சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இந்தி தெரியாது; பாலிவுட் வேண்டாம்!”

நிவேதா பெத்துராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
நிவேதா பெத்துராஜ்

“கிளாமர் என்ற விஷயம் ஒரு நடிகையோட கம்ஃபர்ட் ஜோனைப் பொறுத்தது. என்கிட்ட ‘இந்த டிரஸ் போட முடியுமா’ன்னு கேட்பாங்க, ‘முடியாது’ன்னு நான் சொல்லிடுவேன். எனக்கு எது வசதியா இருக்கோ, அதைத்தான் நான் போடமுடியும்.’’

கேட்கும் கேள்விகளுக்குப் பளிச்செனப் பதில் சொல்கிறார், நிவேதா பெத்துராஜ்.

“ ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் உங்களுக்கு என்ன கேரக்டர்?”

“நான் பிரபுதேவா சாருக்கு மனைவியா நடிச்சிருக்கேன். விஷ்ணு விஷாலுடன் நடிச்ச ‘ஜெகஜால கில்லாடி’ படத்துல ஒரு பாட்டுக்கு பிரபுதேவா மாஸ்டர் நடனம் அமைச்சிருந்தார். அதுக்குப் பிறகு இந்தப் படத்துலதான் அவரைப் பார்த்தேன். அதிகமா எதுவும் பேசமாட்டார். சரியான நேரத்துக்கு வந்து சரியா நடிச்சுக் கொடுத்துட்டுப் போயிடுவார். எந்தக் காட்சியா இருந்தாலும் டக்குனு முடிச்சிடுவார்.”

“ ‘சங்கத்தமிழன்’ படத்துல எப்படி கமிட் ஆனீங்க?”

“இயக்குநர் விஜய் சந்தர் கதையைச் சொல்லும்போதே, ‘மதுரைப் பொண்ணு மாதிரி படத்துல வருவீங்க’ன்னு சொன்னார். அதுக்காகவே ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, நான் மதுரைப் பொண்ணுதான். ஆனா, படத்தோட ஷூட்டிங் மதுரையில நடக்கலை, குற்றாலத்துல நடந்தது. அடுத்த ஷெட்யூல் காரைக்குடியில நடக்கப்போகுது. தேன்மொழிங்கிற கேரக்டர்ல விஜய் சேதுபதிக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். எங்கே தப்பு நடந்தாலும், தட்டிக் கேட்க இந்தத் தேன்மொழி இருப்பா!”

“விஜய் சேதுபதிக்கும், உங்களுக்குமான கெமிஸ்ட்ரி எப்படியிருக்கும்?”

“விஜய் சேதுபதி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததுமே, யதார்த்தமா நடிச்சு, நம்மையும் அப்படி மாத்திடுவார். இந்தப் படத்துல அவருக்கு டபுள் ரோல். அவருடைய கரியரில் முக்கியமான படமா இருக்கப்போற இதில் நானும் நடிக்கிறது, சந்தோஷம்.”

“நீங்க எதிர்பார்த்து வந்தது, சினிமாவுல நிறைவேறியதா?”

“அப்படி எதையும் எதிர்பார்த்து நான் சினிமாவுக்கு வரலை. இதுவரைக்கும் கிடைச்ச எல்லாமே எனக்குப் போதுமானதா இருக்கு. தமிழைவிடத் தெலுங்கில் இவ்வளவு நல்ல கேரக்டர்ஸ் எனக்குக் கிடைக்கும்னு எதிர்பார்க்கல. அப்படித் தமிழிலும் நிறைய பண்ணணும்னு நினைக்கிறேன். தெலுங்கில் இப்போ அல்லு அர்ஜூனுடன் ஒரு படத்துல கமிட் ஆகியிருக்கேன்.”

“இந்தி தெரியாது; பாலிவுட் வேண்டாம்!”

“நீங்க நடிச்ச ‘பார்ட்டி’ படம் இன்னும் ரிலீஸ் ஆகலையே, என்ன பிரச்னை?”

“தயாரிப்பாளர்கள் தரப்புல என்ன நடந்துகிட்டிருக்குன்னு எனக்குத் தெரியல. ஏன் படம் ரிலீஸ் ஆகலைன்னு எனக்குத் தெரியாது. ஆனா, படம் எப்போ ரிலீஸ் ஆனாலும் கண்டிப்பா ஹிட் ஆகும்னு நம்பிக்கை இருக்கு.”

“ரெண்டு, மூணு ஹீரோயின்கள் இருந்தாலும் அந்தப் படத்துல நடிக்கிறீங்க. இது உங்க சினிமா கரியரை பாதிக்காதா?”

“கண்டிப்பா பாதிக்காது. வேலையை வேலையா மட்டுமே பார்க்கிற ஆள் நான். எத்தனை பேர் ஒரு படத்துல இருக்காங்கன்னு நான் பார்க்கிறதில்லை. என் கேரக்டர் நல்லா இருக்கான்னு மட்டும்தான் யோசிப்பேன்.”

“பெண்களை மையப்படுத்திய படங்கள் நிறைய வருது. உங்களையும் அப்படியான படங்களில் எதிர்பார்க்கலாமா?”

“தமிழ்ல நான் அடுத்து நடிக்கப்போற படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம்தான். அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்குறார்.”

“ஹாலிவுட் படத்துல நடிக்க ஆசைன்னு ஒருமுறை சொல்லியிருந்தீங்களே?!”

“பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தியாவிலிருந்து போய், ஹாலிவுட் படத்துல நடிச்சிருக்காங்க. எனக்கும் அப்படி நடிக்க ஆசை இருக்கு. சம்பளம் எங்கே அதிகம் கிடைக்குதோ, அங்கே போய் நடிக்கிறது நல்லதுதானே! அதேசமயம், எனக்கு ரெண்டு பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் வேண்டாம்னு தவிர்த்துட்டேன். ஏன்னா, எனக்கு இந்தி தெரியாது. பாலிவுட் படம் கம்ஃபர்ட்டா இருக்காதுன்னு தோணுச்சு.”

“இந்தி தெரியாது; பாலிவுட் வேண்டாம்!”

“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நீங்க போட்டோ எடுத்தது, சமூக வலைதளங்களில் விவாதமாச்சே?

“மீனாட்சி அம்மன் கோயில், நம்ம கோயில். நம்ம ஊரோட பெருமை. அந்தக் கோயிலை நினைச்சு நான் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன். கோயிலுக்குள்ளே தனியா புகைப்படக்காரர்களை வைத்து அங்கே வர்ற சுற்றுலாப் பயணிகளுக்குப் போட்டோ எடுத்துக் கிட்டுதான் இருக்காங்க. நான் செல்போன்ல எடுத்த படத்தை இன்ஸ்டாகிராம்ல போட்டது தப்புன்னா, இவங்க புகைப்படக்காரர்கள்கிட்ட போட்டோ வாங்கிப் பதிவு பண்றதும் தப்புதான். இதை ஏன் பிரச்னை ஆக்குனாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியல.”

- படங்கள்: மக்கா ஸ்டூடியோஸ்