
இப்படி விமர்சிக்கப்பட்ட சூர்யாதான் இன்றைக்கு கோலிவுட்டின் உச்சத்தில்..!
நேருக்கு நேர்
தனக்கென்று தனி ஸ்டைல் அமைத்துக்கொண்டு அழுத்தமாகப் படம் பண்ணிக் கொண்டிருந்தவர் வஸந்த். அதிரடியான ராப் டான்ஸ் மற்றும் இரண்டு ஹீரோக்கள் என்ற லேட்டஸ்ட் வரவுகள் சிலவற்றால், அந்த 'வஸந்தகாலம்' சற்று திசை மாறிப் போயிருப்பது இந்தப் படத்தில் கண்கூடு! ஆரம்பத்தில் ரகுவரன் - சாந்திகிருஷ்ணா தம்பதி சண்டை போட்டுக்கொண்டு பிரிவதை இயல்பாகக் காண்பித்துவிட்டு, தொடரும் சம்பவங்களை வியப்பேற்படுத்தும் திருப்பங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக நகர்த்திக்கொண்டு போனதுதான் பிரச்னை!

புது நாயகன் சூர்யா வரவு நல்வரவாகுக!
ஆனால் படப்பிடிப்புக்கு அப்பா சிவகுமார் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறாரோ என்பது போல சூர்யா முகத்தில் ஏதோ ஒரு கூச்சம்! மென்மையான, இரக்கமேற்படுத்தும் முகம் அவருக்கு இருக்கிறது. அதை நினைவில் நிறுத்தி மேலும் புத்திசாலித்தனமாக ஹோம்வொர்க் செய்துகொண்டு அவர்அடுத்த படத்துக்குப் போவது நல்லது! டைரக்டருக்கு நான்கு தூண்கள் இந்தப் படத்தில்! மிடில் கிளாஸ் அரசு ஊழியராக வந்து effortless ஆன நடிப்பைக் காட்டும் ரகுவரன்... அலட்சியமான குரலில் இளமையான வில்லத்தனத்தை தெனாவட்டாகக் காட்டி அசத்தியிருக்கும் கரண். திருவிழா களேபரத்தில் தொலைந்துபோய் திண்டாடும்போது, இது நடிப்பா அல்லது நிஜமா என்கிற அளவுக்குச் சந்தேகம் ஏற்படுத்தும் குழந்தை ஜெனீபர்... வித்தியாசமான இனிமையோடு ஒவ்வொரு பாட்டுக்கும் இசையமைத்திருக்கும் தேவா...

இவர்களுக்கு முறையே நாம் சொல்வது - பலே! சபாஷ்! வெல்டன்! கீப் இட் அப்! இரண்டு ஹீரோக்கள் மோதிக்கொள்வதை வேறு ஒரு படத்தோடு ஒப்பிடுவார்கள் என்று தெரிந்தும் மெனக்கெட்டு அதே ஸ்டைலில் தண்ணிர் சண்டையையும் சேர்த்திருக்க வேண்டுமா?! 'நா ஒரு தப்பு பண்ணிட்டேன்' - படத்தில் ரகுவரன் பேசுகிற டயலாக் இது அதென்னவோ வஸந்த் குரல் மாதிரி கேட்கிறது!
- விகடன் விமர்சனக் குழு