ஆர்வம் எதுவும் இருந்ததில்லை"

இசையமைப்பாளரானதுக்கு முன்னாடி கோயில் திருவிழாக்கள்ல வாசிச்ச அனுபவம்?

ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன்

"எல்லோரும் 'மதுரை குலுங்க குலுங்க' பாடல் பத்தி நிறைய கேட்பாங்க. இந்தப் பாடல் உருவானதற்கு என்னுடைய ஆர்கெஸ்ட்ரா வாழ்க்கைதான் பெரிய உதவியா இருந்தது. தமிழ்நாட்டுல இருக்கிற பெரும்பாலும் எல்லா ஊர்கள்ல இருக்கிற கோயில் திருவிழாக்களுக்கு போய் வாசிச்சிருக்கேன். சில பாடல்களை காசு கொடுத்து மறுபடியும் பாட சொல்லிக்கிட்டே இருப்பாங்க. சில இடங்கள்ல ஆர்கெஸ்ட்ராவுக்கு எங்களை கூட்டிட்டு வந்தவங்க எங்களுக்கு வர வேண்டிய காசை கொடுக்காமல் ஓடிப்போயிடுவாங்க. அப்புறம், நைட் முழுக்க அந்த ஊர்ல இருந்து ஊர் தலைவர்கிட்ட பேசி, அப்புறம் எங்களை அனுப்பி வெப்பாங்க. நான் நகரத்துல ஆங்கிலம் பேசுற சமூகத்துல வாழ்ந்திருந்தாலும் மறுபக்கம் கிராமங்களுடைய ஆழமும் யதார்த்தமும் நல்லா தெரியும். அதுக்கு கோயில் திருவிழாக்கள் முக்கிய காரணம். இது எனக்கு பெரிய ப்ளஸ்"

சர்ச்ல வாசிக்கும்போது நிறைய மெலடீஸ் போட்டிருப்பீங்க. ஆனா, 'மதுர குலுங்க' உருவான விதம் எப்படி?

"நான் கொடைக்கானல்ல மியூசிக் டீச்சரா இருக்கும்போது சசி என் ஸ்டூடன்ட். அப்போவே அவனுக்கு சினிமா ஆசையிருந்தது. 'நான் டைரக்டர் ஆகுறதுக்குள்ள நீங்க பெரிய இசையமைப்பாளர் ஆகிடுவீங்க. அப்போ நான் என் படத்துக்கு மியூசிக் பண்ணுங்கனு சொல்லும்போது வேண்டாம்னு சொல்லிடாதீங்க சார்'னு அடிக்கடி சொல்வான். ஆனா, அவன்தான் எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தான். இத்தனை வருஷங்கள் கடந்தும் இந்தப் படம் கொண்டாடப்படுதுனு நினைக்கும்போது அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கமுடியும். இந்தப் படத்துல பாடல்களே இல்லை தெரியுமா? ஒரே ஒரு பாடல்தான் அதுவும் இளையராஜா சாங் வெச்சுக்குறேன்னு சொன்னான். இந்தப் படத்துல பாடல் எதுவும் இல்லைங்கிறதனாலதான் என்னை மியூசிக் பண்ண சொன்னியானு கூட சசிக்கிட்ட கேட்டிருக்கேன். 'மதுரை குலுங்க' பாடலுக்கான சூழலை சசி சொன்னபோது விஜய் பத்து பேரோட கிராமத்து திருவிழாவுல டான்ஸ் ஆடினா எப்படியிருக்கும்னு யோசிச்சு கம்போஸ் பண்ணி வெச்சிருந்தேன். சசிக்கு இது பிடிக்கலை. அவனுக்கு என்னதான் வேணும்னு கூட சொல்லலை. 'வேற மாதிரி வேணும் சார்'னு மட்டும்தான் சொல்வான்.

அப்புறம், அவன் பேசும்போது கிடைச்ச சின்ன க்ளுவை வெச்சு நானே மதுரைக்கு போய் ஒரு ஸ்டூடியோவுல வாடிப்பட்டி குழுவை வெச்சு ரெக்கார்ட் பண்ணி காட்டினேன். அப்போ 'இதுதான் சார்'னு சொன்னான். அப்புறம் விஜய் டிவியில 'கிராண்ட்மாஸ்டர்' நிகழ்ச்சியில ஒரு கிராமியப் பாடகர் கலந்துக்கிட்டார். அவர் அதுல பாடினது எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் உடனே சேனலுக்கு கால் பண்ணி அவர் நம்பர் வாங்கி அவரை வரவெச்சு பாட வெச்சேன். ரொம்ப நெகிழ்ந்துட்டார். அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு 'வீடு கட்டிருக்கேன். கிரஹபிரவேசத்துக்கு வாங்க'னு சொன்னார். ஒருத்தருடைய வாழ்க்கை நல்லபடியா தொடங்க நாம ஒரு காரணியா இருந்திருக்கோம்னு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்ப மூணு வீடு கட்டிட்டார். நானும் அந்த மூணு வீட்டுடைய கிரஹபிரவேசத்துக்கும் போய்ட்டு வந்தேன். அவர் வேறயாருமில்லை, வேல்முருகன்தான். இந்த மாதிரி நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்தது 'சுப்ரமணியபுரம்.'"

நிறைய இசையமைப்பாளர்களுக்கு சர்ச் கொயர்தான் ஆரம்பப்புள்ளியா இருந்திருக்கு. உங்களுக்கும் அப்படிதான். அதுக்காக போடப்பட்ட டியூனை எந்தப் படத்துக்காவது பயன்படுத்தியிருக்கீங்களா?

ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன்

"அப்படி நான் பயன்படுத்தியதில்லை. சர்ச் மியூசிக் தனி. சினிமாவுக்கு நான் பண்ற மியூசிக் தனி. சர்ச் மியூசிக் ரொம்ப எளிமையா எல்லோரும் பாடும்படியாதான் இருக்கும். அந்த டியூனை சினிமாவுல பயன்படுத்தினா நிச்சயம் ஹிட்டடிக்கும். ஹாரிஸ் ஜெயராஜ் டெக்னிக் அதுதான். அவர் இசைத்துறையில சாம்ராஜ்யம் அமைச்சதுக்கு முக்கிய காரணம் அவர் பாடல்கள்ல இருக்கிற எளிமைதான்."

இசையமைப்பாளரா எனக்கான சுதந்திரம் இருக்கணும். அதுக்காகதான் இயக்குநர் அவதாரம்னு ஒரு பேட்டியில சொல்லியிருந்தீங்களே?

"உண்மைதான். முதல் படம் 'வானவில் வாழ்க்கை' என்னுடைய கல்லூரி அனுபவங்களை மையமா வெச்சு எழுதின கதைதான். படத்துல எதுவும் பெருசா எதிர்பார்த்து வராதீங்க. இது ஒரு ஜாலியான மியூசிக்கல் படம்னு மக்களை முன்னாடியே தயார்படுத்தியிருந்தால் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கலாம். படம் ஃபெயிலியர்தான். ஆனா, என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம்"

ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன்

இசைக்கு மதம், மொழி கிடையாதுனு சொல்வாங்க. ஆனா, இசையிலும் இப்ப அரசியல் கலக்குதே?

"இந்தப் பிரச்னை எல்லா காலத்திலும் இருந்துட்டுதான் வருது. கேரளாவுல நடக்குற ரியாலிட்டி ஷோக்களில் நிறைய இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் முறையா கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டு பாடுறாங்க. அங்க எப்படி இந்தப் பிரச்னை இல்லாமல் இருக்குனு ஆச்சர்யமா இருக்கும். பாடுறவங்க சந்தோஷமா பாடுறாங்க. குழப்பம் இருக்கிறவங்க தெளிவடையணும்னு நினைக்கிறேன். இதனாலதான், இஸ்லாமிய கோட்பாடுகளை வெச்சு எழுதப்பட்ட பாடல் வரிகளை அவங்க வேதத்தை நல்லா தெரிஞ்ச ஒருத்தரை வெச்சு கர்னாடக சங்கீதத்துக்கு மாத்தி வெச்சிருக்கேன். கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவங்களுக்கும் பைபிள்ல இருக்கிற பாடல்களை எழுதி வெச்சிருக்கேன். அப்படி மதம்தான் முக்கியம்னு நினைக்கிறவங்க இதை கத்துக்கலாம். இசை நம்மளை வந்து சேர்ந்தால் போதும்."

தனியிசை கலைஞர்கள் சினிமாக்குள்ள வர்றதுதான் வெற்றிங்கற பிம்பம் இருக்கே?

ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன்

"அது உண்மைனே வெச்சுக்கலாம். சினிமா, அரசியல், கிரிக்கெட்... இந்த மூணும்தான் இந்தியாவுல இருக்கிற மூன்று மதங்கள். அப்படி இருக்கும்போது சினிமா ரொம்ப வலிமையான தளம். அதுல அடையாளம் காணப்படணும்னு எல்லோருக்கும் ஆசை இருக்கும். நான் வளர்ந்த காலத்துல அதுதான் உச்சபட்சமா இருந்தது. இன்னிக்கு அப்படியில்லை. சில தனிப்பட்ட இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பாப்புலரா இருக்கிற அளவுக்கு சினிமாவுல இருக்கிற பின்னணி பாடகர்கள் கூட பாப்புலரா இல்லை. அந்தளவுக்கு இன்னிக்கு யூடியூப் பெரிய தளம் அமைச்சுக்கொடுத்துடுச்சு. சினிமாதான் ஒரே இடம்ங்கிற காலம் போயிடுச்சு. திறமையுள்ளவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்."

'ஓ அந்த நாட்கள்' பட ஐடியா எப்படி வந்தது?

"நானும் என் மனைவியும் கார்ல போய்க்கிட்டிருக்கும்போது 'நம்ம ஊர் சினிமாவுல ஹீரோ 60 வயசு வரைக்கும் போகலாம். ஆனா, ஹீரோயின் 30 வயசுக்குள்ள வந்தாலோ இல்லை கல்யாணமாகிட்டாலோ அவ்ளோதான்ல'னு பேச்சு வந்தது. அப்போ 40 வயசு இருக்கிற பெண்களை மையப்படுத்தி ஒரு கதை எழுதினா எப்படியிருக்கும்னு தோணின விஷயம்தான் 'ஓ அந்த நாட்கள்' படத்துடைய கான்செப்ட். நம்ம புதுசா ஒரு நடுத்தர வயதுடைய பெண்கள்னு இல்லாமல் ஏற்கெனவே மக்கள் மத்தியில பிரபலமான கேரக்டர்கள் இப்போ என்ன பண்றாங்கன்னு எழுதலாம்னு தோணுச்சு. அப்படியே பேசிப்பேசி 'ரெட்டைவால்குருவி' ராதிகா, 'மைக்கேல் மதன காமராஜன்' ஊர்வசி, 'சிந்துபைரவி' சுஹாசினி, 'மன்னன்' குஷ்புனு ஃபைனல் பண்ணினோம். முதல்ல சுஹாசினியை சந்திச்சு 'இந்த மாதிரி ஒரு ஐடியா இருக்கு. டெவலப் பண்ணவா?'னு கேட்டேன். 'ரொம்ப நல்லாயிருக்கு. கதையை முழுக்க எழுதிட்டு வாங்க பண்ணலாம்'னு சொன்னாங்க. கதையை முழுமையா எழுதி முடிச்சவுடன் அவங்கக்கிட்ட சொன்னேன். ரொம்ப எக்ஸைட்டாகி மத்த மூணு பேர்கிட்டேயும் சொன்னாங்க. எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். அப்படிதான் ஆரம்பிச்சோம்."

மறுபடியும் அவங்க அந்தந்த கேரக்டர்களா மாறியிருப்பாங்க. ஸ்பாட் எப்படியிருந்தது?

ஓ அந்த நாட்கள்
ஓ அந்த நாட்கள்

"ஆமா. எல்லோரும் மறுபடியும் அவங்க பல வருஷத்துக்கு முன்னாடி நடிச்ச கேரக்டர்களா மாறும்போது ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அந்த நினைவுகளை பகிர்ந்துக்கிட்டாங்க. நாலு பேரும் ஜாம்பவான்கள். குறிப்பா, ஹியூமர் சீன்ல ஊர்வசி கலக்கிடுவாங்க. ஸ்பாட்ல டக்குனு ஸ்கிரிப்ட் பேப்பர்ல இல்லாத கவுன்டரை போடுவாங்க. மத்தவங்களும் அதுக்கு தகுந்த மாதிரி ரியாக்ட் பண்ணணும். இவங்க நாலு பேரும் சேர்ந்து நடிச்சதில்லை. எல்லோருக்குமே புதுமையான அனுபவமா இருந்தது. எமோஷன் காட்சிகளில் ராதிகா, சுஹாசினி பின்னியிருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடங்கள்ல ஸ்கோர் பண்ணிடுவாங்க. அதுதான் இவங்க எல்லோரையும் மக்களுக்குப் பிடிக்க காரணம். ரொம்ப இலகுவான படம்தான். எமோஷனலா கனெக்டாகும்."

இதே மாதிரி 80களில் இருந்த நாலு ஹீரோக்களை வெச்சு படம் பண்றதா இருந்தா யாரெல்லாம் உங்க சாய்ஸ்?

"'ஓ அந்த நாட்கள்' படத்துடைய கான்செப்ட் பிடிச்சுப்போய் வேறொரு இயக்குநர் நீங்க சொன்ன மாதிரி 80-கள்ல நடிச்ச ஹீரோக்களை வெச்சு படம் பண்றதா கேள்விப்பட்டேன்."

2018-ல ஆரம்பிச்ச படம், இன்னும் ஏன் வெளியாகாமல் இருக்கு?

"எத்தனையோ பெரிய படங்கள் எல்லாம் வெளிவர முடியாமல் போராடிக்கிட்டிருக்கு. இது சின்ன படம். அதுவும் என்னுடைய இரண்டாவது படம். எல்லா படங்களுக்கும் இருக்கிற சில பிரச்னைகள்தான் இதுக்கும். சீக்கிரமே வெளியிட பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு."

டிவி வாழ்க்கையை மிஸ் பண்றீங்களா?

ஓ அந்த நாட்கள்
ஓ அந்த நாட்கள்

"ரொம்பவே மிஸ் பண்றேன். 25 வருஷம் டிவி வாழ்க்கையில எல்லாமே முயற்சி பண்ணி பார்த்தாச்சு. 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சியில கிடைச்ச சவால், மன நிறைவு வேறெதுலயும் இல்லை. நான் டிவியில மறுபடியும் ஏதாவது பண்ணணும்னு நினைச்சா இந்த நிகழ்ச்சியையோ அல்லது கடைநிலையில இருக்கிற மாணவர்களுடைய, இளைஞர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வர்ற நிகழ்ச்சியையோதான் பண்ணுவேன். மத்தபடி கமர்ஷியல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்ல ஆர்வமில்லை."

இப்போ டிவியில உங்களுக்குப் பிடிச்ச நிகழ்ச்சி எது?

"உண்மையை சொல்லணும்னா இப்போ தமிழ் சேனல்கள் பார்க்கிறதேயில்லை. ஸ்போர்ட்ஸ், நடப்பு நிகழ்வுகள், டிராவல் இந்த மாதிரி விஷயங்களைதான் விரும்பி பார்க்குறேன். எனக்கு நம்ம ஊர் சேனல்கள்ல என்ன நடக்குதுனு தெரியாது."

ஏன் இப்போ அதிகளவுல இசையமைக்கிறதில்லை?

"நான் என்ன இசையமைக்கமாட்டேன்னு பிடிவாதமாவா இருக்கேன்? என்கிட்ட வந்து மியூசிக் பண்ணுங்கன்னு சொன்னா பண்ணப்போறேன். நான் படம் இயக்கப்போகும்போது ரெண்டு வருஷத்துக்கு எந்தப் படங்களையும் கமிட் பண்ணக்கூடாதுனு உறுதியா இருந்தேன். இந்தப் படம் ரிலீஸான பிறகு, படங்களுக்கு இசையமைக்க ஓகே சொல்லலாம்னு இருந்தேன். ஏற்கெனவே நாலு படங்கள் நான் இசையமைச்சு ரெடியா இருக்கு. ஒவ்வொண்ணா வெளியாகும்."