சினிமா
Published:Updated:

பப்பி லஹரி: தமிழ் சினிமாவில் இசைமேதைகள் இருக்கிறார்கள்!

 பப்பி லஹரி
News
பப்பி லஹரி

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர், பாடகர் பப்பி லஹரி (69) உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார். அவர் கடந்த டிசம்பர் மாதம் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி இது.

80-90களில் ஒரு காலம் இருந்தது. டிஸ்கோ எனப்படும் மேற்கத்திய இசை வடிவம் இந்திய சினிமாவில் உச்சத்தில் இருந்தது. ஜிகுஜிகு மெட்டாலிக் காஸ்ட்யூமில் கலர்கலர் வண்ணங்களைக் குழைத்த மேடைகளில் சிந்தஸைஸர் இசை பீட்டுகளில் இந்தியர்கள் டிஸ்கோ ஃபீவர் பிடித்துத் திரியக் காரணமாயிருந்த ஒரு இசையமைப்பாளர்தான் பப்பி லஹரி. பாலிவுட்டில் `பப்பி தா' என்று செல்லமாக அழைக்கப்படும் மியூசிக்கல் டான். 2022-ல் அவர் இசையமைக்க வந்து 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட பாலிவுட் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் குரல் உடைந்துபோயிருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். முதலில் செல்லமாகக் கோபப்பட்டார்.

``உங்களுக்கு யார் சொன்னது உடல்நிலை சரியில்லை என்று? நான் நன்கு ஆரோக்கியமாகவே இருக்கிறேன். நேற்றுகூட ஒரு ரெக்கார்டிங் போய்விட்டுதான் வந்திருக்கிறேன். பரவாயில்லை. விசாரிப்புக்கு நன்றிகள் கோடி.

பப்பி லஹரி
பப்பி லஹரி

உண்மையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாத் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். என் ரசிகர்கள், குடும்பத்தினரின் பிரார்த்தனைகளாலும் அன்பாலும் மீண்டு வந்தேன். கொஞ்சம் பெரிய உடல்வாகு கொண்டவன்தான் என்றாலும் எந்தத் தீய பழக்கமும் எனக்கில்லை என்பதால் 69 வயதிலும் நன்கு ஆரோக்கியமாகவே இருக்கிறேன். வதந்தி பரப்பியவர்களுக்குக் கொஞ்சம்கூட இதயம் இருப்பதில்லை. அமிதாப் பச்சன்கூட வதந்தியை நம்பி வீட்டுக்கு வந்தார். `70 வயதுக்கு மேல்தான் வதந்தி பரப்புவார்கள். உங்களுக்கு இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள் பப்பி' என்று சொன்னார்..!’’

``இந்தியாவின் டிஸ்கோ கிங் என்றழைக்கப்படும் உங்களுடைய வாழ்க்கையை பயோபிக்காக எடுக்கப் போகிறார்களாமே?’’

``நிறைய பேர் கேட்கிறார்கள். எங்கோ மேற்கு வங்கத்தில் பிறந்து மும்பையில் கொடிநாட்டுவதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. இந்தியாவிலேயே மிக இளம் வயதில்... என்னுடைய 19 வயதில் பாலிவுட்டில் இசையமைப்பாளரானேன். மூன்று வயதில் மிருதங்கம் வாசித்திருக்கிறேன். இந்தியாவின் அனைத்து மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். என் வாழ்க்கை அடுத்த தலைமுறையினருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தால் மகிழ்ச்சிதான். சல்மான் கான் கூட `பப்பிதா நான்தான் உங்கள் பயோபிக்கில் நடிப்பேன்!' என உரிமையாகக் கலாய்ப்பார். பார்ப்போம் யார் அதைச் செய்கிறார்கள் என்று!’’

``இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இசையமைத்தி ருந்தாலும் தமிழில் ஏன் நிறைய பண்ணவில்லை?’’

``பாலிவுட்டுக்கு சரிசமமாக இங்கு பெரிய மியூசிக்கல் ஜீனியஸ்கள் இருக்கிறார்கள். எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான் என மிகத் திறமையான ஆட்கள் கோலோச்சிய, கோலோச்சும் சினிமா உங்களுடையது. ஆனாலும், இளையராஜாவின் ஆரம்பக்காலங்களில் அவரின் இசை இங்கு பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய வேளையிலும்... அதாவது அவர் உச்சத்தில் இருந்த சமயத்திலும் என்னுடைய ஒரிஜினல் இந்தி ஆல்பங்களைக் கேட்டு மகிழ்ந்த ரசிகர்களும் எனக்கு இங்கு உண்டு. இளையராஜா நிச்சயமாய் கடவுளின் ஆசி நிறையப் பெற்றவர். அவரைத் தவிர்த்து தேவர் பிலிம்ஸின் படங்களில் என்னை இங்கு கமிட் செய்ததே என்னுடைய சாதனைதான். மும்பையில் அப்போது நான் ரொம்பவே பிஸியாக இருந்ததால் சென்னைக்கு வர இயலவில்லை. இளையராஜா 80களில் இங்கு செய்தது மிகப்பெரிய இசைப்புரட்சி! ரஹ்மான் நம் இசையை உலக அரங்கிற்குக் கொண்டு சேர்த்திருக்கும் உன்னதமான கலைஞன்! அதை ‘குரு’ படத்துக்காக அவர் இசையில் நான் பாடிய தருணத்தில் உணர்ந்தேன்... அமைதி, திறமையின் மொத்த உருவம் ரஹ்மான்! இன்னொரு அற்புதமான ஒரு நண்பர் எனக்கு சென்னையில் இருந்தார். என் இசைக்குத் தமிழ் உருவம் கொடுத்தவர் அவர். அவரை இழந்தது என் வாழ்வில் துயரமான தினங்களில் ஒன்று. எஸ்.பி.பாலசுப்ரமண்யம்தான் அவர். அவரைப்போல பணிவான மனிதரை உலகில் எங்குமே காண முடியாது. இறைவனின் திருவடியில் இளைப்பாறிக்கொண்டிருப்பார்!’’

பப்பி லஹரி
பப்பி லஹரி

``பப்பி லஹரி என்றதும் எங்கள் நினைவுக்கு வருவது நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகள்தான். ஏதேனும் காரணங்கள் உண்டா?’’

``நான் பாப் கலைஞன் எல்விஸ் பிரஸ்லீயின் ரசிகன். அவரது வித்தியாசமான நடை உடை பாவனை என்னை அவர்பால் ஈர்த்தது. நாமும் அவரைப்போல ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்து தங்க நகைகளும் கூலிங் கிளாஸும் அணிந்து கொண்டேன். மொத்தம் 754 கிராம் தங்கம் அணிந்திருப்பேன். இதில் ஒரு கிராம் குறைந்தால்கூட ஏதோ ஒரு கை இல்லாதது போல் இருக்கும். டாக்டர்களும் கொஞ்சம் நகைகளைக் குறைத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் எக்ஸ்ட்ராவாக அணிந்திருந்த பிளாட்டினங்களைத் தவிர்த்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை என்னுடைய அதிர்ஷ்டத்துக்குக் காரணம் நான் அணிந்திருக்கும் தங்கம்தான். நான் இத்தனை நகைகள் அணிந்திருந்தாலும் இதை என் கௌரவமாக, பெருமையாக நினைத்துக்கொள்வதில்லை. ஏழைகளுக்கு உதவ என் பெயரில் சாரிட்டி அமைத்திருக்கிறேன். நாள்தோறும் அன்னதானம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். அதுவேறு, இதுவேறு. ஓல்டானாலும் கோல்டு என்னிடம் குறையாது!’’

``நடுவில் பா.ஜ.க-வில் சேர்ந்தீர்களே..?’’

``இப்போதும் பா.ஜ.க-வில் உறுப்பினராக இருக்கிறேன். 2014-ல் பா.ஜ.க சார்பாக மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் நின்றேன். சொந்த மண்ணில் மக்கள் ஜெயிக்க வைப்பார்கள் என நினைத்தேன். ஆனால் தோல்விக்குப் பிறகு ஆக்ட்டிவ் பாலிட்டிக்ஸில் இல்லை. பா.ஜ.க ஒட்டுமொத்த இந்தியாவை ஒன்றுசேர்க்கும் ஒரே கட்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை!’’

பப்பி லஹரி
பப்பி லஹரி

``50 வருட இசை வாழ்க்கையில் நீங்கள் சாதித்த விஷயங்களாக எதை நினைக்கிறீர்கள்?’’

``303 படங்கள் செய்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான பாடல்கள். ஆனால் பெரிய சாதனையாக நான் எதையும் நினைக்கவில்லை. டிஸ்கோ கிங் என்று மக்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள். கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தியர்களை `யூ ஆர் ஃப்ரம் ஜிம்மி ஜிம்மி கண்ட்ரி?' என என்னுடைய பாப்புலரான 1982-ல் ரீலீஸான டிஸ்கோ டான்ஸர் படப் பாடலைப் பாடிக் கேட்கிறார்கள். 40 வருடங்கள் ஆனாலும் இன்னும் உலகம் முழுவதும் என் டிஸ்கோ பாடல்கள் மூலம் அதிர்வுகளை மக்களின் இதயத்தில் ஏற்படுத்தியிருக்கிறேன். என்னைப்போல பெங்காலியாகப் பிறந்து பாலிவுட்டில் ஆக்‌ஷன் ஸ்டாராகக் கலக்கிய மிதுன் சக்ரபர்த்திக்கு பாலிவுட்டில் பெரிய ஓப்பனிங் கொடுத்தது என் இசைதான். `நீ இல்லையென்றால் என் சினிமாவே இல்லை நண்பா!' என்று அவரே இதை எல்லா மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். இப்போதும் ஷாரூக், அமீர், சல்மான் என்னை அவர்களின் பாடல்களில் கேமியோ பண்ணச் சொல்லி அழைக்கிறார்கள். என் பேரன் ஸ்வஸ்திக் இப்போது ரெகோ பி என்ற பெயரில் ஆல்பம் பாட வந்துவிட்டான். அவனுடைய `பச்சா பார்ட்டி' ஆல்பம் செம ஹிட்! தோற்றத்தில் என்னைப்போலவே இருக்கும் பேரனைத்தான் என் நிஜ சாதனையாக; மாஸ்டர் பீஸாக நினைக்கிறேன்!’’