சினிமா
தொடர்கள்
Published:Updated:

நெஞ்சுக்கு நீதி - சினிமா விமர்சனம்

நெஞ்சுக்கு நீதி
பிரீமியம் ஸ்டோரி
News
நெஞ்சுக்கு நீதி

‘பெரியாரை வாசிப்பவருக்கு சாதிய வன்கொடுமை பற்றிக் கொஞ்சமும் தெரியாதா என்ன' போன்ற தர்க்கம் சார்ந்த கேள்விகள் தனி.

`இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்குறா?' என சமூகத்தில் நூற்றாண்டுகளாய்ப் புரையோடிப் போயிருக்கும் அவலத்தைப் புரிதல் இல்லாமல் அணுகும் கூட்டத்திலிருந்து வரும் ஒரு அதிகாரி, மற்றொரு பக்கம் தலைமுறை தலைமுறையாய் சாதிய அடக்குமுறைகளின் வடுக்களைச் சுமந்தபடி வாழ்ந்துவரும் ஒடுக்கப்பட்ட மக்கள் - இந்த இரு தரப்பையும் சட்டத்தின் பெயரால் இணைத்து நியாயம் சொன்னால் அதுதான் ‘நெஞ்சுக்கு நீதி.'

சர்வீஸில் சேர்ந்த மூன்றாவது நாளே தூக்கியடிக்கப்பட்டு பொள்ளாச்சிக்கு வருகிறார் ஏ.எஸ்.பி உதயநிதி. அதுநாள்வரை வெளிநாட்டில் படித்து வளர்ந்தவருக்கு சாதியத்தின் ஊற்றுகண்ணான கிராமங்களும் அவை தங்களுக்குள் புதைத்து வைத்திருக்கும் அடுக்குகளும் ஆச்சரியம் தருகின்றன. சரியாக அதேசமயம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் காணாமல்போகிறார்கள். அதில் இரண்டு பேர் பிணமாய்க் கிடைக்க, மூன்றாவது பெண்ணின் நிலை கேள்விக்குறி. சந்தேகக் கண்களோடு இந்த வழக்கை அணுகும் உதயநிதி அதைத் தன் பொறுப்பில் எடுத்து விசாரிக்க முயல, அவிழ்கிறது தீண்டாமையின் கோர முகம். எட்டுத் திக்கிலிருந்தும் வரும் முட்டுக்கட்டைகளைத் தாண்டி உதயநிதி அந்தக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது தொடங்கி, சாதியத்தில் மனிதத்திற்கு இடமில்லை என்பதுவரை உண்மைக்கு நெருக்கமாய் நின்று முகத்தில் அறைந்து சொல்கிறது படம்.

உதயநிதிக்கு ஆர்ப்பாட்டமில்லாமல் தேவைக்கேற்றபடி அளவாய் நடிக்கும் வேடம். மிக இயல்பாய்ப் பொருந்திப்போகிறார். சுற்றி நடப்பவற்றைப் பார்த்து பாடம் கற்று, முதிர்ச்சியோடு பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று போராடி என கனமான கதாபாத்திரம். அதைச் செம்மையாய்ச் செய்தவகையில் அவரின் சினிமா வாழ்க்கையில் ‘நெஞ்சுக்கு நீதி' முக்கியமான படம்.

நெஞ்சுக்கு நீதி - சினிமா விமர்சனம்

திரையில் எதிர்மறை கதாபாத்திரங்கள் மேல் அருவருப்பும் ஒவ்வாமையும் தோன்றுவதே அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த கலைஞர்களின் திறனுக்கு சாட்சி. இந்தப் படத்தில் அப்படி மெனக்கெட்டிருப்பது சுரேஷ் சக்ரவர்த்தி. காவல்துறையின் எதேச்சதிகாரம், சாதியத்தின் வன்மம் இரண்டையும் கலந்து அவர் மிரட்ட, பார்ப்பவர்களுக்குக் கோபம் பொங்குகிறது. பல ஆண்டுகளாய் அரசு இயந்திரத்தின் பரபரப்பில் நசுங்கி, ஏவலுக்குக் கீழ்ப்படிதலைத் தவிர வேறொன்றும் அறியாத அதிகாரி எப்படி இருப்பார்? அவரை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் இளவரசு.

மயில்சாமி, ஆரி, ஷாயாஜி ஷிண்டே, அப்துல் லீ, ரமேஷ் திலக், சரவணன் என கதாபாத்திரத் தேர்வுகள் அனைத்துமே பக்கா. அதற்காக தனியாக ஒருமுறை இயக்குநர் அருண்ராஜாவைப் பாராட்டலாம். தான்யா, ஷிவானி இருவரும் கதையை ஆங்காங்கே நகர்த்திச் செல்ல சின்னதாய்ப் பங்களித்திருக்கிறார்கள்.

வெளிப்பார்வைக்குப் பசுமையையும் அதனுள் மெளனமாய் உறைந்து போயிருக்கும் குரூரத்தையும் தன் கேமராக்கண்களால் நமக்குக் கடத்தி அதிர்ச்சியூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ். கனமான கதைக்கு சில இடங்களில் அமைதியும் சில இடங்களில் உருக்கும் பின்னணி இசையும் அவசியம். அதைச் சரியாக வெளிக்கொணர்ந்தவகையில் இசையமைப்பாளர் திபுவுக்கு வெற்றியே! இரண்டாம்பாதியின் சில இடங்களில் இசை அளவில் அதிகமாகி நம்மை திசைதிருப்புவதை மட்டும் தவிர்த்திருக்கலாம். அம்மண்ணின் வாழ்வியலைக் காட்டும் வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா கூட்டணியின் கலையமைப்பு அபாரம். ரூபனின் படக்கோவையும் விறுவிறுப்பை ஏற்றுகிறது.

படத்தின் தாக்கத்திற்கு மிக முக்கியக் காரணம் தமிழரசன் பச்சைமுத்துவின் வசனங்கள். ‘சட்டம்தான் இங்க தேசியமொழி', ‘சட்டமா, எங்களுக்கும் அதுக்கும் இங்க மரியாதை இருக்கா என்ன?' என ‘சினிமாதானே' என்று எளிதில் கடந்துபோக முடியாத கூரான அம்புகள் அவை.

இந்தியில் வெளியான `ஆர்ட்டிகிள் 15’ படத்தை அப்படியே தமிழ்ப்படுத்தாமல், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்ணுக்கு சத்துணவு சமைக்க அனுமதி மறுக்கப்பட்டது, கூண்டுக்குள் இருக்கும் பெரியார், அம்பேத்கர் சிலை என இங்கே நடந்ததை, நடப்பதைத் திரைக்கதையில் கோத்து மண்ணுக்கேற்ற மொழியில் அரசியல் பேசி கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். விசாரணையின்போது மற்ற போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் போய் விசாரிக்க, தனித்து வாசலில் நிற்கும் இளவரசு, ஆளைப் பார்த்து அவர் கொண்டுவரும் தண்ணீரைக் கையால் தொடாத வட இந்திய சி.பி.ஐ அதிகாரி, ‘உண்மையில் விஷம் எது' என்பதை உணர்த்த வரும் பாம்புகள், நாய்களை பெயர் சொல்லி அழைத்துவிட்டு மனிதர்களை ‘அதுங்க’ என அஃறிணையில் விளிக்கும் ஆணவ அதிகாரி என்று சின்னதும் பெரிதுமாய் ஏகப்பட்ட அழுத்தமான விவரணைகள். சாதியைப் பற்றிய உரையாடலை சமரசமோ, உறுத்தலோ இன்றிக் கட்டமைத்த விதத்தில் தெரிகிறது அவரின் சாமர்த்தியம். காட்சிமொழியாய் அரசியலைப் பார்ப்பவர்களுக்குக் கடத்தும்போது அது நிகழ்த்தும் தாக்கம் மிக அதிகம் என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறது படக்குழு.

நெஞ்சுக்கு நீதி - சினிமா விமர்சனம்

மூலக்கதையில் இருந்த ஹீரோயிசத் தன்மையையும் வெகுவாகக் குறைத்து, ‘சட்டம்தான் ஹீரோ' எனத் தமிழில் அதன்பிடியை இறுக்கிக் கட்டியிருக்கிறார்கள்.

அரசியல் கட்சி சார்ந்த காட்சிகளை கவனமாய்த் தவிர்த்திருப்பது, ‘எல்லாமே சுயலாபத்திற்காகத்தான்' என மொத்தமாய் எல்லா அமைப்புகளையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது போன்ற இடறல்களும் இருக்கின்றன. ‘பெரியாரை வாசிப்பவருக்கு சாதிய வன்கொடுமை பற்றிக் கொஞ்சமும் தெரியாதா என்ன' போன்ற தர்க்கம் சார்ந்த கேள்விகள் தனி.

ஆயினும் பல்லாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பை, உரிமையைச் சுரண்டி அவர்களை நசுக்கிவரும் சாதிய கொடுஞ்சக்கரத்திற்கு இங்கிருக்கும் ஒவ்வொருவருமே அச்சாணிகள் என்பதை உணர்த்தி அதற்கான தீர்வாய் சட்டத்தை முன்வைத்து நம் நெஞ்சுக்கொரு நீதி சொல்வதால் இது முக்கியப் படைப்பாகிறது.