Published:Updated:

பெண்கள் அவசியம் காண வேண்டும்; ஆண்கள் மிக அவசியமாகக் காண வேண்டும்.. `அக்னி சாட்சி' செய்த மேஜிக் என்ன?

அக்னி சாட்சி

80'ஸ் & 90'ஸ் தமிழ் சினிமா `நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் - `அக்னி சாட்சி’.

Published:Updated:

பெண்கள் அவசியம் காண வேண்டும்; ஆண்கள் மிக அவசியமாகக் காண வேண்டும்.. `அக்னி சாட்சி' செய்த மேஜிக் என்ன?

80'ஸ் & 90'ஸ் தமிழ் சினிமா `நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் - `அக்னி சாட்சி’.

அக்னி சாட்சி
வணிகரீதியாக பிரமாண்டமான வெற்றி பெற்று பரவலான கவனத்தைப் பெற்ற திரைப்படங்களைத் தாண்டி, `வித்தியாசமாக’ உருவாக்கப்பட்டு, ஆனால் கவனத்தைப் பெறாத திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளையும் விகடன் வாசகர்கள் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அந்த நோக்கில் இதில் `அக்னி சாட்சி’ திரைப்படத்தைப் பற்றி பார்க்கவிருக்கிறோம்.

‘பெண் மையத் திரைப்படங்களை’ உருவாக்குவது என்பது சில வருடங்களுக்கு முன் இந்தி சினிமாவில் ஒரு டிரெண்டாகத் தொடங்கி அப்படியே தென்னிந்திய மொழிகளுக்கும் பரவின. `அறம்’ போன்ற நல்ல திரைப்படங்களையும் பார்த்தோம். `பொன்மகள் வந்தாள்’ போன்ற கோராமைகளையும் பார்த்தோம்.

ஆனால், 60-களின் காலகட்டத்திலேயே வலிமையான பெண் பாத்திரங்களையும் பெண் மையத் திரைப்படங்களையும் தொடர்ச்சியாக உருவாக்கிய முன்னோடி என்று இயக்குநர் கே.பாலசந்தரைச் சொல்ல வேண்டும். ‘தலைல முட்டினா கொம்பு முளைச்சுடும்’ என்று தமிழ் சினிமாவின் நாயகிகள், இன்றும் கூட அரை லூஸாக உலவிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அந்தக் காலத்திலேயே விதம் விதமான பெண் கதாபாத்திரங்களை அவர் உருவாக்கினார்.

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

‘கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு கர்வமா இருக்கலாம்... கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’ என்று அதிரடியாகப் பேசிய `கவிதா’ (அவள் ஒரு தொடர்கதை), காதலனைக் கொன்றவனை பழிவாங்குவதற்காக அவனுக்கே சித்தியாக வந்து அதிர்ச்சி தரும் செல்வி (மூன்று முடிச்சு), காதலன், சேடிஸ்ட் கணவன், ஒருதலைக் காதல் செய்யும் அப்பாவி என்று மூன்று ஆண் முனைகளில் அலையுறும் அனு (அவர்கள்), என்று வித்தியாசமான பல கதையோட்டங்களைக் கையாண்ட இயக்குநராகப் பாலச்சந்தர் திகழ்ந்தார். இந்தப் பட்டியல் மிக நீண்டது.

இந்த வரிசையின் உச்சம் என்று `அக்னி சாட்சி’ கண்ணம்மாவைச் சொல்லலாம். இதர பெண் கதாபாத்திரங்களுக்கு துணிச்சல், பெண்ணுரிமை சார்ந்த விழிப்புணர்வு, சமூகக் கோபம் போன்ற குணாதிசயங்கள் இருந்தன. ஆனால், கண்ணம்மா பிரத்யேகமானவள். அவளும் இதே விதமாகப் படைக்கப்பட்டவள் என்றாலும் அவளுக்கு சில மனச்சிக்கல்களும் பயங்களும் இருந்தன.

கூர்மையான நுண்ணுணர்வும் கலைரசனையும் கொண்ட கண்ணம்மாவின் உலகில் அற்பத்தனங்களுக்கும் கீழ்மைகளுக்கும் இடமில்லை. ஆணாதிக்க செயற்பாடுகளைக் கண்டால் தன்னிச்சையாகப் பொங்குவாள். அதே சமயத்தில் ஒரு சராசரிப் பெண்ணாகவும் குடும்பத்தில் பணிந்து போவாள். அவள் எப்போது எரிமலையாவாள், எந்தச் சமயத்தில் ஜில்லிடும் அருவியாக வழிவாள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஏன், அவளுக்கே தெரியாது. அன்பு மட்டுமே அவளைக் கட்டிப் போடும் ஆயுதமாக இருந்தது.

கண்ணம்மாவின் கல்யாணக் குணங்களுக்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

குழந்தை வடிவில் இருக்கும் மெழுகுவர்த்தி உருகி வழிவதைக் காணச் சகியாமல் “இந்த மாதிரி சாடிஸ்ட்ங்க இருக்க வீட்ல சாப்பிட மாட்டேன்” என்று விருந்தைப் புறக்கணித்து வெளியேறுகிறவள், அவள். மனைவியை விதம் விதமாக கொடுமைப்படுத்தும் ஒரு ஆணாதிக்க கணவனை சினிமாவில் கூட அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட நடிகனின் வீட்டிற்கே சென்று அவனின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பாள்.

ஹோட்டலில் தன்னை வெறித்துப் பார்த்து ஆபாச சமிக்ஞைகள் செய்யும் இளைஞனை துணிச்சலுடன் சென்று அடித்துப் புரட்டி எடுப்பவள்.

அக்னி சாட்சி
அக்னி சாட்சி

"நம்மைக் கொண்டு ஆயிரம் சிலுவைகளை உருவாக்கும் இந்த மனிதர்களால், தம்மைக் கொண்டு ஒரு ஏசுவை ஏன் உருவாக்க இயலவில்லை?” ஒரு மரம் முணுமுணுப்பதை இப்படி `கவிதையாக’ வடித்து பொங்குகிறவள் கண்ணம்மா. தன்னைக் கொடுமை செய்யும் மாமியாரின் மீது கொசு அமர்ந்து கடிப்பதைக் கூட கவிதை வடிவில் பாடி குறும்பு செய்யும் விளையாட்டுக்காரி.

அவளின் அறச்சீற்றத்தையும் சமூகக் கோபங்களையும் அவளுடைய கோணத்தில் புரிந்துகொள்ளாதவர்கள், அவளை ‘பைத்தியம்’ என்கிறார்கள். அவ்வப்போது கோபம் கொண்டாலும் கண்ணம்மாவைப் புரிந்துகொள்ளவும் அரவணைக்கவும் முயன்ற ஒரே ஜீவன் அவளது கணவன் அரவிந்தன் மட்டுமே.

`கண்ணம்மா’
`கண்ணம்மா’ என்கிற இந்தப் பிரத்யேகமான பாத்திரத்தை இவரை விட்டால் வேறு எவராவது இத்தனை திறமையாகக் கையாண்டிருக்க முடியுமா என்கிற மலைப்பை ஏற்படுத்தி விட்டார் சரிதா.

தம்மைப் பாதிக்கும் விஷயங்களைக் கூர்மையாகவும் நகைச்சுவையாகவும் வசனக் கவிதையாக வடித்துவிட்டு கண்ணைச் சுருக்கி வெள்ளந்தியாக சிரிப்பதாகட்டும், `என்னை எவ்ளோ பிடிக்கும்... சொல்லுங்க... சொல்லுங்க’ என்று கணவனை நச்சரிப்பதாகட்டும், அதை நிரூபிக்கும் வகையில் ஆளுயர புகைப்படம் ஒன்றை அவன் வைக்கும்போது கண்ணீர் பெருக காலில் விழுந்து வணங்குவதாகட்டும், தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லச் சொல்லி வேலைக்காரச் சிறுமியை, மாமியார் மிரட்டும்போது கோபத்துடன் அரிவாள்மனையை ஓங்குவதாகட்டும், அதைத் தொடர்ந்து தன் கணவனின் கோபத்திற்கு அஞ்சி நடுங்கி படுக்கையில் சென்று குழந்தை போல் சுருண்டு கொள்வதாகட்டும்…

என்று `கண்ணம்மா’வாகவே வாழ்ந்திருந்திருக்கிறார் சரிதா. இதற்காக அந்த ஆண்டின், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருதை அவர் பெற்றிருந்தது கூட குறைச்சல்தான். தேசிய விருதே கிடைத்திருக்க வேண்டும். அப்படியொரு உக்கிரமான நடிப்பு. அறையில் வைத்து தன்னைப் பூட்டி விடும்போது ‘இனிமே தப்பு பண்ண மாட்டேன்... கதவைத் திறங்க…” என்று கத்திக் கூப்பாடு போட்டு மயங்கி குளியலறையில் சரியும் காட்சியில் `இப்படி ஒரு நடிப்பா’ என்று நாம் பிரமிக்க வேண்டியிருக்கிறது. சரிதாவின் உடம்புக்குள் நடிப்பு பூதம் ஏதாவது புகுந்து கொண்டதா என்று மலைக்க வேண்டியிருக்கிறது. அப்படியொரு ராட்சசத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார் சரிதா.

அக்னி சாட்சி
அக்னி சாட்சி
மாறுதலே இல்லாத monotonous நடிப்பை பல வருடங்களாக வழங்குபவர் சிவகுமார். ஆனால், அவரைச் சரியான விதத்தில் கையாண்டால் அட்டகாசமாக ஜொலிப்பார் என்பதற்கான உதாரணம் `சிந்து பைரவி’. அதே பாலசந்தர்தான் `அக்னி சாட்சியிலும்’ அரவிந்தன் என்கிற பாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.

கண்ணம்மாவுக்கு உள்ள மனப்பிரச்னையின் பின்னணி அறியாமல், அவரின் கலை ரசனையில் மயங்கி காதலில் விழுபவர் அரவிந்தன். இதில் நடன இயக்குநர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவகுமார். என்னவொன்று சிவகுமாரை, டான்ஸ் மாஸ்டராகக் கற்பனை செய்து பார்க்கத்தான் சற்று கஷ்டமாக இருக்கிறது. கையை விறைப்பாக ஆட்டி... 1, 2, 3 சொல்லி ஒரு மாதிரியாக சமாளித்திருக்கிறார். இதே மாதிரியான கோபக்கார டான்ஸ் மாஸ்டர் பாத்திரத்தை `புன்னகை மன்ன'னிலும் உருவாக்கியிருந்தார் பாலசந்தர்.

அரவிந்தன் பாத்திரம் அடிப்படையில் நற்குணங்களுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும் `இவரு ரொம்ப… நல்லவருப்பா…’ என்று மிகையாகவும் உருவாக்கப்படவில்லை. ஒரு சராசரி நபருக்குள்ள குணாதிசயமும் அவரிடம் வெளிப்படுகிறது. காதலித்து திருமணம் செய்தாலும் `கண்ணம்மாவிடம்’ உள்ள மனச்சிக்கல்களை எதிர்கொள்ளும்போது கோபம் கொண்டு மனைவியை அடிக்கவும் செய்கிறார். தனது வீட்டார் தரும் அழுத்தம் தாங்காமல் விவாகரத்து செய்யவும் முடிவெடுக்கிறார்.

ஆனால், அந்தச் சமயத்தில் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் நெகிழ்ந்து தனது முடிவை மாற்றிக்கொள்கிறார். மிகுந்த சகிப்புத்தன்மையுடன் மனைவியை குணமாக்குவதற்கான மருத்துவ முயற்சிகளை எடுக்கிறார். மனைவியிடம் கோபப்படுவதும், அவளது கவிதைகளைக் கேட்டு நெகிழ்வதும், அவளின் இளம்வயது பிரச்னையைப் புரிந்து கொண்டு அரவணைப்பதில் உறுதி காட்டுவதும் என `அரவிந்தன்’ பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் சிவகுமார்.

அக்னி சாட்சி
அக்னி சாட்சி
தனது திரைப்படத்தில் பல பாத்திரங்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றையும் தனித்தன்மையாக உருவாக்கி பார்வையாளர்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிய வைப்பதில் பாலசந்தர் விற்பன்னர்.

வீட்டிற்குள் நுழையும் ஒரு புதிய மருமகளை, மாமியார் - மாமனார் - நாத்தனார் போன்றோர்கள் எதிர்கொள்ளும் குடும்ப அரசியலும் அதன் வம்புகளும் இந்தத் திரைப்படத்தில் மிக சுவாரஸ்யமாகவும் இயல்பாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஒரே தீக்குச்சியில் குத்துவிளக்கின் அத்தனை முகங்களையும் ஏற்றுவதின் மூலம் மருமகளின் சிக்கன குணத்தை சோதிப்பது முதல் சம்பந்தியம்மாள் கொண்டு வரும் சீதன தின்பண்டங்களை வெறுப்புடன் வெளியில் எறிவது வரை ஒரு சம்பிரதாயமான மாமியாரின் பிம்பத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் எஸ்.ஆர்.சிவகாமி.

41-ம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து தன் அம்மாவின் வீட்டில் அவ்வப்போது `டேரா’ போட்டு வம்பு பேசும் நாத்தனாரின் சிண்டுமுடிதலை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் கே.எஸ்.ஜெயலஷ்மி. குழந்தையை எப்போதும் இடுப்பில் இடுக்கிக் கொண்டு தூக்குப் பையை கணவரிடம் தந்து சுமக்கச் செல்லும் இவரின் பாத்திரம் சுவாரஸ்யமானது. நேரில் சந்திக்க முடியாதபோது, தாயும் மகளும் டெலிபோனில் வம்பு பேசும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன.

இதை விடவும் சுவாரஸ்யமானது, சிவகுமாரின் தந்தை பாத்திரம். மனைவியின் அதட்டலுக்கு அடங்கி நடிக்கும் கணவரின் பாத்திரம் என்றால் பூர்ணம் விஸ்வநாதனுக்கு அல்வா சாப்பிடுவது போல. மனிதர் இதில் பின்னியிருக்கிறார்.

அக்னி சாட்சி
அக்னி சாட்சி
மனைவி ஒரு முடிவை எடுத்துவிட்டு, `நீங்களே சொன்ன மாதிரி சொல்லிடுங்க’ என்று சொன்னவுடன், சபையில் அதை கம்பீரமாகச் சொல்லும் அந்த அழகு இருக்கிறதே. அட்டகாசம். ஓர் அசட்டுத்தனமான கணவனின் கோழைத்தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் பூர்ணம். வெளியில் காட்ட முடியாத கோபத்தையெல்லாம் வீட்டு வேலைக்காரனிடம் `சத்யம்... மடையா... மடையா...’ என்று கத்தி வெளிப்படுத்துவது நகைச்சுவை.

சிவகுமாரின் வீட்டார் தரும் நெருக்கடி காரணமாக விவாகரத்து ஏற்பாட்டைச் செய்ய ஒரு வழக்கறிஞர் வருகிறார். இவர் வருவது சில காட்சிகள்தான் என்றாலும் மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுகிறார். சட்டத்தை விடவும் வேத மந்திரங்களுக்கும் மரபிற்கும் முக்கியத்துவம் தந்து, திருமண மந்திரங்களின் அர்த்தத்தைச் சொல்லி இவர் விளக்கம் அளிக்கும் காட்சி முக்கியமானது. வழக்கறிஞர் என்பதற்காக சுயலாபத்திற்காக விவாகரத்தை இவர் வற்புறுத்தாமல் அதை நிராகரிக்கும் விதமாக பேசுவது நெகிழ்வை ஏற்படுத்தும் காட்சி.

`அக்னி சாட்சி’
`அக்னி சாட்சி’ என்கிற படத்தின் தலைப்பும் அதைத்தான் குறிக்கிறது. மந்திரங்கள், சடங்குகளின் சாட்சியாக ஒருவரை தன் இல்லத் துணையாக ஏற்றுக்கொண்ட பின், அவரிடம் உள்ள பிரச்னைகள் காரணமாக வெட்டிவிட்டு விலகுவதை இந்தத் திரைப்படம் விமர்சிக்கிறது.

கண்ணம்மாவின் தந்தையாக வருபவரும் சுவாரஸ்யமான பாத்திரம்தான். சென்னை வானொலியில் நிலைய வித்வானாக இருக்கும் இவர், அசந்தர்ப்பமான சூழலிலும் கர்நாடக சங்கீதத்தை இழுவையாகப் பாடிக்கொண்டிருப்பது ஒரு பக்கம் காமெடியாகத் தெரிந்தாலும், ஒரு நெருக்கடியான சூழலில் மகளுக்காகப் பாரதியின் ‘பாப்பா’ பாட்டு பாடிக்காட்டும் காட்சியில் கண்கலங்க வைத்துவிடுகிறார். "உங்க மகளிடம் உள்ள குறையை மறைச்சு வெச்சு திருமணம் செஞ்சு வெச்சிட்டீங்களா?” என்று சிவகுமார் இவரிடம் வெடிக்கும்போது தன் கையாலாகாத நிலையை இவர் வெளிப்படுத்துவதும் சிறப்பான காட்சி.

கண்ணம்மாவுக்கு சிகிச்சை தரும் உளவியல் ஆலோசராக சாருஹாசன் சில காட்சிகளில் வந்து போனாலும் இயல்பான நடிப்பு அவருடையது. “ஏதாவது ஓவியம் வரைஞ்சு காண்பிங்க” என்று இவர் சொன்னதும், 'ஓர் இந்திய இளம்பெண் சிலுவையில் அறையப்பட்டிருப்பது போல’ சரிதா வரைந்து காட்டுவது, கண்ணம்மாவின் `அகம்’ சிறப்பாக வெளிப்படும் காட்சி.

சில காட்சிகளில், வேலைக்காரச் சிறுமியாக வரும் பெண்ணின் நடிப்பைக் கூட பார்வையாளர்களின் மனதில் பதிந்துவிடும்படி செய்துவிடுகிறார் பாலசந்தர்.

அக்னி சாட்சி
அக்னி சாட்சி
ரஜினியும் கமலும் கூட இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆம்... ஒரு காட்சியில் வந்து போகிறார்கள். நாட்டிய நாடகத்தை சிறப்பாக இயக்கியிருக்கும் அரவிந்தனைப் பாராட்டிப் பேசுவது போல நடிகர் கமல்ஹாசன் வந்து போகிறார். ஒரு பிரபலம் மேடையில் செய்யும் கோணங்கித்தனங்களை, இவர் அப்படியே செய்து காட்டியிருப்பது சுவாரஸ்யமான கிண்டல்.
அவர்கள்’ திரைப்படத்தில் கொடுமைக்கார கணவராக ரஜினி நடித்திருப்பார். அந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் சரிதா, மனக்கொதிப்புடன் நடிகரின் வீட்டிற்கே சென்று பொங்குவார். அவரைப் புரிந்துகொள்ளும் ரஜினி, தன் மனைவியை அழைத்து வந்து `அது நிஜமல்ல. நடிப்பு’ என்று புரிய வைப்பது இந்தத் திரைப்படத்தின் சுவாரஸ்யமான காட்சிகளுள் ஒன்று. ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த், திரையில் தோன்றிய ஒரே திரைப்படம் இதுதான் என்று நினைக்கிறேன்.

இது மாதிரியான கிம்மிக்ஸ்களைத் திறமையாக உபயோகிப்பதில் பாலசந்தர் கில்லாடியான இயக்குநர்.

1985-ல் வெளியான `சிந்து பைரவி’ திரைப்படத்தில்தான் `பாலசந்தர் - இளையராஜா’ கூட்டணி தொடங்கியது. எனவே, அதுவரை வெவ்வேறு இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் பாலசந்தர். இந்த வரிசையில் அவர் பிரதானமாகக் கைகோத்தது எம்.எஸ்.விஸ்வநாதனுடன். `அக்னி சாட்சி’ திரைப்படத்தின் இசை எம்.எஸ்.வி-தான்.

இதில் ஆறு பாடல்கள் இருந்தாலும் முக்கியமான பாடல் `கனா காணும் கண்கள் மெல்ல’ என்பதுதான். தன் மனப்பிரச்னை காரணமாக உறக்கம் வராமல் தவிக்கும் சரிதாவுக்காக, சிவகுமார் பாடும் தாலாட்டுப் பாடல்.

கே.பாலசந்தர் - எம்.எஸ்.விஸ்வநாதன்
கே.பாலசந்தர் - எம்.எஸ்.விஸ்வநாதன்

'குமரி உருவம்… குழந்தை உள்ளம், ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ, தலைவன் மடியில், மகளின் வடிவில் தூங்கும் சேயோ…' என்கிற அற்புதமான வரிகளில் படத்தின் ஒட்டுமொத்த ஜீவனையும் கொண்டு வந்துவிடுவார் வாலி. இந்தத் திரைப்படத்துக்காக வாலி பிரத்யேகமாக எழுதிய புதுக்கவிதைகள், பாடல்களாகப் பயன்படுத்தப்பட்டன. புதுக்கவிதைகள், படம் முழுவதும் பாடல்களாக உபயோகப்படுத்தியது இந்தப் படத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். இந்தக் கவிதைகள் பிறகு `பொய்க்கால் குதிரைகள்’ என்னும் தொகுப்பில் இடம் பெற்றன.

`கனா காணும் கண்கள்’ பாடல் வரிகளைப் போலவே காட்சிகளும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. சரிதாவின் மனக்குழப்பங்களை, ஒரு பாலே டான்சரின் ஆவேச நடனம் வழியாக வெளிப்படுத்தியது நல்ல உத்தி.

`அக்னி சாட்சி’ திரைப்படத்தை, ஆணாதிக்க உலகின் கொடுமைகளில் பல நூற்றாண்டுகளாக சிக்கித் தவிக்கும் பெண் குலத்தின் பிரதிநித்துவப் படைப்பு எனலாம். தங்களின் மனப்புழுக்கங்களை வெளியே சொல்லாமல் பல பெண்கள் உள்ளுக்குள்ளே மெல்ல சாகிறார்கள். சில சதவிகிதப் பெண்கள், சாமி வருவது போன்ற பாவனையில் தங்களின் புழுக்கங்களை வெளியே கொட்டுகிறார்கள். சிலருக்கு இது ஹிஸ்டீரியாக மாறி விடுகிறது.

அக்னி சாட்சி
அக்னி சாட்சி

இப்படி தன் மனப்புழுக்கத்தை உள்ளேயே மறைத்து வைத்துக் கொள்ளாமல் வெளியில் ஆவேசமாக ஒரு பெண் கொட்டினால் எப்படியிருக்கும்? அதுதான் `கண்ணம்மா’வின் பாத்திரம். வெடிக்கக் காத்திருக்கும் ஒரு குக்கர் மூடியை மெல்ல திறந்து காட்டியிருக்கிறார் பாலசந்தர். ஆனால், சமூகத்தின் பிரச்னைகளை ஆராயாமல், அதனால் பாதிக்கப்பட்டவர்களை ‘பைத்தியம்’ என்று சொல்கிறது இந்த உலகம். `கண்ணம்மாவும்’ அனுதாபத்துக்குரிய அப்படிப்பட்ட பைத்தியங்களுள் ஒருத்திதான்.

`அக்னி சாட்சி’ திரைப்படம், பெண்கள் அவசியம் காண வேண்டியது. அதை விடவும் முக்கியமாக ஆண்கள் மிக அவசியமாகக் காண வேண்டியது. பெண்களின் மூடப்பட்ட மனப்புழுக்கங்களை அறிந்துகொள்ளவும் அரவணைப்பதற்கான உந்துதலை அவர்கள் பெறவும் ஒரு வாய்ப்பு. அவர்களால் `அரவிந்தனாக’ மாற முடியாவிட்டாலும் பெண்களின் மனங்களைப் புரிந்துகொள்ள குறைந்தபட்ச வாய்ப்பையாவது இந்தத் திரைப்படம் ஏற்படுத்தித் தரும்.

இந்தத் தொடரில் அடுத்து எந்தப் படத்தை அலசலாம்? கமென்ட்ஸ் ப்ளீஸ்!