சினிமா
தொடர்கள்
Published:Updated:

நித்தம் ஒரு வானம் - சினிமா விமர்சனம்

நித்தம் ஒரு வானம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
நித்தம் ஒரு வானம் - சினிமா விமர்சனம்

இயல்பான மனிதர்கள் நிரம்பிய ஃபீல்குட் கதைதான் என்றாலும், அதில் மூன்று டிராக், ஒவ்வொன்றுக்கும் ஒரு சஸ்பென்ஸ், ஒரு க்ளைமாக்ஸ்...

வாழ்க்கை என்பது குறுகிய வெளிக்குள் அடைவதில்லை, வானம்போல் விரிந்து பரந்தது என்பதைச் சில பல கதைகளுடன் சொல்லும் சினிமாவே ‘நித்தம் ஒரு வானம்.'

அதிகம் சுத்தம் பார்க்கும், சிடுமூஞ்சி அசோக் செல்வனின் திருமணம் அவர் சுபாவத்தாலேயே நின்றுபோகிறது. எந்தக் கதையைப் படித்தாலும் அந்தக் கதைமாந்தர்களாய் தன்னை உருவகப்படுத்திக்கொள்ளும் அசோக் செல்வனுக்கு இரண்டு கதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. முடிவு தெரியாத இரண்டு கதைகளின் முடிவைத் தேடி கொல்கத்தாவுக்கும் இமாச்சலப்பிரதேசத்துக்கும் பயணம் செய்கிறார்.

வழித்துணையாக ரிதுவர்மாவும் இணைந்துகொள்ள, அந்தக் கதைமாந்தர்களுக்கு என்ன ஆனது, அசோக் செல்வனுக்கு வாழ்க்கை குறித்த புரிதல்கள் கிடைத்தனவா என்பதை நல்லுணர்வுத் திரைப்படமாகச் சொல்கிறது கதை.

நித்தம் ஒரு வானம் - சினிமா விமர்சனம்

அர்ஜுன், பிரபா, வீரா என்று ஒரே படத்தில் மூன்று பாத்திரங்களில் மூன்று உணர்வுநிலைகளைப் பிரதிபலிக்கும் வாய்ப்பு அசோக் செல்வனுக்கு. மூவரில் முதல் மார்க் கல்லூரி இளைஞன் வீராவுக்கு. எப்போதும் சுத்தமும் கச்சிதமும் எதிர்பார்க்கும் அர்ஜுன் கதாபாத்திரம் தெளிவாகச் சித்திரிக்கப்படவில்லை. கோவை இளைஞன் பிரபா பாத்திரத்தில் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. இருந்தபோதும் மூன்று பாத்திரங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டி, படத்தைத் தாங்கிப் பிடித்ததற்காக அசோக் செல்வனுக்கு சுத்தம் பார்க்காமல் கைகுலுக்கல்கள்.

ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, ஷிவாத்மிகா என எக்கச்சக்க நாயகிகள். அனைவருமே தங்களுக்கான பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அழகம்பெருமாள், அபிராமி, ‘நட்புக்காக' தோன்றும் ஜீவா என்று அனைவருமே அந்தந்த மனிதர்களாக மாறியிருக்கிறார்கள்.

விது அய்யனாவின் ஒளிப்பதிவு கொங்கு மண்டலம், மேற்கு வங்கம், இமாச்சலின் பனிப்பிரதேசம் எனப் பல இடங்களின் எழில் கொஞ்சும் அழகை அப்படியே அள்ளி வந்திருக்கிறது. பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும், காட்சிகளின் உணர்வுகளை தரணின் பின்னணி இசை அதிகப்படுத்தி அதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நித்தம் ஒரு வானம் - சினிமா விமர்சனம்

இயல்பான மனிதர்கள் நிரம்பிய ஃபீல்குட் கதைதான் என்றாலும், அதில் மூன்று டிராக், ஒவ்வொன்றுக்கும் ஒரு சஸ்பென்ஸ், ஒரு க்ளைமாக்ஸ் என்று திரைக்கதையில் வெரைட்டி காட்டுகிறார் அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக். கொஞ்சம் சறுக்கினாலும் புரியாமல் போய்விடக்கூடிய திரைக்கதை அமைப்பு மேல் வெற்றிகரமாகப் பயணித்துக் கவனிக்க வைக்கிறார். ஆனால் முதல் பாதியில் சுவாரஸ்யமாகத் தொடங்கும் கதை, போகப் போக ‘ஃபீல்குட் மூவி டெம்ப்ளேட்' நோக்கி நகர நகர. ‘இதுதானே நடக்கப்போகிறது' என்று நம்மை நினைக்க வைத்துவிடுகிறது.

‘நல்லதும் கெட்டதும் கலந்த வாழ்க்கையை அப்படியே எதிர்கொள்வோம்' என்ற ஞானத்தைச் சொல்லும் போதிமரம் இந்த ‘வானம்.'