கட்டுரைகள்
Published:Updated:

``அப்பா எனக்காக விட்டுக்கொடுத்தார்!’’

ஸ்ரீகாந்த் தேவா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீகாந்த் தேவா

உருகும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா

``நான் ஆறாவது படிக்கறப்பவே இசையமைப்பாளர் ஆகணும்னு விரும்பிட்டேன். ஆனா, எங்க அப்பாவோ நான் இந்தத் துறைக்கு வரக்கூடாதுன்னு விரும்பினார். ஏன்னா, அவரோட முதல் பட வாய்ப்பே அவருக்கு 41 வயசுலதான் அமைஞ்சது. அதுக்கு முன்னாடி அவர் அவ்ளோ கஷ்டப்பட்டுப் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இசையமைப்பாளர் ஆனார்.

‘எனக்கு மியூசிக்ல ஆர்வம் இருக்கு’ன்னு நான் என் அப்பாகிட்ட சொன்னபோது, அவர் தயங்கினார். அவரை மாதிரி நானும் கஷ்டப்படக்கூடாதுன்னு அப்பா நினைச்சார். அதன்பிறகு அப்பாவோட டீம்ல ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். என்னோட இருபது வயசுக்குள் 350 படங்களுக்கு மேல ஒர்க் பண்ணியிருப்பேன். ஆனாலும் அப்பா மாதிரி எனக்கும் நாற்பது வயசுக்கு மேலதான் முதல்பட வாய்ப்பு வரும்னு நம்பிட்டு இருந்தேன். ஆனா, என் முதல் பட வாய்ப்பு அவ்ளோ எளிதா அமைந்தது. என்னோட இருபது வயசிலேயே ‘டபுள்ஸ்’ படத்தின் மூலம் என்னை இசையமைப்பாளர் ஆக்கிட்டார் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் சார். அதன்பிறகு சிம்பு சாரோட ‘குத்து’, ஜெயம் ரவி சாரோட ‘எம்.குமரன் s/o மகாலட்சுமி’, விஜய் சாரோட ‘சிவகாசி’ன்னு செம பிஸியாகிட்டேன்...’’ என்று சிரிக்கிற ஸ்ரீகாந்த் தேவா இப்போது உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ மூலம் தன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடக்கியிருக்கிறார்.

``அப்பா எனக்காக விட்டுக்கொடுத்தார்!’’

‘கலகத் தலைவன்’ படத்துக்கு இசையமைத்த அனுபவம் எப்படியிருக்கு?

“சந்தோஷமா இருக்கு. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் வந்திருக்கேன். என்னோட செகண்ட் இன்னிங்ஸை ஒரு பெரிய படத்துல இருந்துதான் ஆரம்பிக்கணும்னு காத்திருந்தேன். நான் விரும்பினது மாதிரி உதயநிதி சாரோட ‘கலகத் தலைவன்’ வாய்ப்பு வந்தது. உதயநிதி சாரால என் நீண்டநாள் கனவு நிறைவேறியிருக்கு. சாருக்கு நன்றி சொல்லிக்கறேன்.

ஆரம்பத்துல இந்தப் படத்தின் பாடல்களுக்கு அரோல் கரோலி தான் இசையமைச்சார். அப்புறம் அவர் அமெரிக்கா போயிருந்தார். இதோட பின்னணி இசைப் பணிகள் ஆரம்பிக்கற சமயத்துல அவரால சென்னை வரமுடியாத சூழல். அதனாலேயே எனக்கு இந்தப் படம் கிடைச்சது. மகிழ்திருமேனி சார் ரெண்டு மாசம் என் கூடவே இருந்து, ரசிச்சு என்கிட்ட வேலை வாங்கியிருக்கார்.’’

அப்பா (தேவா) பிஸியா இசையமைத்த காலகட்டத்திலேயே நீங்களும் பிஸியா இருந்தீங்க... ‘குத்துப்பாட்டு’ன்னா ஸ்ரீகாந்த் தேவாதான்னு பெயர் அமைந்தது?

“எங்க ஸ்டூடியோவுல அப்பாவுக்கெனத் தனி இடம் இருக்கு. அங்கே அவர் இசையமைக்கற பாடல்கள், பெரிய ஹிட் ஆகியிருக்கு. சென்டிமென்ட்டா அந்த இடத்தை நினைச்சதால அவரோட எல்லாப் படங்களுக்கும் அங்கே இசைமைப்பார். அப்படி ஒரு இடத்தை அவர் எனக்காக விட்டுக்கொடுத்தார். எனக்கு முதல் படம் தேடி வந்ததும், அவரோட இடத்தைக் கொடுத்து ஆசீர்வதிச்சார். அப்ப அப்பா ரஜினி சார், சரத் சார், முரளி சார்னு டாப் ஹீரோஸ் படங்கள்ல உச்சத்துல இருந்தார். எனக்கு சிம்பு சார், விஜய் சார்னு படங்கள் அமைஞ்சது. இளையராஜா சார்னா ‘ஃபோக்’ ஸாங்ஸ், ரஹ்மான் சார்னா ‘வெஸ்டர்ன்’, தேவான்னா ‘கானா’ன்னு ஒவ்வொருத்தரும் பெயர் வாங்கினதால, அப்பா வழியில் நானும் கானா போடாமல், ஃபாஸ்ட் மூவ்மென்ட்ஸ் பாடல்கள்ல ஆர்வம் காட்டினேன். என் ரெண்டாவது படம் ‘குத்து’வில் ‘போட்டுத் தாக்கு’ பெரிய ஹிட் ஆச்சு, விஜய் சாரின் ‘சிவகாசி’யில் ‘அட என்னாத்த செய்வேனுங்கோ’, ‘தீபாவளி’ன்னு என்னை குத்துப்பாடல்கள் ஸ்பெஷலிஸ்ட் ஆக்கிடுச்சு.’’

``அப்பா எனக்காக விட்டுக்கொடுத்தார்!’’

இப்ப வர்ற இசைமைப்பாளர்களை கவனிக்கிறீங்களா?

“அவங்ககிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிறதுக்கு இருக்கு. அவங்க ஒரு நேரத்துல ஒரு படத்துல மட்டும்தான் கவனம் செலுத்துறாங்க. ஒரு படம் கையில் இருக்கறப்ப, அடுத்த பட வாய்ப்பு தேடி வந்தால் கூட, உடனடியாக ‘நோ’ சொல்லிடுறாங்க. இது எனக்கு ஆச்சரியமா இருக்கு. அதைக் கத்துக்கிட்டிருக்கேன்.

ஏன்னா, அப்படி நான் ‘நோ’ சொல்லியிருந்தால் இன்னிக்கு நான் பெரிய உயரத்தில் இருந்திருப்பேன். ‘சிவகாசி’ ஹிட்டுக்குப் பிறகு இருபது படங்கள் குவிஞ்சிடுச்சு. அத்தனை பேரும் என் கையில அட்வான்ஸைத் திணிச்சிட்டாங்க. எல்லாருமே ஒரே நேரத்துல பாடல்கள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. ரசிச்சுப் பண்ணுறதுக்கான நேரம் இல்லாமலும், அடுத்தடுத்து பெரிய படங்கள் பக்கம் கவனம் செலுத்த முடியாமலும் வொர்க் பண்ணினேன். அனுபவங்கள் இப்ப பக்குவத்தைக் கொடுத்திருக்கு. ‘கலகத் தலைவன்’ படத்துக்குப் பிறகு ரொம்ப கவனமா கமிட் ஆகி இசையமைக்க முடிவு பண்ணியிருக்கேன். இனி என்கிட்ட இருந்து நிறைய ஹிட்ஸை எதிர்பார்க்கலாம்.’’