சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“இசையை வாழ்க்கையா ஏத்துக்கறது அழகான விஷயம்!”

டென்மா
பிரீமியம் ஸ்டோரி
News
டென்மா

இரஞ்சித் வரச் சொன்னதும் ஒரு தயக்கம் இருந்தது. `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படம் செய்திட்டிருந்த நேரம். இரஞ்சித் கூட ஒர்க் பண்றது ஒரு சௌகரியம்.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

`நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் இசைக்காக டென்மா மேல் பெரிய வெளிச்சம் விழுந்திருக்கிறது. அத்தனை பாடல்களிலும் புதுமையையும் கொண்டாட்டத்தையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அலைபேசியின் சிணுங்கல்களை அடுத்தடுத்து ஏற்று நன்றி சொல்கிறார் இசையமைப்பாளர் டென்மா. ``என்னங்க, `பேரின்பக் காதல்' பாட்டு இந்தப் போடு போடுதுன்னுதானே கேட்கப்போறீங்க. அது அப்படித்தான்'' என எப்போதுக்குமான இனிமையில் சிரிக்கிறார்.

``எப்படி இசைத்துறைக்கு வந்தீங்க...’’

``சின்ன வயதிலிருந்தே எனக்கு மியூசிக் பிடிச்சது. பாட முடிகிற அளவுக்கு ஞானம் இருந்தது. இந்தியாவில் மியூசிக் கத்துகிறது அதிக செலவைத் தருவதாக இருந்தது. இரண்டு வருஷம் லண்டனில் போய்ப் படிச்சேன். அப்பொழுது சினிமாவுக்கு வரும் எண்ணமே இல்லை. தனியிசையில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. வீடியோ கேம்ஸுக்கு மியூசிக் போட்டேன். `கோச்சடையான்' வீடியோ கேம்ஸுக்குக்கூட மியூசிக் போட்டது நான்தான். அப்புறம் கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ் வந்ததும் இயக்குநர் இரஞ்சித்தின் அறிமுகம் கிடைத்தது. `நீங்க ஏன் சினிமாவுக்கு வரக்கூடாது'ன்னு அழைத்ததும் அவர்தான்.

“இசையை வாழ்க்கையா ஏத்துக்கறது அழகான விஷயம்!”

இரஞ்சித் வரச் சொன்னதும் ஒரு தயக்கம் இருந்தது. `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படம் செய்திட்டிருந்த நேரம். இரஞ்சித் கூட ஒர்க் பண்றது ஒரு சௌகரியம். அலைவரிசையும் விருப்பமும் சேர்ந்த மாதிரி இருக்கும். நல்ல டைம் இருந்ததால் நல்ல மியூசிக் தர முடிஞ்சது. பாடல்கள் ஹிட் என்பதில் சந்தோஷம். சின்ன வயதிலிருந்தே இசையை விரும்பி வந்திருக்கேன். இதை ஒரு வேலையாகச் செய்ததே இல்லை. முழுக்க முழுக்க பணத்துக்காகவோ, யாருக்கும் கட்டுப்பட்டோ செய்யவில்லை. இசையில் இருக்கிறதும், அதையே வாழ்க்கையா ஏத்துக்கிறதும் ரொம்ப அழகான விஷயம்.''

``ஒரு நல்ல பாடலை உணர முடிவது எப்படி?’’

``உணர்வு மேலோங்கி இருக்கணும். நிறைய ஃப்ளாப் படங்களில்கூட நல்ல பாடல்கள் இருக்கு. நல்ல பாடல், கெட்ட பாடல்னு ஒண்ணும் கிடையாது. அது உங்களுக்குப் பிடிச்சிருக்கா, இல்லையா என்பதுதான் விஷயம். நல்ல பாடல்களுக்கு நல்ல தளம் அமைத்துக்கொடுக்கிறது மட்டும்தான் என் வேலை. ஒரு நல்ல பாடலை எத்தனை ஆண்டு கழித்துக் கேட்டாலும் சலிக்காமல் கேட்கணும். அதை உணர்ந்தாலே நல்ல பாடலுக்கான சூழல் வந்திடும். ஒரு வைரலான பாட்டு வேணும்னு செய்ததேயில்லை. அக்கறையாக ஒரு நல்ல பாடல் வரணும்னு செய்திருக்கேன். அப்படி ஹிட்டானது `நட்சத்திர'த்தின் பாடல்கள். இன்னும் சொல்லட்டுமா... நல்ல பாடல் அமையும் போது அதுவே ஹிட் பாடல் ஆகும்னு கட்டாயம் கிடையாது. ஹிட் ஆகும் பாடல் நல்ல பாடலாக இருக்கணும்னு அவசியம் கிடையாது. இரண்டும் வேற வேற. இதைத் தெளிவாகப் புரிஞ்சிருக்கேன்.’’

“இசையை வாழ்க்கையா ஏத்துக்கறது அழகான விஷயம்!”

``இப்ப அதிகமும் மனதில் தங்குகிற பாடல்கள் வருவதில்லைன்னு குறை இருக்கே!’’

``இப்ப எல்லாம் அவசரம். முதல் 10 செகண்டில் பாட்டு உங்களை இம்ப்ரஸ் பண்ணலைன்னா உடனே வேற பாட்டுக்குப் போயிடறாங்க. பெரிய நடிகர்கள் புரொமோஷனில் பாடலை உட்கார வைத்து விடுகிறார்கள். நல்ல பாடல்கள் நிறைய மறைஞ்சுபோயிருக்கு. பத்து வருஷத்துப் பாட்டெல்லாம் கேட்டுட்டு வரும்போது ``அடடா, இதெல்லாம் கவனத்திற்கே வரலையே'ன்னு கவலையாக இருக்கு. கொஞ்சம் ரசனை கெட்டுப்போய் இருக்கு. ஆனால் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது தான். மாறிடும். நம்பிட்டு அடுத்து போவோம்.''

``இது மாதிரி பாடல் போடணும்னு நினைச்ச பாட்டு உண்டா?’’

`` `புன்னகை மன்னன்' என்னை ரொம்ப பாதித்த ஆல்பம். கணக்கே இல்லாமல் கேட்டிருக்கேன். அந்தச் சமயம் நான் பிறக்கக்கூட இல்லை. அப்புறம்தான் கேட்டேன். ஒரு ஆல்பத்தில் இத்தனை ஜாலம் பண்ண முடியுமான்னு தெரியலை. `காலம் காலமாக', `மாமாவுக்குக் கொடும்மா', `கவிதை கேளுங்கள்', `ஏதேதோ', `என்ன சத்தம் இந்த நேரம்' இதெல்லாம் மறக்கவே முடியாது. `காலம் காலமாக' மாதிரி ஒரு பாடல் பண்ணணும்னு ஆசை. அந்தப் பாட்டு பாடின விதத்திலும், படத்தின் சூழ்நிலையிலும், இசையிலும் அப்படியே மனதை உலுக்கி எடுக்கும். அப்படி ஒரு வீரியத்தோடு சூழலும் கதையும் அமைஞ்சு அந்த மாதிரி ஒரு பாட்டு போடணும். எனக்கென்னவோ காதலும் இசையும் இல்லாம மனிதர்கள் வந்திட முடியாதுன்னு தோணுது.''