மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - புதிய தொடர் 1

கலைப்புலி எஸ்.தாணு
News
கலைப்புலி எஸ்.தாணு

- கலைப்புலி எஸ்.தாணு

ண்ணாரப்பேட்டை வழங்கிய வண்ணமயமான வாழ்க்கையில் இருந்து வந்தவன் நான். கலை ஆர்வமும், அரசியல் ஆர்வமும் மனதுக்குள் முட்டி மோத கலையையும் புலியையும் இணைத்தேன். வண்ணாரப்பேட்டை தாணு கலைப்புலி தாணுவாக மாறினேன். இந்த மாற்றத்தையும், 40 ஆண்டுக்காலப் பயணத்தையும் ஆனந்த விகடன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

கலைஞர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, கே.பாலசந்தர், பாரதிராஜா, டி.ராமானுஜம் என அரசியல்வாதிகள், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஒவ்வொருவர் பற்றியும் சொல்லவேண்டிய ஓராயிரம் விஷயங்கள் மனதுக்குள் மறைந்திருக்கின்றன. மனசாட்சிக்கு உண்மையாக, அறம் பிறழாமல், வெளிப்படையாகப் பல விஷயங்களை உங்களிடம் பேசப்போகிறேன்.

‘`கட்டிய மனைவிக்குப் பயன்படாதவன்... அய்யோ!’’- என இன்னொரு  வசனம் வைத்து எஸ்எஸ்ஆர் காலில், விஜயகுமாரி  விழுந்து அழுகிற மாதிரி இன்னொரு போஸ்டர். பெண்கள் கூட்டம் தியேட்டரை நிறைக்க ஆரம்பித்துவிட்டது
‘`கட்டிய மனைவிக்குப் பயன்படாதவன்... அய்யோ!’’- என இன்னொரு வசனம் வைத்து எஸ்எஸ்ஆர் காலில், விஜயகுமாரி விழுந்து அழுகிற மாதிரி இன்னொரு போஸ்டர். பெண்கள் கூட்டம் தியேட்டரை நிறைக்க ஆரம்பித்துவிட்டது

நான் சினிமாவில் தயாரிப்பாளராக இத்தனை ஆண்டுகள் நீடித்து நிற்பதற்கு முக்கிய காரணம் ஒருவர்தான். அந்த மாமனிதரிலிருந்து இந்தத் தொடரைத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். ஆமாம்... சூப்பர் ஸ்டாரிலிருந்து என் பயணத்தைத் தொடங்குகிறேன்.

வண்ணாரப்பேட்டையில் ‘அன்பு அழகுநிலையம்’ என்கிற முடி திருத்தும் கடைதான் நான் சினிமாவுக்குள் வர முக்கிய காரணம். அங்கே நான் முடி திருத்தம் செய்யப்போகும்போது, சினிமா விநியோகஸ்தர்கள் சிலர் வருவார்கள். அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் மணியரசுவும் சினிமா ஆர்வலர். அதனால் சினிமா பற்றிய பேச்சுதான் அங்கே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். ‘எங்கள் குல தெய்வம்’ படத்தை எடுத்த விநாயகம், சண்முகம், ராதாகிருஷ்ணன், வேலு இவர்கள் எல்லாம் அங்கே பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். சினிமாவில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள், சினிமா எப்படிப்பட்ட தொழில் என நிறைய விஷயங்கள் பேசுவார்கள். அப்படி அவர்கள் பேசும்போது அடிக்கடி சிந்தாமணி முருகேசன் என்ற பெயரை அதிகம் உச்சரிப்பார்கள். அவர் இவர்களிடமிருந்து பிரிந்துபோய் பெரிய விநியோகஸ்தராக வளர்ந்துகொண்டிருந்தவர். அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேட்டுக்கேட்டு அவர்தான் என்னுடைய பென்ச்மார்க் என என் மனதுக்குள் வரையறுத்துக்கொண்டேன். இந்தச் சூழலில் ‘அன்பு அழகுநிலையம்’ வரும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் சிலர் பட ரிலீஸுக்குப் பணம் கேட்பார்கள். நானும், என்னுடைய மூத்த அண்ணன் பூபதியும் பணம் கொடுப்போம். அதில் வரும் லாபத்தை அவர்கள் எங்களுக்குத் திருப்பிக்கொடுப்பார்கள். அப்படி அவர்கள் வாங்கி ரிலீஸ் செய்த படம்தான் ‘பட்டணத்தில் பூதம்.’ பணம் கொடுத்து உதவிய எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. அப்போதுதான் ‘நாமும் ஒரு படத்தின் விநியோக உரிமையை வாங்கிப்பார்க்கலாமே’ என்கிற எண்ணம் என் மனதுக்குள் வந்தது. சினிமாவுக்குள் இறங்குவது என முழுமனதோடு முடிவெடுத்தேன்.

எம்ஜிஆர், சிவாஜின்னு சீனியர் ஆர்ட்டிஸ்ட்லாம் இருக்கும்போது எனக்கு சூப்பர் ஸ்டார்னெல்லாம் போஸ்டர் அடிக்கக்கூடாதுன்னு ரஜினி சார் சொல்றார்.
எம்ஜிஆர், சிவாஜின்னு சீனியர் ஆர்ட்டிஸ்ட்லாம் இருக்கும்போது எனக்கு சூப்பர் ஸ்டார்னெல்லாம் போஸ்டர் அடிக்கக்கூடாதுன்னு ரஜினி சார் சொல்றார்.

என் வீட்டுக்கும், சினிமாத் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. என் அப்பா, அண்ணண், மாமா என எல்லோரும் சேர்ந்து டின் பேக்டரி நடத்திக்கொண்டிருந்தார்கள். பல்பொடி, வனஸ்பதி எண்ணெய் என எல்லாப் பொருள்களுக்கும் எங்கள் பேக்டரியில் இருந்துதான் டின் போகும். அப்போது டின்கள் செய்வதில் மெட்டல்பாக்ஸ் நிறுவனம்தான் புகழ்பெற்ற பெரிய நிறுவனம். எங்கள் நிறுவனத்தை ‘குட்டி மெட்டல்பாக்ஸ்’ என்று எல்லோரும் சொல்வார்கள். தியாகராயா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது திடீர் என அப்பா இறந்ததால் படிப்பைத் தொடரமுடியாமல் டின் பேக்டரியிலேயே நானும் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். எல்லோரும் சேர்ந்து டின் பேக்டரிக்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்தோம். எங்கள் அண்ணன் பூபதி பேங்க் வேலையை விட்டுவிட்டு இந்த பேக்டரி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்தச் சூழலில்தான் நான் வீட்டுக்குப்போய் “சினிமா டிஸ்ட்ரிபியூட்டர் ஆகப்போறேன்” எனச் சொன்னேன். என் அம்மாவுக்கு நான் சொன்னதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ‘சினிமாத்தொழில் ரொம்ப மோசம், கெட்ட பழக்கம்லாம் வந்துடும், அங்கலாம் போகவேண்டாம்’ எனச் சொல்கிறார் அம்மா. ஆனால், என் பூபதி அண்ணன் எனக்குத் துணை நின்றார். ‘அவன் ஏம்மா கெட்டுப்போகப்போறான்... நல்லா வருவாம்மா. எனக்கு நம்பிக்கை இருக்கு’ எனச் சொல்லி என் கையில் 5,000 ரூபாய் பணம் கொடுத்தார். அண்ணன் நம்பிக்கையோடு கொடுத்த அந்த 5,000 ரூபாயிலிருந்து தொடங்கியதுதான் என்னுடைய சினிமா வாழ்க்கை.

‘பட்டணத்தில் பூதம்’ படத்துக்கு அடுத்து முதன்முதலாக மகாராணி தியேட்டரில் ‘நாணல்’, ‘பாத காணிக்கை’ படங்கள் வாங்கி மார்னிங் ஷோ போட்டேன். எல்லாப் படத்துக்கும் ஏகப்பட்ட போஸ்டர் அடித்து பிரமாண்டமாக விளம்பரம் செய்வேன். விளம்பரம் பண்ணப் பண்ண தியேட்டருக்குக் கூட்டம் வரும். ரிலீஸ் பண்ண, ரிலீஸ் பண்ண நல்ல லாபம் கிடைக்க ஆரம்பித்தது. அப்போதுதான் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, எம்.ஆர்.ராதா, ரங்காராவ் ஆகியோர் நடித்த ‘சாரதா’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்யலாம் என்கிற என் விருப்பத்தை நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் ‘அந்தப்படம்லாம் ஓடாது’ என்றார்கள். ஆனால், எனக்கு அந்தப்படம் மிகவும் பிடிக்கும். ஒரு தைரியத்தில் ‘நான் வாங்கி ஓட்டிக்காட்டுறேன்’ எனச் சொல்லிவிட்டேன். ‘அன்பு அழகு நிலைய’த்தின் உரிமையாளர் மணியரசன்தான் முதன்முதலாக விநியோகஸ்தர்கள் எல்லோரும் இருக்கும் மீரான் சாகிப் தெருவுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போய் அங்கே பலரை அறிமுகப்படுத்தினார். அடுத்து கோபாலபுரத்தில் உள்ள ஏ.எல்.எஸ் நிறுவனத்துக்குச் சென்றேன். அங்கே ஏ.எல்.சீனிவாசன் அவர்களை சந்தித்தேன். 6,000 ரூபாய் கொடுத்து, ஆறு சென்டரில் ரிலீஸ் பண்ணலாம் என ‘சாரதா’ பட பிரின்ட்டை வாங்கினேன். முதலில் சொன்ன மாதிரி சிந்தாமணி முருகேசன் ஒரு படத்துக்கு என்னவெல்லாம் செய்வாரோ, யாரையெல்லாம் பயன்படுத்துவாரோ அவற்றையெல்லாம் பின்பற்றுவது என முடிவெடுத்தேன். பக்தா என்கிற ஒரு டிசைனரிடம்தான் முருகேசன் போஸ்டர் டிசைன் எல்லாம் செய்வார். ஸ்டில்ஸ் நாகராஜிடம் ‘சாரதா’ படத்தில் இருக்கும் வித்தியாசமான ஸ்டில்களையெல்லாம் வாங்கிக்கொண்டு போய் பக்தாவிடம் கொடுத்தேன். விஜயகுமாரி செருப்பைக் கையில் வைத்துக்கொண்டு அழுகிற மாதிரி ஒரு ஸ்டில். அதில் கண்ணீர் இன்னும் நன்றாக வருவதுபோல் மாற்றி ‘`இந்தப் பத்தினிப் பெண்ணுக்குப் பரிதாப முடிவா?’’ என வசனமெல்லாம் சேர்த்து எஸ்.வி.ரங்காராவ் படத்தையெல்லாம் வைத்து போஸ்டர் அடித்தேன். ‘’கட்டிய மனைவிக்குப் பயன்படாதவன்... அய்யோ!’’- என இன்னொரு வசனம் வைத்து எஸ்எஸ்ஆர் காலில், விஜயகுமாரி விழுந்து அழுகிற மாதிரி இன்னொரு போஸ்டர். பெண்கள் கூட்டம் தியேட்டரை நிறைக்க ஆரம்பித்துவிட்டது. ஆறு வாரத்தில் வரவேண்டிய வசூல் எனக்கு முதல் வாரத்திலேயே வந்துவிட்டது. இந்தப்படம் தான் எனக்கு முதல் ஜாக்பாட்.

கலைப்புலி எஸ்.தாணு
கலைப்புலி எஸ்.தாணு

அடுத்து ‘கவலையில்லாத மனிதன்.’ எனக்கு இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் பிடித்திருந்தன என்பதால் வாங்கி வெளியிட்டேன். 6 சென்டர் 4,500 ரூபாய்க்கு வாங்கினேன். பார்த்தால் எல்லா தியேட்டரிலும் படம் ரெண்டு ரெண்டு வாரம் ஓடி பெரிய வசூல். எல்லாமே புதுமையான போஸ்டர் விளம்பரங்களால் வந்த கூட்டம்தான். இதன்பிறகு பழைய படங்களின் நெகட்டிவ் ரைட்ஸையெல்லாம் வாங்கி, புதுமையான போஸ்டர்கள் அடித்து ரிலீஸ் செய்துகொண்டே இருந்தேன். பெரிய பெரிய போஸ்டர்கள் அடிப்பேன். அப்போதெல்லாம் 2 ஷீட், 4 ஷீட் போஸ்டர்கள்தான் அடிப்பார்கள். நான் 6 ஷீட் போஸ்டர் அடிப்பேன். போஸ்டரிலேயே சென்ட்டிமென்ட்டைத் தூண்டுகிற மாதிரியான வசனங்களை வைப்பேன். அதுவரைக்கும் பார்க்காத படங்களின் போட்டோ போஸ்டர்களில் இருக்கும். இப்படி 1971-ல் இருந்து பழைய படங்களாக வாங்கி ரிலீஸ் செய்துகொண்டிருந்த நான் அடுத்து புதுப்படங்களுக்கான ரைட்ஸ் வாங்கி ரிலீஸ் செய்ய ஆரம்பித்தேன்.

அப்போதுதான் ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தின் மெட்ராஸ் சிட்டி ரைட்ஸ் வாங்கினேன். இந்தப்படத்துக்கு போஸ்டர் அடிப்பதற்காக சுபா சுந்தரம் என்கிற பிரபல புகைப்படக்கலைஞரின் அலுவலகத்துக்குப் போனேன். அவரின் அசிஸ்டென்ட் ஸ்டில்ஸ் ரவி அங்கே இருந்தார். அவரிடம் ‘பைரவி’ படத்தின் ஸ்டில்ஸையெல்லாம் வாங்கிப் பார்த்தேன். எல்லாமே சூப்பராக இருந்தன. ரஜினி துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு குறி பார்ப்பது போல் ஒரு படம், ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு நடப்பதுபோல் ஒரு படம், நாகப்பாம்பைக் கையில் பிடித்துக்கொண்டு அதன் தலையில் தட்டுகிற மாதிரி ஒரு படம் என ஒவ்வொரு ஸ்டில்லும் எனக்கு ஒவ்வொரு கதை சொன்னது. படங்களைப் பார்க்க, பார்க்க எனக்குப் பெரிய நம்பிக்கை வந்துவிட்டது. எல்லா ஸ்டில்லையும் வைத்து பெரிய பெரிய போஸ்டர்கள், சிட்டி முழுக்க அடித்து ஒட்டினேன்.

உண்மைகள் சொல்வேன்! - புதிய தொடர் 1

மவுன்ட் ரோட்டில் பிளாஸா தியேட்டர் வாசலில் முதல்முறையாக ரஜினிக்கு 35 அடியில் கட் அவுட் வைத்தேன். இப்போது காஸ்மோபாலிட்டன் கிளப் பக்கத்தில் இருக்கும் சுகுண விலாச சபாதான் அப்போது பிளாஸா தியேட்டர். நான் செய்திருந்த விளம்பரங்களுக்குப் பெரிய வரவேற்பு. ரேடியோ விளம்பரமெல்லாம் மிகவும் புதுமையாகச் செய்திருந்தோம். முதல் நாள் சென்னையில் எல்லா தியேட்டரும் ஹவுஸ்புல். ராஜகுமாரி தியேட்டருக்கு ரஜினி சார், பஞ்சு அருணாச்சலம் சார், அவர் தம்பி சுப்பு, தயாரிப்பாளர், இயக்குநர் என எல்லோரும் வந்தார்கள். படத்துக்கான போஸ்டர், பப்ளிசிட்டியெல்லாம் பார்த்துக்கொண்டு ரஜினி சார் தியேட்டருக்குள் நடந்துபோவதை நான் பார்க்கிறேன். ரஜினி சாரைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடிவிட்டது. உள்ளே வந்தவர், ‘`டிஸ்ட்ரிபியூட்டர் எங்க, டிஸ்ட்ரிபியூட்டர் எங்க’’ என என்னைக் கேட்கிறார். ‘ராஜகுமாரி’ தியேட்டர் மேனேஜர் கூட்டத்தை விலக்கி என்னை ரஜினி சாரிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். கறுப்பு பைப் போட்ட ரோஸ் கலர் பனியன் மற்றும் கறுப்பு பேன்ட் போட்டிருந்த அன்றைய ரஜினி சாரை இன்றும் நினைவிருக்கிறது. ‘`Fantastic posters... Beautiful Publicity’’ இந்த நான்கு வார்த்தைகள்தான் ரஜினி சார் அன்று என்னிடம் சொன்னவை. அவரிடம் கிடைத்த பாராட்டு மகிழ்ச்சியில் அடுத்த நாள் போஸ்டர் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பைரவி’ என முதல்முறையாக போஸ்டர் அடித்தேன். இந்த போஸ்டர் ஒட்டிய அடுத்த நாள் காலையில் ‘பைரவி’ படத்தின் தயாரிப்பாளர் கலைஞானம் சாரும், அந்தப்படத்தின் இயக்குநர் பாஸ்கரும் என் ஆபீஸுக்கு வந்துவிட்டார்கள்.

உண்மைகள் சொல்வேன்! - புதிய தொடர் 1

“ரஜினி சார் எங்களை அனுப்பினார். நீங்க படத்துக்கு ரொம்பப் பெரிய பப்ளிசிட்டிலாம் பண்ணியிருக்கீங்க. ரொம்ப நல்லாருக்கு. ஆனா, எம்.ஜிஆர், சிவாஜின்னு சீனியர் ஆர்ட்டிஸ்ட்லாம் இருக்கும்போது எனக்கு சூப்பர் ஸ்டார்னெல்லாம் போஸ்டர் அடிக்க வேணாம்னு ரஜினி சார் சொல்றார். அதனால் இனி இப்படி போஸ்டர் அடிக்காதீங்க’’ எனச் சொல்லிவிட்டுப் போனார்கள். ஆனால், அடுத்த நாளே நான் ‘கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்’ என பேப்பர்களுக்கு விளம்பரம் கொடுத்தேன். ‘இவனைத் திருத்தமுடியாது’ என என்போக்கில் விட்டுவிட்டார்கள்.

அடுத்து ‘கை கொடுக்கும் கை’ படத்தை வாங்கினேன். இந்தப்படத்தை வாங்கும்போதுதான் ரஜினி சாரோடு நல்ல பழக்கமானது. இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட், டப்பிங் ஸ்டூடியோ என எல்லா இடங்களுக்கும் போவேன். அப்போது ஒருநாள் டப்பிங் ஸ்டூடியோவுக்குள் நுழையும்போது செளகார் ஜானகி ‘மகேந்திரன் இருந்தாக்கூட ஈஸியா டப்பிங் பண்ணிடலாம். இந்த அசிஸ்டென்ட்ஸுங்க பர்பெக்‌ஷன் வர வரைக்கும் விடமாட்றாங்க’ன்னு பேசிக்கொண்டு வெளியில் நடந்துபோனது காதில் கேட்டது. அப்போதுதான் முதல்முறையாக அசிஸ்டென்ட் டைரக்டர் யார் என கவனித்தேன். மதுக்கூர் கண்ணன், சக்தி சுப்ரமணியம்தான் மகேந்திரன் சாரின் உதவி இயக்குநர்கள். அப்போதுதான் இவர்களை வைத்து நாமே ஒரு படம் தயாரிக்கலாமே என்கிற எண்ணம் வந்தது. திருச்சி ஏரியா டிஸ்ட்ரிபியூட்டர் சேகரோடு சேர்ந்து விடுதலைப்புலிகள் மாதிரி, கலைப்புலி எனப் பெயர் வைத்து ‘யார்?’ படத்தை ஆரம்பித்தோம். சேகர்தான் படத்துக்குக் கதை. கண்ணன் - சக்தி என இரட்டை இயக்குநர்கள். தயாரிப்பாளராக நான் யார் என்பதை ‘யார்’ படம்தான் சினிமா உலகுக்குச் சொன்னது.

‘யார்’ படத்தில் அர்ஜுன் எப்படி ஹீரோவானார், இந்தப்படத்தின் கெஸ்ட் ரோலில் ரஜினி ஏன் நடித்தார், நடிக்கும்போது அவர் என்ன மனநிலையில் இருந்தார், இந்தப்படத்தின் வெற்றிவிழாவில் ரஜினி சார் என்ன சொன்னார், அது எப்போது நடந்தது... இவையெல்லாம் அடுத்த வாரம் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்...