பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இசை என்னைக் கைவிடாது!”

சௌந்தர்யன்
பிரீமியம் ஸ்டோரி
News
சௌந்தர்யன்

‘சிந்துநதி பூ’ படம் வந்த புதிதில், அந்தப் படத்தின் பாடல்கள் கோயில் திருவிழாக்கள் தொடங்கி டவுன்பஸ் வரை ஒலித்துக்கொண்டிருந்தன.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவி, மதுரை ராமர் புண்ணியத்தில் ‘ஆத்தாடி என்ன உடம்பு’ பாடல் திடீர் ஹிட் ஆகி, சோஷியல் மீடியாக்களிலும் உலா வருகிறது. பாட்டுக்கு இசையமைத்த சௌந்தர்யன் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்ற நீண்ட தேடலில் சிக்கினார். சாலிகிராமத்தில் ரெக்கார்டிங் தியேட்டரில் இருப்பதாகச் சொன்னவரை, நேரில் சந்தித்தேன்.

‘`நான் காலேஜில் படிக்கும்போது ‘உன் பேர் என்ன?’ என்று வாத்தியார் கேட்டார். நான் ‘செளந்தரராஜன்’ என்று சொன்னேன். ‘ஓ... நீ டிஎம்எஸ் மாதிரி பெரிய பாடகனா?’ என்று எனக்குள் இசையை விதைத்தவர் அவர்தான்.

“இசை என்னைக் கைவிடாது!”

என் காலேஜ் பசங்களும் நானே எழுதி மெட்டுப்போட்டுப் பாடியதைக்கேட்டு ‘சினிமாவுக்குப் போனால் நீ பெரிய ஆளா வருவ’ என்று என்னை ஏற்றிவிட்டனர். தியாகராஜன் என்ற இசை ஆசிரியரிடம் சங்கீதமும், ஜெகதீஷ் என்பவரிடம் கிடாரும் கத்துக்கிட்டேன். சினிமா வாய்ப்புக்காக ஒவ்வொரு இயக்குநரையும் ஒவ்வொரு அலுவலகத்தையும் தேடித் தேடி அலுத்துக் களைத்துப்போனபோது ஒருநாள், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரைச் சந்தித்தேன். அவரது முதல் படம் ‘புரியாத புதிர்’ வெளியாகியிருந்த நேரம்.

‘முதல்படம் நல்லபேர்தான் வாங்கிக் கொடுத்திருக்கு. ஆனா கமர்ஷியலா பெரிசா ஒண்ணுமில்ல... நானே அடுத்து என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்’னு சொன்னார். அப்பவும் மனசைத் தளரவிடாம நான் எழுதி இசையமைச்ச பாடல்களைப் பாடிக் காண்பிச்சேன். பாடல் வரிகளை உள்வாங்கிக் கேட்டு ரசிச்சார்.

அடுத்ததா ரவிகுமார் சாரை சூப்பர் குட் பிலிம்ஸ்ல கூப்பிட்டாங்க. என்னையும் அவர் கூட்டிட்டுப்போய் ஆர்.பி.செளத்ரி சாரிடம் அறிமுகம் கொடுத்தார். ரவிகுமார் சாரிடம் பாடிக்காட்டினதைப் போலவே செளத்ரி சாரிடமும் பாடினேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ‘ ஓ நல்லா இருக்கே... இவரையே மியூசிக் டைரக்டரா போட்டுடலாம்’னு ரவிகுமார் சாரிடம் சொன்னார். ஒரு வழியா ‘சேரன் பாண்டியன்’ படத்துல ஒப்பந்தமானேன்.

மறுநாள் ஏ.வி.எம் ரெக்கார்டிங் தியேட்டரில் பாடல் பதிவு. ‘காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு...’ பாடலைப் பதிவுசெஞ்சப்ப அங்க இருந்தவங்க ‘இசை, பாட்டு எல்லாம் புதுசா இருக்கே...’ என்று ரவிகுமார் சாரிடமும், செளத்ரி சாரிடமும் பாராட்டித் தள்ளினாங்க. இளையராஜாவின் இசையில் உருவான ‘என் ராசாவின் மனசுல’, ‘சின்னத்தம்பி’ ரிலீஸான காலகட்டத்துல ‘சேரன் பாண்டியன்’ படமும் ரிலீஸாகி செம ஹிட் ஆச்சு. எனக்குப் பெரிய புகழைத் தேடிக்கொடுத்தது. அதன்பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் டைரக்‌ஷனில் வெளிவந்த ‘புத்தம் புது பயணம்’, ‘முதல் சீதனம்’, ‘முத்துக்குளிக்க வாரிகளா’ படங்களுக்கு நான்தான் இசையமைச்சேன். ஆனா அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகல.

‘சேரன் பாண்டியன்’ ஹிட் படம் கொடுத்தும் வெளி சினிமா கம்பெனில இருந்து யாரும் அழைக்கலையேன்ற வருத்தம் எனக்கு இருந்தது. இடையில் நாலு வருஷம் கழிச்சு ‘சிந்துநதி பூ’ படத்துக்கு இசையமைக்கிற வாய்ப்பை குஞ்சுமோன் சார் கொடுத்தார். ‘சிந்துநதி பூ’ படத்துக்கு எல்லாப் பாடலையும் வைரமுத்து சார் எழுதியிருந்தார். ‘அடிப்போடி உள்ளுக்குள்ளே போட்ட விதை முட்டி முட்டி முளைச்சு விடாதா...’, ‘அடியே அடி சின்னப்புள்ளே...’, ‘கடவுளும் நீயும் ஒரு தாய் பிள்ளை இருவரும் தனிமரம்தானே’ போன்ற பாடல்கள் எல்லாம் ஹிட்டாச்சு.

“இசை என்னைக் கைவிடாது!”

இதுவரைக்கும் 52 படத்துக்கும் மேல இசையமைச்சிருக்கேன். எவ்வளவு ஏற்றங்களும் மாற்றங்களும் வந்தாலும் இசைதான் என் வாழ்க்கை. இசை என்னைக் கைவிடாது. இப்போ ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ படத்துக்கு இசையமைச்சிட்டிருக்கேன். இளையராஜா வீட்டில் இருந்து கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா வந்தாங்க. ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து ஜி.வி.பிரகாஷ் வந்தார். என் வீட்டுல இருந்தும் என் மகன் இசையமைப்பாளரா விரைவில் வருவான்’’ என்று நம்பிக்கையோடு பேசியவரைப் புகைப்படம் எடுக்கத் தயாரானபோது, திடீரென முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

நீண்டநேரம் அவரை ஆசுவாசப்படுத்தி, பேசினேன். ``என் மனைவி அப்பவே எம்.டெக் படிச்சிட்டு டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் காலேஜுக்கு பிரின்ஸ்பலா இருந்தாங்க. எனக்கு இசைத்தொழிலில் சறுக்கல் ஏற்பட்டப்ப எல்லாம் அவங்கதான் தாங்கிப்பிடிச்சாங்க. ரெண்டு மகன்கள். பெரியமகன் அமர்கீத் காலேஜ்ல பிலிம் டெக்னாலஜி படிக்கிறான். சின்னவன் கவிமொழியன். டிஏவி ஸ்கூல்ல பத்தாம் க்ளாஸ் படிச்சிட்டிருந்தான். பெரியவனை மியூசிக் டைரக்டராவும், சின்னவனை நீதிபதியாவும் ஆக்கணும்னு நானும், என் மனைவியும் பெரிய கனவுல மிதந்துட்டிருந்தோம். ஒருநாள் சின்னவனுக்கு கன்னத்துல திடீர்னு தேமல் வந்தது. சாதாரண தேமல்னு ஆரம்பத்துல விட்டுட்டோம். ஒருநாள் சந்தேகம் வந்து மெடிக்கல் செக்கப் செஞ்சப்ப கேன்சர்னு சொன்னாங்க. அப்படியே உடைஞ்சு போயிட்டோம்.

தனியார் ஆஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் பார்த்தோம். எந்த ரவிகுமார் சார் என்னை சினிமாவில் அறிமுகம் செஞ்சாரோ அவர்தான் உயிருக்குப் போராடின என் மகன் மருத்துவச் செலவுக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். ஆஸ்பிட்டல்ல என் மகன் தினமும் மரணத்துடன் போராடிக்கிட்டு இருந்தான். ஒவ்வொருநாளும் ‘அப்பா என் உயிரைக் காப்பாத்திடுவீங்களாப்பா’ன்னு கேட்கும்போதெல்லாம் ரணவேதனையா இருக்கும். நாலு வருஷத்துக்கு முன்னாடி அவன் இறந்துட்டான். சின்னவனுக்கு போட்டோ பிடிக்கறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் அவன் போன பிறகு நாலு வருஷமா நான் போட்டோவே எடுத்துக்கலை” என்று அழுதவரைத் தேற்றி, புகைப்படம் எடுத்தோம்.

இசைக்குப் பின்னால் எத்தனை சோகம்!