மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 3

டி.ராஜேந்தர்
News
டி.ராஜேந்தர்

கலைப்புலி எஸ்.தாணு; படம் உதவி: ஞானம்

‘அப்படி என்னதான் யோசனை?’ என்கிறீர்களா? அப்போதுதான் திடீரென அந்த யோசனை வந்தது. தூர்தர்ஷனில் வெள்ளிக் கிழமையானால் இரவு 8.30 மணிக்கு ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அதில் ‘யார்’ படத்தின் ‘அபிராமியே உமா மகேஸ்வரி’ என்கிற பக்திப் பாடலை ஒளிபரப்ப வைத்தேன். அதன்விளைவு, ‘`சாமி படம்... சாமி படம்’’ என இரவு 10 மணி ஷோவுக்கு தியேட்டர் ஹவுஸ்புல் ஆக ஆரம்பித்தது.

அடுத்த நாள் ‘ராம்’ தியேட்டரில் படம் ஓடும்போது உள்ளே நான்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பெண்களைக் கொண்டுபோய் நிறுத்தி, க்ளைமாக்ஸின்போது சாமி வந்ததுபோல அவர்களை ஆட வைத்தேன். அதை போட்டோ எடுத்து, ‘ ‘யார்’ படம் பார்க்க வந்தவர்கள் சாமி வந்து ஆடியபோது’ என போஸ்டர், பேப்பர் விளம்பரம் எல்லாம் கொடுத்தேன். இப்படி அடுத்தடுத்து வித்தியாசமான விநோதமான விளம்பரங்கள் காரணமாக படம் சூப்பர் டூப்பர்ஹிட்.

உண்மைகள் சொல்வேன்! - 3

‘யார்’ படத்தின் 90-வது நாள் ரஜினி சாரின் பிறந்தநாள். ‘`ராகவேந்திரர் அருளுடன், பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துகள். ‘யார்’ வெற்றிகரமான 90-வது நாள்’’ என்று விளம்பரம் செய்தேன். ‘`பரவாயில்லையே... சொன்ன சொல்லையும் காப்பாத்திட்டீங்க. சமயோசிதமா எப்ப விளம்பரம் பண்ணணுமோ அப்ப என் படத்தையும் போட்டு வாழ்த்து சொல்லிட்டீங்க’’ என ரஜினி சார் சிரித்தபடியே பேசினார்.

உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் ஹோட்டல் (இப்போது செம்மொழிப்பூங்கா) வாசலில் அர்ஜுனுக்கு 100 அடி கட்-அவுட். நூறாவது நாள் நூறு அடி கட்-அவுட். ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆச்சர்யத்தில் பார்த்தது. நூறாவது நாள் விழாவில் ரஜினி கலந்துகொண்டு வழக்கம்போல் அவர் ஸ்டைலில் ஒரு குட்டிக்கதை சொன்னார்.

‘‘ஒரு ஊர்ல இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒரு ஏழை நண்பன், ஒரு பணக்கார நண்பன். ஏழை நண்பன் பணக்கார நண்பனோட ஆபிஸுக்கு போகும்தெல்லாம் ‘வா, உட்காரு, எதாவது சாப்பிடு’ என ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல், பணக்கார நண்பன் எப்போதும் போனில் பிஸியாகவே இருப்பான். போனில் லட்சங்களில் பேசிகொண்டிருப்பான் , ஏழை நண்பன் பேசமுடியாமலே போய்விடுவான். எப்போது ஏழை நண்பன் பார்க்க வந்தாலும் பணக்கார நண்பன் இப்படித்தான் நடந்து கொள்வான். ஆனால், ஒருநாள் ஏழை நண்பன் வரும்போது எந்த போனும் அடிக்கவில்லை. ஒரே அமைதி. பணக்கார நண்பன் அப்படியே வெறித்தபடி உட்கார்ந்திருக்கிறான். முதல்முறையாக ஏழை நண்பனைப் பார்த்து ‘வாடா... உட்காரு’ என்கிறான். அப்போது ஏழை நண்பன், ‘என்னப்பா பிரச்னை.... ஏன் டல்லா இருக்க?’ எனக் கேட்கிறான்.``என் பிரச்னையை சொன்னா தீர்த்து வச்சுடுவியா. எனக்கு உடனடியா 20 லட்சம் வேணும்’’ என்கிறான். ‘அவ்ளோதானேப்பா... அந்த போனைக்கொடு’ என்கிறான். அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு கார் வருகிறது. ஒருவர் சூட்கேஸோட வந்து, ‘இதை உங்ககிட்ட கொடுக்கச்சொன்னாங்க’ என ஏழை நண்பனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுப்போகிறார். அந்த சூட்கேஸை அப்படியே பணக்கார நண்பனிடம் கொடுத்து, ‘இந்தாப்பா எடுத்துக்கோ’ என ஏழை நண்பன் சொல்கிறான். பணக்கார நண்பன் ‘எப்படிப்பா’ என்கிறான். ‘இதுவரைக்கும் நீ பணத்தைத்தான் பார்த்த, நண்பனைப் பார்க்கல. ஆனா, நான் நண்பர்களைத்தான் பார்த்தேன். பணத்தைப் பார்க்கல’ என ஏழை நண்பன் சொல்வான். இந்தக் கதையில் வரும் ஏழை நண்பனாக என் கண்களுக்கு தாணு சார் தெரிகிறார். அவருக்கு நிச்சயம் நான் ஒரு படம் பண்ணுவேன்’’ என ரஜினி சார் சொன்னார்.

உண்மைகள் சொல்வேன்! - 3

அன்று இரவே ரஜினி சாரிடம் இருந்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமாறு அழைப்பு வந்தது. இயக்குநர்கள் சக்தி - கண்ணன், நான் என மூவரும் போனோம். ‘`எனக்காக ஒரு கதை பண்ணுங்க’’ என்றார் ரஜினி சார். ‘`ஓகே சார்... ரெடி பண்றோம்’’ என சக்தியும் - கண்ணனும் சொல்ல, மூவரும் விடைபெற்றோம். ஆனால், சில நாள்களில் சக்திக்கும் - கண்ணனுக்கும் இடையில் மனவேற்றுமை வந்து இருவரும் பிரிந்துவிட்டார்கள். ரஜினி சாரிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். ‘`அப்ப, இப்போதைக்கு நீங்க வேற ஒரு படம் பண்ணிட்டு வாங்க... அடுத்து நாம பண்ணலாம்’’ என்றார். ஏற்கெனவே விஜயகாந்த் கால்ஷீட் தருகிறேன் என்று சொல்லியிருந்ததால், ‘`விஜயகாந்தை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன்’’ என்று ரஜினி சாரிடம் சொன்னேன். அப்போது அவர்தான் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்து பெரிய ஹிட் அடித்த ‘காலியா’ படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கச்சொல்லிவிட்டு,

`` ‘காலியா’ நான் பண்ணணும்னு நினைச்சிட்டிருந்த படம். ஆனா, விஜிக்கு இந்தப்படம் சரியா இருக்கும். நீங்க பண்ணுங்க’’ என்றார்.

‘`நான் உங்களோட படம் பண்றதுல உறுதியா இருக்கேன். ஆனா, டேட்டு, மத்த விஷயங்கள் எல்லாம் ராவுத்தர்கிட்ட பேசிடுங்க’’ என்கிறார் விஜயகாந்த். எதிர்பாராத ஒரு தொகையை விஜயகாந்தின் சம்பளம் என்று சொல்லி ஷாக் கொடுத்தார் இப்ராகிம் ராவுத்தர். விஜயகாந்த் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வாங்கிய சம்பளத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அதிர்ச்சியாக இருந்தாலும் ‘`ஓகே பரவாயில்லை” என்று சொல்லிட்டு ராஜசேகரை இயக்குநராக வைத்து ‘கூலிக்காரன்’ பட வேலைகளை ஆரம்பித்துவிட்டேன். ரஜினியை வைத்து ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘படிக்காதவன்’ படங்களை இயக்கியவர்தான் ராஜசேகர். இந்தப்படத்தில் ஜெயிலர் கேரக்டர் மிக முக்கியமானது. இந்தியில் பிரபல நடிகர் பிரான் நடித்திருப்பார். தமிழில் அந்த கேரக்டரில் யாரை நடிக்கவைக்கிறோம் என்று ரஜினி சார் ஆர்வமாக இருந்தார். ஜெய்சங்கர் எனச் சொன்னதும் மிகவும் சந்தோஷப்பட்டார். இந்தப்படம்தான் ரூபிணி நடித்து தமிழில் வெளியான முதல் படம்.

நான் விநியோகஸ்தராக இருந்த காலத்திலேயே டி.ராஜேந்தர் எனக்கு நல்ல பழக்கம். ‘மைதிலி என்னைக் காதலி’ படத்தை ரிலீஸ் செய்யும்போது அவருக்கும், கேயாருக்கும் டிஸ்ட்ரிபியூஷனில் ஒரு பிரச்னை வந்துவிட்டது. அதனால் டி.ராஜேந்தரே விநியோஸ்தராக இறங்கினார். பட ரிலீஸுக்கு முந்தைய நாளில் திடீரென அவரை இரண்டு லட்ச ரூபாய் கட்டச்சொல்கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் டி.ராஜேந்தரிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை. உடனடியாக டி.ராஜேந்தரும், உஷாவும் என்னிடம் உதவிகேட்டு வந்தார்கள். `` இரண்டு லட்ச ரூபாய் அவசரமாகத் தேவைப்படுகிறது’’ என்றார்கள். என் பைனான்சியர் நண்பர் ஆர்.பகவான் தாஸிடம் பேசி, டிடி எடுத்துக்கொடுக்க உதவினேன். அப்போதே “உங்க அடுத்த படத்துக்கு நான்தான் இசையமைப் பாளர்” என்று உறுதி கொடுத்திருந்தார் டி.ஆர். அதன்படி ‘கூலிக்காரன்’ படத்தின் இசை டி.ராஜேந்தர்.

உண்மைகள் சொல்வேன்! - 3

ஆரம்பிக்கும்போது மகிழ்ச்சியாக ஆரம்பித்த ‘கூலிக்காரன்’ ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்தித்தான். ஆறு லட்ச ரூபாய் சம்பளம் பேசி ஒப்பந்தமான இயக்குநர் ராஜசேகர் பாதி ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது 10 லட்சம் சம்பளம் கேட்டார். அங்கிருந்தே நெருடல் ஆரம்பித்துவிட்டது.

கர்நாடகாவில் உள்ள ‘குதிரேமூக்’ பகுதியில் ஷூட்டிங். காலையில் சூரியன் உதிக்கும்போது ஷூட்டிங் எடுக்கவேண்டும். விஜயகாந்த், ரூபிணி உட்பட நடிகர்கள் எல்லோரும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். ஆனால், ராஜசேகர் வரவில்லை. சூரியன் உதித்து, கிட்டத்தட்ட உச்சிக்கு வந்துவிட்டது. அப்போதுதான் இயக்குநர் தன் அறைக்கதவைத் திறந்தார். எங்களிடம் எதுவுமே பேசாமல் ‘`தூக்கம் இன்றியமையாதது. தூக்கத்தைக் குறை சொல்பவர்கள் அறிவிலிகள்’’ என ஒரு பேப்பரில் எழுதிவைத்துவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டார். இந்தச் சம்பவத்தால் விஜயகாந்த் கொஞ்சம் மனவேதனை அடைந்தார். ‘`என்னுடைய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தபோது எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என ‘சபாஷ்’ படத்தில் என் உயிரைக் கொடுத்து நடித்தேன். சண்டைக்காட்சிகளிலெல்லாம் அவ்வளவு கஷ்டப்பட்டேன், போராடினேன். ஆனால், இவர் இப்போது ‘மாவீரன்’, ‘லட்சுமி வந்தாச்சு’ எனத் தொடர் தோல்விப்படங்கள் கொடுத்துவருகிறார். இந்தப் படத்தில் அதை மாற்றிக்காட்டவேண்டும் என நினைக்காமல் இப்படிச் செய்கிறாரே’’ என்று நொந்தபடி பேசினார் விஜயகாந்த். இந்தப்படத்தின் ஷூட்டிங்கில் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் விஜயகாந்த்தும், ராதாரவியும் பக்கபலமாக நின்று படத்தை முடித்துக்கொடுத்தார்கள்.

ஷூட்டிங் முடிந்ததும் விஜயகாந்த்தும், ராவுத்தரும் அவர்களது அலுவலகத்துக்கு என்னை அழைத்தார்கள். ‘`டேட் கொடுக்காமல் இருக்கத்தான் உங்ககிட்ட அதிக சம்பளம் கேட்டோம். ஆனால், இந்தப்படத்தை ஆரம்பிச்ச பிறகுதான் நீங்க எப்படிப்பட்டவர், இந்தப்படத்தை எவ்ளோ சவால்களுக்கு நடுவில் முடிச்சீங்கன்னு பார்த்தோம். விஜிக்கு இந்தப்படம் நிச்சயம் பெரிய பேரைக்கொடுக்கும். இனி நீங்க வேற எந்த ஹீரோகிட்டயும்போய் டேட் கேட்காதீங்க. நாங்க வருஷத்துக்கு ஒரு படம் பண்றோம்’’ எனச் சொல்லிவிட்டு வாங்கிய சம்பளத்தில் 50,000 ரூபாயைத் திருப்பிக்கொடுத்தார்கள். ‘`வெளில நாங்க பண்ற படங்களுக்கு என்ன சம்பளம் வாங்குறமோ அதுல ஒரு லட்ச ரூபாய் நீங்க குறைச்சிக்கொடுங்க’’ என்றார் ராவுத்தர். அதனால்தான் ‘கூலிக்காரன்’, ‘நல்லவன்’, ‘தெருப்பாடகன்’ என விஜயகாந்த்தோடு அடுத்தடுத்து மூன்று படங்கள் பயணித்தேன்.

படம் 1987 ஜூனில் ரிலீஸ் ஆனது. அப்போதெல்லாம் விஜயகாந்த்தின் பிசினஸ் 46 லட்ச ரூபாய். ஆனால், ‘கூலிக்காரன்’ படத்தின் பிசினஸ் கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கியது. ரஜினி சாருக்குத்தான் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் இருக்கும் என்பதால் ‘கூலிக்காரன்’ படத்தின் பிசினஸை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

‘யார்’ படத்தின் 100-வது நாள் விழாவை சூப்பர் ஸ்டாரை வைத்து நடத்திய நான், இரண்டாவது படமான ‘கூலிக்காரன்’ நூறாவது நாள் விழாவை கலைஞரைவைத்து நடத்தவேண்டும் என விரும்புகிறேன். அப்போது எம்.ஜி.ஆர்தான் முதலமைச்சர். ஆனால், எனக்குக் கலைஞர் மீதும் அவர் தமிழ்மீதும் இருந்த அளவற்ற அபிமானத்தால் அவரை வைத்து விழா நடத்தலாம் என்று முடிவெடுத்தேன்.

கலைஞருடனான சந்திப்பு, நூறாவது நாள் விழாவுக்கு விழுந்த முட்டுக்கட்டைகள், விழாவில் கலைஞரின் பேச்சு, 1989 தேர்தல் பிரசாரம்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!

- வெளியிடுவோம்...