தி.மு.கவில் இருந்த ராதாரவி மீண்டும் அ.தி.மு.கவில் இணைவதற்குக் காரணமாக இருந்ததே இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாதான். `கொலையுதிர் காலம்' என்ற பெயரில் இந்தப் படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் ஆரம்பித்து, பின் பல நாள்கள் கிடப்பில் இருந்த படம் `கொலையுதிர் காலம்'. இந்தப் படத்தை பாம்பே நிறுவனத்திடமிருந்து வாங்கிய எக்ஸெட்ரா என்டர்டெய்ன்மென்ட் மதியழகன் தணிக்கை செய்து வெளியிடத் திட்டமிட்டும் ஜூன் 14 ம் தேதி ரிலீசாகும் எனவும் அறிவித்திருந்தார்.
சுஜாதா எழுதிய `கொலையுதிர் காலம்' நாவலின் உரிமையை 10 லட்சம் ரூபாய்க்கு சுஜாதாவின் மனைவியிடமிருந்து தனது தாயார் பெயரில் பெற்றுள்ளதாக 'விடியும் முன்' படத்தின் இயக்குநர் பாலாஜி குமார் கூறினார். அதனால், `கொலையுதிர் காலம்' என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது, காப்புரிமையை மீறிய செயல் எனப் படத்தை அந்தப் பெயரில் வெளியிட தடை உத்தரவு பெற்றிருந்தார் பாலாஜி குமார்.

இந்தத் தடையை நீக்கக்கோரி படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் படத் தலைப்புக்குக் காப்புரிமை இல்லாத காரணத்தினால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வெளியிட அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
`கொலையுதிர் காலம்' படம் வெளியாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் இந்த மாதத்திலே வெளியிட திட்டமிட்டு வருகிறது படக்குழு.