Published:Updated:

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் - சினிமா விமர்சனம்

வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேலு

வடிவேலு ரிட்டர்ன்ஸ் என்றதும் லாஜிக் எல்லாம் பார்க்காமல் இறங்கி ஆட நினைத்தது ஓகேதான். ஆனால் சிரிக்கவும் வைத்திருக்கலாமே?!

நாய்களைக் கடத்தி அதன் முதலாளிகளிடம் பணம் பறிக்கும் நாய் சேகர், தன் குடும்பத்துக்குச் சொந்தமான நாயையே திருடச் சென்றால் என்னவாகும் என்பதே இந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.'

‘India's First Dog Kidnapper' என்ற அடைமொழியோடு நாய்களைக் கடத்திக் காசு பார்க்கிறார் வடிவேலு. ஒருமுறை தவறுதலாக, தாதாவான ஆனந்த்ராஜின் நாயைக் கடத்திவிட, அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் மூலம் வடிவேலு தன் ப்ளாஷ்பேக்கையும், தன் குடும்பத்துக்குச் சொந்தமான தெய்வ அம்சங்கள் நிறைந்த நாய் ஒன்று காணாமல்போனதைப் பற்றியும் தெரிந்துகொள்கிறார். அதன் பின்னர் ஆனந்த்ராஜிடமிருந்து தப்பித்தாரா, தன் குடும்ப நாயை மீட்டாரா என்பதை காமெடியாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சுராஜ்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் - சினிமா விமர்சனம்

தனது பிரபலமான படங்களின் ஓப்பனிங் ஷாட்களின் தொகுப்புடன் அரங்கம் அதிர அறிமுகமாகிறார் வடிவேலு. பழைய உடல்மொழி, நடிப்பு என எல்லாமே சிறப்பாகக் கூடிவந்தாலும், காமெடி என்று எழுதப்பட்ட எதுவுமே டேக் ஆஃப் ஆகாததால் மாண்டஸ் புயலில் மாட்டியதுபோலத் தவிக்கிறது வைகைப்புயலின் கதாபாத்திரம். ‘இப்ப இவங்கதான் என் ஃப்ரெண்ட்டு; இதான் என் ட்ரெண்ட்டு' என ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்ளிட்டவர்களுடன் கூட்டணி போட்டுக்கொண்டு அவர் களமிறங்க, அதற்கு இணையாகப் புதிதாக எதையும் யோசிக்காமல் பழைய டெம்ப்ளேட்டையே பின்பற்றுகின்றன காமெடி காட்சிகள். பழக்கப்பட்ட காமெடி தாதா பாத்திரம், ஆனாலும் ஆனந்த்ராஜின் நடிப்பு சுமாரான காட்சிகளைக்கூடக் கலகலப்பாக மாற்றியிருக்கிறது. வில்லன் ராவ் ரமேஷ் சில காட்சிகளில் மிரட்டுகிறார், பின்பு ஜோக்கராகி ஜோதியில் ஐக்கியமாகிறார்.

வடிவேலு ரிட்டர்ன்ஸ் என்றதும் லாஜிக் எல்லாம் பார்க்காமல் இறங்கி ஆட நினைத்தது ஓகேதான். ஆனால் சிரிக்கவும் வைத்திருக்கலாமே?! திரைக்கதை மட்டுமல்ல, காமெடி காட்சிகளும் யூகிக்கும் வண்ணமே எழுதப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் வடிவேலு - ரெடின் கிங்ஸ்லி கூட்டணி சிரிக்க வைத்தாலும், அதற்காகப் பல படு சுமாரான காமெடிகளை லாங் ஜம்ப்பில் தாண்ட வேண்டியிருக்கிறது. ஷிவானி, முனீஸ்காந்த், தங்கதுரை, பாலா, சச்சு, ராஜா ராணி கார்த்தி, மனோபாலா, ராமர் என ஒரு பிளேயிங் லெவனே இருந்தும் டெஸ்ட் மேட்ச் சுவாரஸ்யம்கூட படத்தில் இல்லை.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் - சினிமா விமர்சனம்

‘டீசன்ட்டான ஆளு', ‘அப்பத்தா' பாடல்களுடன் பின்னணி இசையிலும் ஆறுதலளிக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவுக்கும், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே-வுக்கும் படத்தில் புதிதாகச் செய்ய எதுவுமில்லை.

வைரல் ஆட்களைப் பிடித்து ஷிஃப்ட் முறையில் நடிக்க வைத்திருந்தாலும், காமெடி ஸ்க்ரிப்ட் என்ற பெயரில் பழைய பட்டாசையே வெடித்திருப்பதால் சிரிப்பு வெடிச் சத்தம் கேட்கவே இல்லை.