நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கதாநாயகனாகக் களமிறங்குகிறார் காமெடி கிங் கவுண்டமணி.
'பேய காணோம்' படத்தின் இயக்குநரான செல்வ அன்பரசன் இயக்குகிறார். கவுண்டமணியின் 31 ஆண்டுகால நெருங்கிய நண்பரான மதுரை செல்வம் இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தில் நடிப்பவர்கள் யார் யார்? எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து தயாரிப்பாளர், இயக்குநரிடம் விசாரித்தேன்.

``கவுண்டமணி சாரோட 31 வருஷமா நட்புல இருக்கேன். சினிமாவில் அவர் நாற்பது வருஷம் நிறைவானதையொட்டி ஆனந்த விகடன்ல கவுண்டமணி பேட்டி வெளியாகியிருந்தது. அதில் அவரது நெருங்கிய நண்பர்னு என்னை மட்டுமே சொல்லியிருந்தார். அவர்கிட்ட நான் எந்த உதவியும், பிரதிபலனும் எதிர்பார்ததே இல்லை. கடைசியாக அவர் 'வாய்மை' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு படங்கள் எதுவும் கமிட் பண்ணாமல் இருந்தார். சமீபத்தில் என் மனைவி இறந்துட்டாங்க. அதுல நான் மனசு உடைஞ்சு போயிருந்தேன். இவருக்கு எதாவது உதவி பண்ணனும்னு தோணவே, எனக்கு ஒரு படம் கொடுக்கறார்." என்கிறார் மதுரை செல்வம்.

'பேய காணோம்' இயக்குநர் செல்வ அன்பரசனிடம் பேசினால், ''நான் என் நண்பரிடம் 'பேயக் காணோம்' கதையை சொல்லிக் கொண்டு இருக்கும் போது, மதுரை செல்வம் சார் கதையை கேட்டுவிட்டு வாய்விட்டு சிரித்துவிட்டார். அந்த சூழல் தான் கவுண்டமணி படம் பண்ணுவதற்கான கதவை திறந்துவிட்டது. ஒரு நடுக்கத்தோடுதான் அவரை சந்திக்கப் போனேன். ஆனால், அவரே ஜூஸ் கொடுத்து வரவேற்றார். 'ஓப்பனிங் என்ன வச்சிருக்கீங்க?' என்றபடி பேச ஆரம்பித்தார். அப்படியே அவர்கிட்ட ஒன்றரை மணிநேரம் முழுக் கதையையும் சொல்லிட்டேன். அன்னிக்கு ராத்திரியே மதுரை செல்வம் சாருக்கு அவர் போன் செய்து, 'பழனிச்சாமி வாத்தியார்' கதை நல்லா இருக்கு பண்றோம்'ன்னார். இப்படித்தான் படம் உருவானது.'' என்கிறார் செல்வ அன்பரசன்.
இந்தப் படத்தில் ராதாரவி, சித்ரா லட்சுமணன், யோகி பாபு, டி.சிவா, கஞ்சா கருப்பு என பலர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, கெஸ்ட் ரோல்களில் பலர் வர உள்ளனர். அதில் கவுண்டமணியின் முன்னாள் மாணவராக நடிக்க சிவகார்த்திகேயனிடம், சந்தானத்திடமும் பேசி வருகிறார்கள். இருவரில் யாராவது ஒருவர் நடிக்கலாம் என்கிறார்கள். இதில் சுவாரஸியம் என்னவென்றால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான அடுத்த கணமே, கவுண்டமணிக்கு போன் செய்த யோகிபாபு, 'அண்ணே உங்க படத்துல ஒரு சீனாவது நான் இருக்கணும்னு விரும்புறேன். உங்க காம்பினேஷன்ல நடிக்கறேன் அண்ணே' என தன் விருப்பத்தை சொல்லியிருக்கிறார். கவுண்டமணியும் 'தாரளமா நடிக்கலாம் பாபு' என க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 20ம் தேதிக்கு மேல் துவங்கலாம் எனத் தெரிகிறது. திண்டுக்கல், கொடைக்கானல் பகுதியில் நடக்கும் கதையாக அமைந்திருந்தாலும், ஸ்கூல் போர்ஷன்களை சென்னையில் தான் படமாக்க உள்ளனர்.