Published:Updated:

“சமூகத்துக்காக இசைக்கிறது மன நிறைவு கொடுக்குது!”

தாஜ் நூர்
பிரீமியம் ஸ்டோரி
News
தாஜ் நூர்

பாடல்களை உன்னிப்பா கவனிக்கிறதுல எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆர்வம் இருந்துச்சு. கீபோர்டு வாசிக்கவும் தெரியும். மற்றபடி இசைத்துறைக்குத்தான் போகணும்னு எந்தத் தீவிர எண்ணமும் எனக்கு இருந்ததில்லை

“அப்போ ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். திருவல்லிக்கேணி தர்கா ஹஸரத்தான் நான் வழக்கமா வழிபாடு செய்யும் இடம். யதேச்சையா ஒருநாள் அங்கு வந்த ரஹ்மான் சாரைப் பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைச்சுது. ‘என்ன பண்ணுறீங்க’ன்னு கேட்டார். ‘ஆப்பிள் கம்ப்யூட்டர் இன்ஜினீயரா இருக்கேன் சார்’னு சொன்னேன். அட்ரஸ் கொடுத்து ஆபீஸ்ல வந்து பார்க்கச் சொன்னார். அப்போ எனக்குக் கல்யாணம் முடிவாகி அந்த வேலையில் இருந்ததால உடனே போய்ப் பார்க்க முடியல. அழைப்பிதழ் அனுப்பினேன். பதிலுக்கு அவரிடமிருந்து வந்தது வாழ்த்துச் செய்தி. அவ்வளவு நெகிழ்ச்சியா இருந்தது. கல்யாணம் முடிஞ்சு சென்னை வந்து சாரைப் பார்க்கப் போனேன். ‘உங்க பழைய ஆபீஸில் சொல்லிட்டு இங்கேயே வந்துடுங்க’ன்னு சொன்னார்’’ - நிதானமாகப் பேசத் தொடங்குகிறார் இசையமைப்பாளர் தாஜ் நூர்.

“பாடல்களை உன்னிப்பா கவனிக்கிறதுல எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆர்வம் இருந்துச்சு. கீபோர்டு வாசிக்கவும் தெரியும். மற்றபடி இசைத்துறைக்குத்தான் போகணும்னு எந்தத் தீவிர எண்ணமும் எனக்கு இருந்ததில்லை. அப்படி, கம்ப்யூட்டர் இன்ஜினீயரா வேலை பார்த்துட்டிருந்த என் வாழ்க்கையை மாற்றியது அந்தச் சந்திப்புதான். சுமார் 14 வருடங்கள் ரஹ்மான் சார்கிட்டதான் வேலை பார்த்தேன். டெக்னிக்கல் விஷயங்களைப் பார்த்துக்கிறதுல தொடங்கி சின்னச் சின்ன ப்ரோக்ராமிங் வரை செய்யறதுதான் என் பணி. வாரம் ஒருமுறை நானும் சாரும் ஒண்ணா தர்காவுக்குப் போவோம். சினிமாவுல நடக்குற விஷயங்களையே அப்போதான் கேட்டுத் தெரிஞ்சிப்பார். அதேபோல ஈ.சி.ஆர்-ல ரொம்பவே ராசியான ரெக்கார்டிங் ஸ்டூடியோ ஒண்ணு இருந்தது. அங்கே ரெக்கார்டு பண்ணுன எல்லாப் பாட்டுமே பயங்கர ஹிட். இப்படிப் பல அனுபவங்கள்.

தாஜ்நூர்
தாஜ்நூர்

இந்தக் காலகட்டத்துலதான் கிரியேட்டிவ்வா ஏதாவது பண்ணணும்னு எனக்குள்ள ஆசை வந்தது. வேலை இல்லாத நேரத்தில் Jingles இசையமைக்க ஆரம்பிச்சேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. ஒருவேளை சினிமா வாய்ப்பு கிடைச்சாலும், அதை மிகச் சிறப்பா செய்திடணும்னு உறுதியா இருந்தேன். நண்பர் மூலமா ரம்பா, பிரகாஷ்ராஜ் நடிச்ச ‘விடியும்வரை காத்திரு’ பட வாய்ப்பு கிடைச்சது. ஆனால், இன்னைக்கு வரை அந்தப் படம் வெளிவரல. பாண்டிராஜின் ‘வம்சம்’தான் நான் இசையமைத்து வெளியான முதல் படம். முழுவதும் நாட்டுப்புறப் பின்னணி கொண்ட இசை தேவைப்பட்டதால புதுக்கோட்டை போய் சுற்று வட்டார கிராமங்களில் தங்கி, பல புதுச் சத்தங்களைக் கேட்டுக் கத்துக்கிட்டு அந்தப் படத்துக்கு இசை அமைச்சேன். ரொம்ப நல்ல வரவேற்பு கிடைச்சுச்சு. என் மெலடி நல்லா இருக்குன்னு ரஹ்மான் சாரும் பாராட்டினார். இப்போவரை சுமார் 25 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கேன்” - உற்சாகமாகப் பேசுகிறார் தாஜ் நூர்.

மெட்டு அமைத்து அதற்கேற்ப வரிகள் எழுதியே இன்று பெரும்பாலான பாடல்கள் உருவாகின்றன. ஆனால், வரிகளுக்கு இசையமைப்பதே தன் பலமெனக் கூறுகிறார் தாஜ் நூர். “பாடலாசிரியர் எழுதுற எந்த சிறு வார்த்தையையும் விட்டுடாம மெட்டு அமைப்பது கொஞ்சம் சவாலானதுதான். ரஹ்மான் சார்கிட்ட இருந்த அனுபவம்தான் எனக்குக் கைகொடுக்குதுன்னு சொல்வேன். இந்த முறையை மட்டுமே நான் பின்பற்றுறேன்னு இல்ல. என் முதல் பாட்டே நான் மெட்டு அமைத்து கவிஞர் வாலி எழுதினதுதான். அறிமுக இசையமைப்பாளரான என்னை அழைத்து, ‘நீ நூர் இல்ல, கோஹி-நூர்’னு அவர் சொன்னதை மறக்கவே மாட்டேன்” என்கிறார்.

தாஜ்நூர்
தாஜ்நூர்

திரைப்படப் பாடல்களைத் தாண்டி சமூகம் சார்ந்த பாடல்களுக்குத் தொடர்ந்து இசையமைத்துவருகிறார் தாஜ் நூர். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணனுடன் இணைந்து திருக்குறளின் சில அதிகாரங்களுக்கு இசையமைத்தது, கவிஞர் சினேகனுடன் இணைந்து ஜல்லிக்கட்டுப் போராட்டக் காலத்தில் பாடல் ஒன்றை வெளியிட்டது, திருக்குறளை அரபு மொழியில் மொழிபெயர்த்து அதற்கு இசையமைத்தது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் இருக்கைக்கான பாடலுக்கு இசையமைத்தது என இவரின் பணிகள் ஏராளம். இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான மாற்றுத் திறனாளிகளுக்கான சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்து இவர் இசையமைத்ததுதான். தற்போது மழலைகளுக்கான ரைம்ஸ்களுக்குப் பாடல் வடிவம் அளித்துவருகிறார். அரசு பாடப் புத்தகங்களில் உள்ள QR கோடு மூலம் மாணவர்கள் இதைக் கேட்கலாம்.

“சினிமா எனக்குத் தேவைப்படற பணத்தைத் தந்திடுது. ஆனால், சமூகம் சார்ந்து இது மாதிரி பணியாற்றுவதுதான் எனக்கு மன நிறைவு கொடுக்குது. இதற்கான முக்கிய காரணமாக கவிஞர் அறிவுமதியைத்தான் நான் சொல்வேன். அவருடன் இணைந்து பெண் சிசுக்கொலைக்கு எதிரான விழிப்புணர்வுப் பாடல் ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டோம். அந்தப் பாட்டைக் கேட்டு ஒருத்தர் போன் பண்ணி ‘என் நாலாவது குழந்தையும் பொண்ணா பொறந்துட்டா. ரொம்ப யோசனையா இருந்தது. ஆனால், உங்க பாட்டு என் மொத்த எண்ணத்தையும் புரட்டிப் போட்டுடுச்சு’ன்னு ரொம்ப உருக்கமாப் பேசினார். ஓர் உயிரைக் காப்பாற்றிவிட்ட அந்தத் தருணம், நான் இசையமைக்கத் தொடங்கியதற்கான அர்த்தத்தை முழுமையாக்குச்சு...’’

நெகிழ்ச்சியாகச் சொல்லி விடைதருகிறார் தாஜ்நூர்.