Published:Updated:

நெற்றிக்கண்: பாலசந்தர் + விசு + எஸ்.பி.முத்துராமன் கூட்டணி - பிளேபாய் சக்ரவர்த்தியாக மிரட்டிய ரஜினி!

நெற்றிக்கண்

இயக்குநர் பாலசந்தரின் ‘கவிதாலயா புரொடக்ஷனில்’ உருவான முதல் திரைப்படம். இது. இதற்குத் திரைக்கதை எழுதியவர் பாலசந்தர். கதை – வசனம் விசு. இரண்டு ஜாம்பவான்களின் முத்திரைகளும் பல காட்சிகளில் வெளிப்பட்டிருக்கும்.

Published:Updated:

நெற்றிக்கண்: பாலசந்தர் + விசு + எஸ்.பி.முத்துராமன் கூட்டணி - பிளேபாய் சக்ரவர்த்தியாக மிரட்டிய ரஜினி!

இயக்குநர் பாலசந்தரின் ‘கவிதாலயா புரொடக்ஷனில்’ உருவான முதல் திரைப்படம். இது. இதற்குத் திரைக்கதை எழுதியவர் பாலசந்தர். கதை – வசனம் விசு. இரண்டு ஜாம்பவான்களின் முத்திரைகளும் பல காட்சிகளில் வெளிப்பட்டிருக்கும்.

நெற்றிக்கண்
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – 'நெற்றிக்கண்’.

ரஜினி நடித்த ‘மாஸ்’ படங்கள் நிறைய உண்டு. ‘முள்ளும் மலரும்’ போன்ற ‘கிளாஸ்’ படங்களும் சிலது உண்டு. ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட சில திரைப்படங்களும் இருக்கின்றன. அவை அடிப்படையில் கமர்ஷியல் திரைப்படங்கள்தான் என்றாலும் கதையம்சத்திற்காகவும், ரஜினியின் வித்தியாசமான நடிப்பிற்காகவும் அந்தத் திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தில் எப்போதும் நிற்கும். 1981-ல் வெளியான ‘நெற்றிக்கண்’ அப்படிப்பட்டதொரு திரைப்படம்.

ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ரஜினி ஆகி, பிறகு சூப்பர் ஸ்டார் ஆகவே மாறிவிட்டாலும், வில்லத்தனம் கலந்த அவரது நடிப்பிற்கு எப்போதுமே வரவேற்பும் நிரந்தர வசீகரமும் உண்டு. பிற்காலத்தில் அவர் நடித்த வேட்டையன் (சந்திரமுகி), சிட்டி (எந்திரன்) போன்றவற்றை இதற்கு உதாரணம் சொல்லலாம். எனவே ஹீரோ x வில்லன் என்று இரண்டு பாத்திரங்களையும் ரஜினியே ஏற்கும் படங்கள் வெகுவாக ரசிக்கப்பட்டன.

நெற்றிக்கண்
நெற்றிக்கண்

சக்ரவர்த்தியாக அதகளம் செய்திருந்த ‘அப்பா’ ரஜினி

‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் ‘அப்பா’ ரஜினி’யாக சக்ரவர்த்தி என்கிற பாத்திரத்தில் பெண் பித்தராகத் துள்ளலான நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்திய ரஜினியை எவராலும் மறக்க முடியாது. படத்தின் முக்கிய சிறப்பம்சம் என்று இந்தப் பாத்திரத்தைச் சொல்லலாம். அப்பா, மகன் என்று இரண்டு பாத்திரங்களுக்கும் கணிசமான வித்தியாசத்தை நடிப்பில் வழங்கியிருந்தார் ரஜினி. "டப்பிங் பேசும் போது கூட வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக இரண்டு பாத்திரங்களுக்கும் வெவ்வேறு நாள்களில் பேசினார்" என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

இந்தத் திரைப்படத்தில்தான் முதன்முதலில் ‘நிறைய மாஸ்க்’ ஷாட்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அதுவரைக்குமான திரைப்படங்களில், இரட்டை வேடம் என்றால் மிக முக்கியமான க்ளோசப் ஷாட்களில் மட்டுமே ‘மாஸ்க் ஷாட்’ முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில், இரண்டு ரஜினிகளும் தோன்றும் காட்சிகளில் ஏறத்தாழ எண்பது சதவிகிதத்துக்கு இந்த உத்தியே பயன்படுத்தப்பட்டது. இந்த நோக்கில் ஒளிப்பதிவாளர் பாபுவின் திறமையையும் உழைப்பையும் பாராட்ட வேண்டும்.

இயக்குநர் பாலசந்தரின் ‘கவிதாலயா புரொடக்ஷனில்’ உருவான முதல் திரைப்படம். இது. இதற்குத் திரைக்கதை எழுதியவர் பாலசந்தர். கதை – வசனம் விசு. இரண்டு ஜாம்பவான்களின் முத்திரைகளும் பல காட்சிகளில் வெளிப்பட்டிருக்கும். இப்படியொரு கதையை தன்னால் இயக்க முடியுமா என்று எஸ்.பி.முத்துராமனுக்கு தயக்கம் ஏற்பட, பாலசந்தர் தைரியம் தந்து இயக்கச் சொல்லியிருக்கிறார். ரஜினிகாந்த்தின் வெற்றிப் படங்களில் ஒன்றாக ‘நெற்றிக்கண்’ அமைந்தது. குறிப்பாக நெகட்டிவ் கேரக்ட்டர்தான் என்றாலும், ‘சக்ரவர்த்தியின்’ ஸ்டைலான குறும்புகளுக்கும் நடிப்புக்கும் தியேட்டரில் நிச்சயம் விசில் பறந்திருக்கும்.

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனின் கதை

கோயம்புத்தூரில் மிகப்பெரிய செல்வந்தராக உள்ளவர் சக்ரவர்த்தி. கடுமையான உழைப்பினால் தன்னுடைய வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பியவர். தனது குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் உள்ளவர். தன்னுடைய கம்பெனியில் அவர்களையும் இயக்குநர்களாக நியமித்துள்ளார். ஆனால் சக்ரவர்த்தியின் ஒரே பலவீனம், பெண் பித்து. ஆம், ஓர் ஆணுக்குச் சேலை கட்டினால் கூட நின்று வெறித்துப் பார்க்கும் அளவிற்கு சபலக்காரர். தன்னுடைய செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்திப் பல பெண்களிடம் உல்லாசமாக இருப்பவர். ‘பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களே’ என்கிற கூச்சம் சிறிதும் இன்றி தன் லீலைகளைத் தொடர்பவர்.

நெற்றிக்கண்
நெற்றிக்கண்

சக்ரவர்த்தியின் லீலைகள் பற்றி அவரது மனைவி மீனாட்சிக்கு நன்கு தெரியும். இது குறித்த மனப்புழுக்கத்திலும் உளைச்சலிலும் அவர் இருக்கிறார். சக்ரவர்த்தியின் மூத்த மகன் சந்தோஷ். (இளைய ரஜினி). ஒரு கட்டத்தில் தந்தையின் களியாட்டங்களை அறிய நேரும் அவன், தந்தையைத் திருத்துவதற்காக ஆடும் சதுரங்க ஆட்டம்தான் இந்தத் திரைப்படம். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனின் கதை இது. இதற்காக ஆடப்படும் நாடகம் மிகையாக இருந்தாலும் படத்தின் ஓட்டத்திற்குச் சுவாரஸ்யமான அடித்தளத்தைத் தந்தது.

பாலசந்தர் + விசு = சிறந்த கூட்டணி

பெண் சபலக்காரராக ‘சக்கரவர்த்தி' பாத்திரத்தில் ரகளை செய்துள்ளார் சீனியர் ரஜினி. கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு முதுகைச் சற்று வளைத்து பணக்கார பந்தாவுடன் இவர் செய்யும் காரியங்கள் சுவாரஸ்யமானவை. பாலசந்தர் எழுதிய திரைக்கதை என்பதால், ‘மூன்று முடிச்சு’, ‘அபூர்வ ராகங்கள்’ போன்றவற்றின் வாசனையை இதில் உணர முடிந்தது. இதே போன்ற பெண் பித்தன் பாத்திரத்தில் கமல்ஹாசனும் நடித்துள்ளார். அது பாலசந்தர் இயக்கிய ‘மன்மத லீலை’.

சுவாரஸ்யமான திரைக்கதையைப் போலவே விசுவின் வசனமும் பல இடங்களில் குறும்பாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது. ‘கோவிலுக்கு நன்கொடை தரணும்’ என்று செக்ரட்டரி சொல்லும் போது ‘ஆண்டவன்தான் நமக்குத் தரணும். நாம ஆண்டவனுக்குத் தரக்கூடாது. அது அவனை அவமானப்படுத்தற மாதிரி’ என்று நக்கலாகச் சொல்வார் சக்ரவர்த்தி. “சார்... அந்தக் கோயிலோட தர்மகத்தா எம்.எல்.ஏ’ என்று சொல்லப்பட்டதும் சற்று ஜெர்க் ஆகி ‘ஆண்டவனைக் கூட பகைச்சுக்கலாம். அரசியல்வாதியை பகைச்சுக்கவே கூடாது’ என்று சொல்லி நன்கொடைக்கு அனுமதி அளிப்பார்.

இது போல விசுவின் வசனங்கள் பல இடங்களில் ‘நச்’ என அமைந்திருந்தன. தன்னுடைய மகனே தனக்குப் பாடம் சொல்லும் போது “நீ உபதேசம் பண்ணினா கைக்கட்டி நிக்கற அந்த ஈஸ்வரன் இல்லடா. நான் கோடீஸ்வரன்...” என்று எகத்தாளமாகச் சொல்லுவார் சக்ரவர்த்தி. சீனியர் ரஜினி இரவில் வெளியில் செல்ல முடியாதவாறு மெயின் கதவை மகன் பூட்டி விட "ஆட்டம் போடாம சாவியைக் கொடு...” என்று அப்பா மிரட்ட “உங்க ஆட்டத்தை அடக்கத்தான் சாவி கொடுக்கறேன்" என்று மகன் பதிலடி தருவான்.

நெற்றிக்கண்
நெற்றிக்கண்

ரஜினியோடு போட்டிப் போட்டு நடித்த சரிதா

“என் பலவீனத்தோட விளையாடாத... உன் அம்மாவைக் கூப்பிடு... இ்ப்பவே பேசிடலாம்” என்று தந்தை குதிக்க “உங்க பொண்ணையும் கூப்பிடறேன். அவ கிட்டயும் நீங்க எங்க போறீங்கன்னு சொல்லிடுங்க” என்று மடக்குவான் மகன். தந்தையாகவும் மகனாகவும் பல காட்சிகளில் அதகளம் செய்திருந்தார் ரஜினி. ஆனால் என்னதான் கெட்ட கேரக்ட்டராக இருந்தாலும், தந்தை ரஜினிதான் பல காட்சிகளில் ஓவர்டேக் செய்துள்ளார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

சக்ரவர்த்தியின் நிறுவனத்தில் பணிபுரிவதற்காகச் சேர்பவர் சரிதா. பெண் சபலக்காரரான முதலாளி, ஒரு சந்தர்ப்பத்தில் இவரையும் தவறான நோக்கத்தில் தொட ‘பளீர்’ என்று அறைந்து விடுவார் சரிதா. அதைச் சமாளிப்பதற்காக சக்ரவர்த்தி செய்யும் நாடகமும், அந்தச் சமயத்தில் அவர் வெளிப்படுத்தும் உடல்மொழியும் இருக்கிறதே...?! கலக்கல்.

என்றாலும் ஒரு சூழலில் சரிதாவை அடைந்து விடுவார் சக்ரவர்த்தி. பிறகு பணக்கார தோரணையுடன் இவர் சொல்லும் அதே வசனங்களை, இன்னொரு சந்தர்ப்பத்தில் சரிதா திருப்பிச் சொல்லும் காட்சி ரகளையாக இருக்கும். இது போன்ற சூழல்களுக்கு வசனம் எழுதுவதில் விசு ஒரு விற்பன்னர். “நான் சிங்கம்... நீ கொசு” என்று முதலாளி மிரட்ட “சிங்கத்தை வலை போட்டு பிடிக்கறோம்... ஆனா கொசுவிற்குப் பயந்து நாமதான் வலைக்குள்ள இருக்கிறோம்” என்று சரிதா தரும் பதிலடி அசத்தல் ரகம். ‘ராதா’ என்கிற துணிச்சலான பாத்திரத்தைத் திறமையாகக் கையாண்டிருந்தார் சரிதா.

கவுண்டமணி – லட்சுமி – சரத்பாபு - விஜயசாந்தி

ஆரம்பக்கால கெச்சலான கவுண்டமணியை இதில் பார்க்கலாம். அப்போதே தனது நக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் கவுண்டர். முதலாளிக்கு கார் டிரைவர் வேலை பார்த்தாலும் பெண்களை சப்ளை செய்பவர் இவர்தான். பிறகு சக்ரவர்த்திக்கே ‘சம்பந்தி’யாக வந்து அவரைப் போலவே பணக்காரத்தன்மையுடன் தடல் புடலாக இவர் நடந்து கொள்ளும் காட்சிகள் வேடிக்கையானவை.

நெற்றிக்கண்
நெற்றிக்கண்

ரஜினிகாந்த்தின் படங்களில் துரோகம் செய்யும் நண்பராக எப்போதும் வருபவர் சரத்பாபு. இதில் ஒரு மாறுதலுக்கு ரஜினியின் மருமகனாக வருகிறார். ஒரு கான்டிராக்ட்டைக் கைப்பற்றுவதற்காக சரத்பாபுவிற்குப் பெண் சப்ளை செய்வார் ரஜினி. பின்னர் இதே சரத்பாபுதான் தனக்கு வரப்போகிற மருமகன் என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைவார். ‘மாமா’ என்று இரட்டை அர்த்தத்தில் சரத்பாபு அழைக்கும் போதெல்லாம் எரிச்சல் கொள்வார்.

சீனியர் ரஜினியின் மனைவியாக லட்சுமி. வழக்கமாகத் துணிச்சலான பாத்திரங்களில் பிரமாதமாக நடிப்பவர். ஆனால் இதில் கணவனுக்கு கீழ்ப்படிந்த சராசரி மனைவியின் பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார். மகன் நடத்திக் கொண்டிருக்கும் நாடகம் குறித்து லட்சுமியை அடித்து அடித்து விசாரிப்பார் அப்பா ரஜினி. மிக உணர்ச்சிகரமான முறையில் இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ரஜினியின் மகளாக விஜயசாந்தி நடித்திருந்தார்.

மகனை ஓவர்டேக் செய்யும் அப்பா

அப்பாவைத் திருத்துவதற்காக ஜுனியர் ரஜினி செய்யும் ‘செக்மேட்’ நாடகங்களும் திருப்பங்களும் அருமையாக இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் சீனியர் ரஜினி முந்திக் கொண்டு மகனைப் பதிலுக்கு மடக்கும் விதம் அதை விடச் சிறப்பாக இருக்கும். மகனின் காதலைத் தான் கண்டுபிடித்துவிட்ட விதத்தை, கைகளில் ‘நன்றி’ என்று எழுதிக் காண்பிக்கும் காட்சியில் நிச்சயம் தியேட்டர் அதிர்ந்திருக்கும். மிக ரகளையான காட்சி அது.

நெற்றிக்கண்
நெற்றிக்கண்
ஜூனியர் ரஜினியின் காதலியாக மேனகா. ஓரமாக வந்து நின்று கண்கலங்கி விட்டுப் போகும் சொற்பமான காட்சிகள்தான் இவருக்கு. (இவர் கீர்த்தி சுரேஷின் அம்மா என்பது 2கே கிட்ஸுக்கான தகவல்.)

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. இதன் ஆல்பத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றுமே சிறப்பானது. குறிப்பாக ரஜினி - மேனகா டூயட் பாடலான ‘ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்...’ இன்றைக்கும் கூட ரசித்துக் கேட்கக்கூடிய மிக இனிமையான பாடல். ஜேசுதாஸூம் எஸ்.ஜானகியும் மிக அருமையாகப் பாடியிருந்தார்கள்.

சக்ரவர்த்தியின் கேரக்ட்டரை மிகக் குறும்பாகப் பதிவு செய்யும் பாடல் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை...' பார்க்கும் பெண்களையெல்லாம் அவர் எப்படி மடக்குவார் என்பது சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் பாடலை எஸ்.பி.பி. அட்டகாசமாகப் பாடியிருந்தார். ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு’ என்பது இன்னொரு அருமையான பாடல். கர்னாடக இசையையும் மேற்கத்தியப் பாணியையும் ஒரு கச்சிதமான கலவையில் தந்திருந்தார் ராஜா. மலேசியா வாசுதேவனும் சுசிலாவும் இந்தப் பாடலின் கேட்பனுபவத்தை சுவாரஸ்யப்படுத்தியிருந்தார்கள். வாசுதேவனும் சைலஜாவும் இணைந்து பாடிய ‘ராஜா... ராணி...' பாடல் என்பது களியாட்டப்பாடல் என்றாலும் அற்புதமான இசையில் குழைத்து விருந்து படைத்திருந்தார் ராஜா.

'நெற்றிக்கண்' படத்தில் மேனகா
'நெற்றிக்கண்' படத்தில் மேனகா

ரஜினியின் இமேஜை ஒவ்வொரு படத்திலும் உயர்த்தியதில் எஸ்.பி.முத்துராமனுக்குப் பெரும் பங்குண்டு. இந்தப் படத்திலும் அதைச் சாதித்திருந்தார். குறிப்பாக ‘சக்ரவர்த்தி’ கேரக்ட்டரை அவர் சித்திரித்த விதம் அசத்தலானது. அப்பா ரஜினி கண்விழிக்கும் போது எதிரே கவர்ச்சிப்படம் இருக்கும். இதற்கு முரணாக மகன் கண்விழிக்கும் போது கடவுளின் படம் இருக்கும். இந்த ஆரம்பக்காட்சி தொடங்கிப் பல இடங்களில் முத்துராமனின் ‘டைரக்ட்டோரியல் டச்’ இருந்தது. சக்ரவர்த்தி பெண்களை மடக்கும் காட்சிகளில், பில்லியர்ட்ஸ் மேஜையின் பாயின்ட்டில் பந்து விழும். ஆனால் சரிதாவிடம் கன்னத்தில் அறை வாங்கும் போது பந்து தவறிப் போய்விடும்.

படத்தின் மைய நாடகமும் திருப்பங்களும் நம்பமுடியாத அளவிற்கு மிகையாகப் பயணித்தாலும் இயக்கப்பட்ட விதத்தின் மூலம் சுவாரஸ்யம் கூட்டப்பட்டிருக்கும். இதன் கிளைமாக்ஸ் இன்னமும் கூட அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கலாம். சட்டென்று முடிந்தது மாதிரி இருந்தது.

நெற்றிக்கண்
நெற்றிக்கண்
என்னதான் பல திரைப்படங்களில் ரஜினியை ஹீரோவாக நாம் பார்த்திருந்தாலும், நெகட்டிவ் ஷேட் உள்ள பாத்திரங்களில் அவர் நடிக்கும் போது அதில் தன்னிச்சையாகவே ஒரு சுவாரஸ்யம் வந்து அமர்ந்து விடுகிறது. ‘நெற்றிக்கண்’ படத்தைப் பொறுத்தவரை அது ‘சக்கரவர்த்தி’ கேரக்ட்டர்தான். அதற்காகவே இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.