பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அடுத்த ஆட்டம் ஆரம்பம்!

கெளதம்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
கெளதம்ராஜ்

2019-ல் நம் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர்களின், அடுத்தக் கட்ட நகர்வுகளைப் பற்றி விசாரித்தோம்...

செழியன்

தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதிலிருந்து பல விருதுகளையும் தன் வசப்படுத்தினார் ஒளிப்பதிவாளர் செழியன். அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘`நான் இயக்குநராகிட்டாலும், ஒளிப்பதிவு பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

செழியன்
செழியன்

வித்தியாசமான படங்கள் பண்ணணும்னு நினைக்கிற நிறைய அறிமுக இயக்குநர்கள், என்கிட்ட ஒளிப்பதிவு பண்றதுக்குக் கேட்குறாங்க. அப்படி இரண்டு அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்றேன். என் இயக்கத்தில் இரண்டாவது படம் பண்றதுக்கான கதையும் எழுதி வெச்சிருக்கேன். ஒளிப்பதிவு வேலைகளை முடிச்சிட்டுத்தான், என் படத்தை இயக்குவேன். என் இரண்டாவது படமும் ’டுலெட்’ படத்தைப் போல ஒரு இண்டிபெண்டன்ட் படமாகத்தான் இருக்கும்’’ என்றார்.

சரவண ராஜேந்திரன்

`தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்பதற்குச் சான்றாக, தன் தம்பி ராஜூமுருகன் எழுத்தில் தனது முதல் படத்தை இயக்கிய ராஜூ சரவணன், இரண்டாவது படத்துக்கான எழுத்து வேலைகளை முடித்துவிட்டாராம்.

சரவண ராஜேந்திரன்
சரவண ராஜேந்திரன்

`` ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்துக்குக் கதையும் வசனமும் என் தம்பி ராஜூ முருகன் எழுதியிருந்தார். ஆனால், இந்தப் படத்துக்கு நானே கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கேன். அதே மாதிரி, முதல் படத்தை அறிமுக ஹீரோவை வெச்சு இயக்கியிருந்தேன். ஆனால், இந்தப் படத்தின் கதையை, முகம் தெரிந்த ஹீரோக்களுக்குச் சொல்லியிருக்கேன். சீக்கிரம் எல்லாமே உறுதியாகிடும். நம் வாழ்க்கையில் நடக்கிற பல விஷயங்களைத் தொகுத்த ஒரு நையாண்டிக் கதையாக இந்தப் படம் இருக்கும்’’ என்றார் ராஜூ சரவணன்.

பரத் நீலகண்டன்

`கே13’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே தனது இரண்டாவது படத்தில் கமிட்டாகிவிட்ட பரத் நீலகண்டன், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையைப் படமாக எடுக்கவுள்ளார். ``சீக்கிரமே படப்பிடிப்புக்குக் கிளம்பத் தயாராக இருக்கோம்.

பரத் நீலகண்டன்
பரத் நீலகண்டன்

இந்தப் படத்தை டெக்னிக்கலா பயங்கர ஸ்ட்ராங்கா எடுக்கணும்னு பிளான் பண்ணியிருக்கோம். இந்தப் படம் மட்டுமல்லாம, தெலுங்கு - தமிழ்ல பைலிங்குவலா ரெடியாகுற ஒரு படத்துக்கும், ஒரு வெப் சீரிஸுக்கும் கதை எழுதியிருக்கேன்’’ என்றார்.

வி.ஜே.கோபிநாத்

தொடர்பியல் - முக்கோண விதி எனப் புதுவிதமாகத் திரைக்கதையைக் கையாண்டு கவனம் ஈர்த்த ‘ஜீவி’ கோபிநாத், தற்போது ஃபேன்ட்ஸியைக் களமாக எடுத்திருக்கிறார்.

வி.ஜே.கோபிநாத்
வி.ஜே.கோபிநாத்

‘` ‘ஜீவி’ படம் மாதிரியே பாபு தமிழின் கதை, வசனத்துடன் என் இரண்டாம் படத்தின் வேலைகள் நடந்திட்டிருக்கு. இந்தப் படத்தை விஷ்ணு விஷால் தயாரிச்சு, நடிக்கிறார். இதில் அவருக்குப் போலீஸ் ரோல். இது ஃபேன்டஸி கலந்த போலீஸ் கதைன்னு சொல்லலாம். சமூகத்தில் நடக்கிற தவறுகளை ஃபேன்டஸி மூலம் தடுக்குற மாதிரியான கதை. மே மாசம் படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பிக்குது’’ என்றார்.

கெளதம்ராஜ்

அரசுப் பள்ளியின் அவலங்களைத் தனது முதல் படத்தின் மூலமாகத் தோலுரித்துக் காட்டிய கெளதம்ராஜ், `` ‘ராட்சசி’ படத்துக்குப் பிறகு இரண்டு நிறுவனங்களுக்கு இரண்டு வெவ்வேறு கதைகளைச் சொல்லியிருக்கேன்.

கெளதம்ராஜ்
கெளதம்ராஜ்

அதில் ஒண்ணு `ராட்சசி’ மாதிரியே ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதை. `ராட்சசி’ படத்தில் அரசுப் பள்ளிகளில் நடக்கும் பிரச்னைகளைப் பதிவு பண்ணியிருந்த மாதிரி, என் அடுத்த படத்தின் கதையும் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்தித்தான் இருக்கும்’’ என்றார்.

பிரதீப் ரங்கநாதன்

`கோமாளி’யைக் கொண்டு 90’ஸ் கிட்ஸின் நாஸ்டாலஜியைத் தூண்டிவிட்ட பிரதீப் ரங்கநாதன், “என் அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தைகள் போயிட்டிருக்கு. `கோமாளி’ படம் மாதிரியே இதுவும் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்குப் படமாகத்தான் இருக்கும்.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

இப்போ நாம இருக்கிற சூழலில் நமக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கண்டிப்பா தேவைப்படுது. அதனால, என் படம் மூலமா அந்தப் பாசிட்டிவ் எனர்ஜியை ஆடியன்ஸுக்குக் கொடுக்க நினைக்கிறேன். அதே மாதிரி, எனக்கு நடிப்புலேயும் ஆர்வம் இருக்கு. சில குறும்படங்களில் நடிக்கலாம்னு இருக்கேன்’’ என்றார்.

அதியன் ஆதிரை

சாதி, வர்க்கம் எனப் பல பிரச்னைகளைத் தனது முதல் படத்திலேயே பதிவு செய்த அதியன் ஆதிரை, ‘` ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்கு அப்புறம் நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் கதை கேட்டாங்க. அதில் ஒரு நிறுவனத்துக்குக் கதை சொல்லலாம்னு இருக்கேன்.

அதியன் ஆதிரை
அதியன் ஆதிரை

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இரண்டு கதைகளை எழுதியிருக்கேன். இந்த இரண்டு கதைகளுமே பீரியட் பிலிம்தான். எந்தக் கதைக்குத் தயாரிப்பாளர் ஓகே சொல்றாரோ, அதைப் படமாக எடுப்பேன்’’ என்றார்.

ஸ்ரீ செந்தில்

`காளிதாஸ்’ படம் மூலம் கவனம் ஈர்த்த செந்தில், “ ‘காளிதாஸ்’ படத்துக்குப் பிறகு இந்த ஜானரில்தான் படம் பண்ணணும்னு எந்த ஒரு ஜானரையும் நான் ஃபிக்ஸ் பண்ணிக்கலை.

ஸ்ரீ செந்தில்
ஸ்ரீ செந்தில்

சில தயாரிப்பாளர்கள் படம் பண்ணலாம்னு சொல்லியிருக்காங்க. யார் ஹீரோ, எந்த ஜானரில் படம் வேணும்னு தயாரிப்பாளர் சொல்றாரோ, அதை வெச்சுதான் என் அடுத்த படத்தின் கதையை எழுதணும்’’ என்றார்.