Published:Updated:

29 வயதில் கமல் ஏற்ற 60 வயது வேடம்; `இந்தியப் பேரழகி’ ஜெயப்ரதா... `சலங்கை ஒலி' வெற்றி பெற்ற கதை!

சலங்கை ஒலி

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘சலங்கை ஒலி’.

Published:Updated:

29 வயதில் கமல் ஏற்ற 60 வயது வேடம்; `இந்தியப் பேரழகி’ ஜெயப்ரதா... `சலங்கை ஒலி' வெற்றி பெற்ற கதை!

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘சலங்கை ஒலி’.

சலங்கை ஒலி
என் இளமைப் பருவத்தில் தெலுங்கு திரைப்படங்கள் என்றாலே கேலியும் கிண்டலும் சார்ந்த மனப்பதிவுகளே எங்களின் நண்பர் குழுவில் அதிகம் இருந்தன. அடர்மஞ்சள் நிறத்தில் பேண்ட்டும், சட்டையும், பெல்ட்டும் அணிவது போதாதென்று அதே மஞ்சள் நிறத்தில் கூலிங்கிளாஸூம் போட்டுக் கொண்டு உடற்பயிற்சி செய்வது போன்ற நடனத்தில் வரும் ‘டூயட்’ பாடல்களைக் கிண்டல் செய்வோம்.

இப்படி தெலுங்கு சினிமாவில் உள்ள பல விஷயங்களை கேலி செய்து கொண்டிருப்போம். (ஜெயமாலினி பாடல்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு –ஹிஹி). என்டிஆர், கிருஷ்ணா போன்றவர்கள் இதில் எங்களுக்கு பிரதான இலக்காக இருந்தார்கள். தெலுங்கு சினிமாப் பாடல்களில் உள்ள தேய்வழக்குகளைப் பற்றி தனியாகவே எழுதி விடலாம்.

சிரஞ்சீவி நடித்த படங்கள் டப்பிங் செய்யப்பட்டு தமிழிற்கு வந்தவுடன் சூழல் சற்று மாறியது. அவரது நடனம் ஆடும் வேகத்திற்கும் லாகவத்திற்கும் தமிழ் ரசிகர்கள் இணையத் துவங்கினர். தமிழை விடவும் தெலுங்கில் மசாலா வாசனை சற்று தூக்கலாக இருந்த நிரந்தர அம்சம் மட்டுமே ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

இயக்குநர் கே.விஸ்வநாத்
இயக்குநர் கே.விஸ்வநாத்

ஆனால் இன்று நிலைமையே வேறு. மகேஷ்பாபுவும் ராம்சரணும் அல்லு அர்ஜூனும் நமக்கு மிக பரிச்சயமான முகமாகி விட்டார்கள். அவர்கள் நடித்த திரைப்படங்கள், தெலுங்கில் வெளியாகும் அதே நாளில் தமிழிற்கும் அறிமுகமாகி விடுகின்றன. திரைக்கதை, மேக்கிங், தொழில்நுட்பம் போன்றவற்றில் இன்று தமிழை விடவும் விற்பன்னர்களாகி விட்டார்கள். இது மட்டுமல்ல, ஹிட் அடித்த பல தெலுங்கு திரைப்படங்களின் திரைக்கதைகள் தமிழில் அதிக விலைக்கு வாங்கப்பட்டு இங்கு ரீமேக் ஆகின்றன. இதற்கு போட்டி வேறு. நம்மால் ஒரு காலத்தில் கிண்டலடிக்கப்பட்டவர்கள் இன்று நமக்கே வெப்பன் சப்ளை செய்யுமளவிற்கு முன்னேறியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தெலுங்கு திரைப்படங்கள் தமிழ் பார்வையாளர்களுக்கு அன்னியமாக இருந்தாலும் சில திரைப்படங்கள் மட்டும் அரிய விதிவிலக்காக இருந்தன. பாலசந்தர் இயக்கிய ‘மரோசரித்திரா’ ஆந்திராவில் ‘பம்பர் ஹிட்’டாக அமைந்தது மட்டுமல்லாமல், டப் செய்யப்படாமல் வெளியிடப்பட்டும், தமிழகத்தில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. கமல் நடித்தது என்பதில் ஒரு குறிப்பிட்ட சதவீதக் காரணம் இருந்தாலும் பாலசந்தரின் திறமையான இயக்கமும் படத்தின் உள்ளடக்கமும் பிரதான காரணங்களாக அமைந்தன.

இதைப் போலவே ‘சங்கராபரணமும்’ தமிழில் பரவலாக கவனிக்கப்பட்டதொரு ‘டப்பிங்’ படம். ராம் கோபால் வர்மாவின் ‘உதயம்’ நவீன தமிழ் இளைஞர்களிடையே அதிக கிளர்ச்சியை ஏற்படுத்திய படம். ‘நாகார்ஜூனா’வை தமிழ் பார்வையாளர்கள் மிக நெருக்கமாக உணர்ந்ததற்கு காரணம் இந்தப் படம்தான். இதில் வெளிப்பட்ட ‘நம்ம ஊர்’ ரகுவரனின் மிரட்டலான நடிப்பை எவரும் மறக்க முடியாது.
இந்த வரிசையில் தமிழ் பார்வையாளர்கள் அதிகம் கவனித்த, வெற்றிகரமாக ஓடிய ‘டப்பிங்’ திரைப்படங்களில் ஒன்று ‘சலங்கை ஒலி’. இதை ‘டப்பிங்’ படம் என்று சொன்னால் இன்று பலருக்கு நம்ப முடியாமல் கூட போகலாம். ‘டப்பிங்’ திரைப்படங்கள் பொதுவாக ஏற்படுத்தும் அந்நிய வாசனையைப் பெருமளவில் போக்கி இதை பெரும்பாலும் ‘தமிழ்’ படமாகவே பார்வையாளர்கள் உணர்ந்ததற்கு கே.விஸ்வநாத், இளையராஜா, கமல்ஹாசன் ஆகியோரை பிரதான காரணமாக சொல்லலாம்.
கே.விஸ்வநாத், கமல்ஹாசன்
கே.விஸ்வநாத், கமல்ஹாசன்

எந்தவொரு வெகுசன சூழலிலும் தனக்கென பிரத்யேகமான பாணியை உருவாக்கி, வணிக அம்சங்களிலிருந்து பெரிதும் விலகி அதிலிருந்து உயர்ந்து நிற்க முயலும் படைப்புகளைத் தரும் உன்னதமான கலைஞர்கள் சிலர் எப்போதும் இருப்பார்கள். அந்த வரிசையில் இயக்குநர் கே.விஸ்வநாத்தை ஒரு முன்னணி படைப்பாளியாகச் சொல்லலாம். இந்திய பாரம்பர்யக் கலைகளின் வழியாக சமூகப் பிரச்னைகளையும் தனிநபர் உணர்வுச் சிக்கல்களையும் தன் படைப்புகளில் உரையாடியவர். ஐந்து தேசிய விருதுகள், பத்து பிலிம்பேர் விருதுகள் போன்று பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியச் சினிமாவின் உயரிய விருதான ‘தாதாசாஹேப் பால்கே’ விருதையும் பெற்றவர்.

கே.விஸ்வநாத் இயக்கிய ‘கிளாசிக்’ திரைப்படங்களுள் முக்கியமானது ‘சலங்கை ஒலி’. நடனக்கலையின் முக்கியத்துவத்தை வெகுசன ரசிகர்களுக்கு உணர்த்திய அதே சமயத்தில் காதல், நட்பு போன்றவற்றின் மகத்துவத்தையும் இந்தத் திரைப்படம் உணர்த்தியது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பரதநாட்டியக் கலையைப் பயில பல ஆண்கள் முன்வந்தார்கள் என்கிற தகவல் அப்போது பிரபலமாக உலவியது. அதுவரை பெரும்பாலும் பெண்கள் ஆடக்கூடிய கலையாகவே இது கருதப்பட்டது.

பாலகிருஷ்ணன் என்கிற பாலுவின் வாழ்க்கைச் சம்பவங்கள் வழியாக இந்தப் படம் பயணிக்கிறது. முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதை, வசீகரமாகவும் குழப்பமின்றியும் சுவாரஸ்யமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

செல்வி சைலஜா ஆடும் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு விமர்சனம் எழுத வருகிறார் பாலகிருஷ்ணன். ‘பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்’ என்கிற வரி பாடலில் வரும் போது அதை பேய், பூதம் என்பது போன்ற பாவனைகளைக் காட்டி தவறாக ஆடுகிறார் சைலஜா. பஞ்சபூதங்கள் என்பது இயற்கையைக் குறிப்பது. இது மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் கைத்தட்டல்கள், தனக்கு கிடைக்கப்போகும் விருது ஆகியவை குறித்தே சைலஜாவின் கவனம் பெரிதும் இருக்கிறது.

சலங்கை ஒலி
சலங்கை ஒலி

உன்னதமான நடனக்கலை மெல்ல அழிந்து வரும் ஆத்திரத்திலும், அதில் உள்ள ஆபாசமான அரசியல் காரணமாகவும் தன் எழுத்தில் சைலஜாவின் நடனத்தைப் பற்றி காரசாரமாக விமர்சித்து விடுகிறார் பாலகிருஷ்ணன். சைலஜாவிற்கு பயங்கர கோபம் வருகிறது.

இந்த விஷயம் சைலஜாவின் தாய்க்கு தெரியவருகிறது. ‘பாலகிருஷ்ணன்’ என்கிற பெயர் அவருக்குள் கடந்த கால நினைவுகளை எழுப்புகிறது. ஆம், பாலகிருஷ்ணன் – மாதவி என்கிற அந்த இருவருக்குள் ஒரு கண்ணியமான கடந்த கால காதல் இருக்கிறது.

பாலகிருஷ்ணனின் அபாரமான நடனத்திறமையை நன்கு அறிந்தவர் மாதவி. ஒரு காலத்தில் அதை ஆதரித்தவர். பாலகிருஷ்ணன் தன் மகளுக்கு ‘குரு’வாக வரவேண்டும் என்று விரும்புகிறார் மாதவி. மகளின் கடுமையான எதிர்ப்பைத் தாண்டி பாலகிருஷ்ணனை வரவழைக்கிறார். ஆனால் அவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்திக்க முடியாதபடி ஒரு சிக்கல் இருக்கிறது.

தன்னை விமர்சித்த பாலகிருஷ்ணனை குருவாக ஏற்காமல் கோபம் கொள்கிறாள் சைலஜா. பாலகிருஷ்ணனுக்கும் தன் தாய்க்கும் இருக்கும் கண்ணியமான உறவைத் தவறாகப் புரிந்து கொள்ளவும் துணிகிறாள். ஒரு கட்டத்தில் அவளது அகங்காரம் அழிந்து பாலகிருஷ்ணனின் மேதைமையை உணர்ந்து அவரைத் தனது குருவாக ஏற்கிறாள். தனக்குத் தெரிந்த கலையை தன் வாரிசுக்கு கற்பித்து விட்ட நிம்மதியோடு இறக்கிறார் பாலகிருஷ்ணன்.

NO END FOR ANY ART!
END என்ற வார்த்தைகள் படத்தின் இறுதியில் வந்து பின்பு அவை மாறி, NO END FOR ANY ART என்கிற குறிப்புடன் படம் முடிகிறது. ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்வையாளர்கள் அரங்கிலிருந்து வெளியேறியிருப்பார்கள்.
சலங்கை ஒலி
சலங்கை ஒலி

பாலகிருஷ்ணன் என்கிற பாத்திரத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் கமல்ஹாசன். பாலுவாகவே வாழ்ந்திருக்கிறார் எனலாம். தங்களின் கலைப்பயணம் உச்சத்தில் இருக்கும் போது வயதான பாத்திரங்களை ஏற்க இளம் நடிகர்கள் பொதுவாக தயங்குவார்கள். சிவாஜி போன்றவர்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்த வரிசையில் தன் இளம் வயதிலேயே முதிய வேடங்களைத் தாங்க கமல் தயங்கியதில்லை.

அறுபது வயது முதியவராக இதில் நடித்த போது கமல்ஹாசனின் வயது வெறும் இருபத்தொன்பது மட்டுமே.

தன்னை விமர்சித்து எழுதிய கமலின் மீது கோபப்படும் சைலஜா, “நாட்டியத்தைப் பற்றி உனக்கென்ன தெரியும்” என்று கேலியாக கேட்க, அந்தப் பாடலின் வரிகளை ஒலிக்க விட்டு பரதநாட்டியம், கதக், கதகளி ஆகிய நடன பாணிகளில் ஆடிக் காட்டும் கமல், ஒரு கட்டத்தில் காலை உயர்த்தும் போது பணியாளர் ஒருவர் எடுத்து வரும் டிரேயில் கால் பட்டு தம்ளர்கள் அனைத்தும் மேலே பறக்கும். காட்சியில் சைலஜாவைப் போலவே நாமும் திகைத்து உறைந்து விடுகிறோம். இங்கு துவங்கும் கமலின் அபாரமான நடிப்பு படம் நெடுகிலும் நிறைந்திருக்கிறது.

‘நண்பன்’ என்கிற பாத்திரத்திற்காகவே சரத்பாபுவை நிரந்தரமாக நேர்ந்து விட்டு விட்டார்களா, என்னவோ. இதில் கமலின் நண்பன் ‘ரகு’ என்கிற பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். “அவனவன் கையைக் காலைப் பிடிச்சு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தா.. அதையும் தொலைச்சிட்டு வந்து நிக்கறியேடா” என்று கமலைக் கோபித்துக் கொள்வதும், கமல் வலியால் முகத்தைச் சுளித்து இருமும் போது அடுத்த கணமே வந்து தடவிக் கொடுப்பதும் என்று ஓர் உண்மையான நண்பனின் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார், சரத்பாபு.

‘இந்தியப் பேரழகி’ என்று இயக்குநர் சத்யஜித்ரேவால் புகழப்பட்டவர் ஜெயப்ரதா. ஓர் அழகான பெண்ணுக்குரிய சர்வ லட்சணங்களும் கொண்டவர். இதில் மாதவி பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். சராசரிக்கும் அதிகமான நெடுநெடுவென்ற உயரம், புஷ்டியாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் கச்சிதமான உடல்வாகு, சந்தன நிறம், பியானோ கட்டைகள் போன்ற அழகான நீளமான விரல்கள் என்று ஒவ்வொரு பிரேமிலும் நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். அதிலும் உதட்டிற்கு வடகிழக்காக இருக்கும் அந்த அழகான மச்சம் நம் மூச்சை நிறுத்தச் செய்கிறது.

சலங்கை ஒலி
சலங்கை ஒலி

‘மெளனமான நேரம்’ பாடலில் அவர் வரும் காட்சியில்… சரி.. வேண்டாம்.. நீங்களே தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

புறஅழகைத்தாண்டி நடிப்பிலும் ஜெயப்ரதாவின் கொடி அழகாக பறக்கிறது. கமலுக்கும் அவரது அம்மாவிற்கும் உள்ள எளிய அன்பை தூரத்தில் நின்று ரசிப்பது முதல் குடிபோதையில் கிணற்றின் மீது நடனமாடும் கமலைப் பார்த்து அவர் விழுந்து விடுவாரோ என்று தூர நின்று பல்லைக் கடித்துக் கொண்டு தத்தளிப்பது வரை ‘மாதவி’யாக நம் மனதில் உறைந்து போகிறார். இப்படியொரு இணை தன் வாழ்க்கையில் வந்தால் நன்றாக இருக்குமே என்று ஒவ்வொரு இளம் ஆணும் நினைக்கும் வகையில் அத்தனை பாந்தமாக நடித்திருக்கிறார் ஜெயப்ரதா.

இந்தப் படத்தின் மிக முக்கியமான பலம் என்று இளையராஜாவைச் சொல்ல வேண்டும். இதுவொரு தெலுங்குப் படம் என்கிற உணர்வு நமக்குத் தோன்றாததற்கு ராஜாவின் பாடல்களும் இசையும் மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. வெகுசன இசையைத் தாண்டி கர்னாடக இசைப் பாணியில் அற்புதமான பாடல்களை இசையமைத்திருக்கிறார். தியாகராஜர் இயற்றிய கீர்த்தனையான ‘பாலகனகமய’, ‘அடானா’ ராகத்தில் இசையமைக்கப்பட்டிருக்கிறது.

இதர பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் வைரமுத்து. அதுவரையான ‘டப்பிங்’ படங்களின் பாடல் வரிகளைக் கவனித்தால், அந்நிய வாசனை பலமாக அடிக்கும். நம்மால் அதில் பொருந்திப் போக முடியாது. இந்த அபத்தமான வழக்கமான உடைத்தவர் என்று வைரமுத்துவைச் சொல்லலாம். ‘டப்பிங்’ படத்திற்கான பாடல் என்றே நம்ப முடியாமல் அசலான தமிழ்ப் பாடலின் லட்சணத்தை தனது அபாரமான வரிகளின் மூலம் கொண்டு வந்து விடுவார். ஏற்கெனவே உருவாக்கப்பட்டு விட்ட அயல்மொழித் திரைப்படங்களின் இசைக்கு ஏற்ப, வாயசைவிற்கு ஏற்ப தமிழில் எழுதுவது என்பது ஒரு பெரிய சவால். இதில் ஒரு மறுமலர்ச்சியை கொண்டு வந்தவர் வைரமுத்து.

சலங்கை ஒலி
சலங்கை ஒலி

இதில் வரும் பாடல்களில், ‘மெளனமான நேரம்’ ஒரு ஸ்பெஷலான பாட்டு. 'குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி, ஊதலான மார்கழி, நீளமான ராத்திரி, நீ வந்து ஆதரி' என்று விரகம் கொப்பளிக்கும் வார்த்தைகளில் பின்னியிருப்பார் வைரமுத்து.

போலவே ராஜாவின் பின்னணி இசையும் பல இடங்களில் அபாரமாக அமைந்திருக்கும். குறிப்பாக கமலும் ஜெயப்ரதாவும் சந்தித்து பேசும் இடங்கள் அனைத்திலும் அற்புதமாக ஒலிக்கும் பின்னணி இசை பிரகாசிக்கும்.

இந்தப் படத்தின் காட்சிக் கோர்வைகளில் எனக்குப் பிடித்தமானதொன்று உண்டு. தேசிய அளவில் நிகழும் ஒரு நடனக் கலை விழா தொடர்பாக வெள்ளந்தியாக கமலிடம் உரையாடுவார் ஜெயப்ரதா. ‘அதுக்கு இன்விடேஷன் கிடைக்கறதுக்கே கொடுத்து வைச்சிருக்கணுங்க. நம்ம தலையெழுத்து..’ என்று ஆதங்கப்படுவார் கமல். எதிர்பாராத ஆச்சர்யமாக அந்த அழைப்பிதழை நீட்டுவார் ஜெயப்ரதா. அதைப் பரவசத்துடன் பார்த்து, ஒவ்வொரு நடன ஜாம்பவானையும் பார்த்து பிரமித்து பேசுவார் கமல்.

அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டும் போது ஒன்றில் கமலின் புகைப்படமும் இருக்கும். அதைப் பார்த்தவுடன் நம்ப முடியாத திகைப்புடனும் ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் கமல் தரும் எக்ஸ்பிரஷனும் அப்போது ஒலிக்கும் பின்னணி இசையும் ஜெயப்ரதாவின் நெகிழ்ச்சியும் என காட்சி களைகட்டி விடும். தாங்க முடியாத பரவசத்தில் ஜெயப்ரதாவின் கையில் கண்ணீர் வழிய முத்தமிடுவார். கமல்ஹாசன் இட்ட முத்தங்களில் காமம் கலக்காத முத்தமாக இதைச் சொல்லலாம்.

சலங்கை ஒலி
சலங்கை ஒலி

டூயட் பாடல்களில் தெலுங்கு நடிகர்கள் செய்யும் அட்டகாசங்களைப் பற்றி துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதை இயக்குநர் கே.விஸ்வநாத்தே இந்தத் திரைப்படத்தில் கிண்டலடித்திருப்பார். சினிமாக்காரர்கள் உருவாக்கும் ‘டூயட்’ பாடல்களில் உள்ள அபத்தத்தையும் ஆபாசத்தையும் சிறப்பாகப் பதிவு செய்திருப்பார். நடனக்கலையை முறையாகப் பயின்ற கமலால் இதில் பொருந்திப் போக முடியாது. தனது தத்தளிப்பையும் மனக்கொதிப்பையும் நன்கு வெளிப்படுத்தியிருப்பார். அந்த ஆவேசத்தைத் தணித்துக் கொள்வதற்காக பிரமாண்டமான பிள்ளையார் சிலையின் முன்பு வெறியுடன் ஆடுவது உணர்ச்சிகரமான காட்சிகளுள் ஒன்று.

‘சலங்கை ஒலி’ திரைப்படம் சந்தேகமின்றி ஒரு கிளாசிக் படைப்பு எனலாம். செவ்வியல் படைப்புகளுக்கு என்றுள்ள பிரத்யேகமான கூறுகள் இதிலும் உள்ளன. ‘இணையாத காதல் காவியமாகும்’ என்கிற மரபு இதில் பின்பற்றப்பட்டுள்ளது.

கமலுக்கும் ஜெயப்ரதாவிற்கும் இடையில் உள்ள கண்ணியமான உறவு மெல்ல மெல்ல மலர்ந்து அடுத்த நிலைக்கு நகரும் போது ஜெயப்ரதாவின் கடந்த கால உறவு இடையில் வந்து குறுக்கிடும். மரபைத் தாண்ட முடியாமல் ஜெயப்ரதாவின் கணவரிடமே அவரைச் சேர்த்து விடுவார் கமல்.

அந்தத் தம்பதியினர் நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது வாழ்வின் லட்சியமாக மாறி விடும். அவர்களின் திருமண நாளில் மட்டும் தனது குடிப்பழக்கத்தை ஒதுக்கி வைத்து கோயிலில் பிரார்த்தனை செய்வார். இதுவும் ஒருவகையான காதல்தான். இப்படியொரு காவியக் காதலை மிக அற்புதமாக சித்திரித்திருப்பார் கே.விஸ்வநாத்.

ஆனால் இன்னொரு பக்கம், தனது காதல் இழப்பின் உள்ளார்ந்த துயரம் தாங்காமல் தான் உயிரையே வைத்திருந்த நடனக்கலையைப் பழகுவதை விட்டுவிடுவார் கமல். குடிபோதையில் ஆழ்ந்து விடுவார். அவரை மீண்டும் அந்தப் பாதையில் திருப்ப ஜெயப்ரதா செய்யும் முயற்சிகளையும் காதலின் இன்னொரு வடிவம் என்றே சொல்லலாம்.

சலங்கை ஒலி
சலங்கை ஒலி

குறிப்பாக குடிபோதையில் கிணற்றில் கமல் விழுந்து விடக்கூடாது என்பதற்காக தன் விதவைக் கோலத்தை மறைத்து நெற்றியில் குங்குமத்துடன் வந்து கமலை இடைமறித்து ஜெயப்ரதா அழைத்துப் போகும் காட்சி, மிகவும் நெகிழ்ச்சிக்குரிய காட்சிகளில் ஒன்று. ஓர் இந்தியப் பெண், அவசியமான காரணத்திற்காக, மரபைத் தாண்டி வந்து நிற்கும் காட்சியிது. இந்தத் தத்தளிப்பை தனது அபாரமான முகபாவங்களின் மூலம் வெளிப்படுத்தி விடுவார் ஜெயப்ரதா. இந்த நோக்கில் குங்குமப் பொட்டு கூட ஒரு பாத்திரமாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறது எனலாம்.

‘தகிடததமி’ பாடலில் வரும் கிணறு தோட்டா தரணியால் செட் போடப்பட்டது. அவரும் இன்னொரு பாடல் காட்சியின் இடையில் வந்து போயிருப்பார்.

சிறந்த இயக்குநர்கள் என்று அறியப்படுபவர்களின் படைப்புகளில் ‘டைரக்டோரியல் டச்’ எனப்படும் சிறந்த அணுகுமுறைகள் பல காட்சிகளில் இருக்கும். பிறகு வரப்போவதை முன்கூட்டியே நுட்பமாக அறிவித்து விடும் அம்சமும் அதில் ஒன்று. இதில் கமலும் ஜெயப்ரதாவும் ‘ஆட்டோமேட்டிக்’ கேமிரா மூலம் புகைப்படம் எடுத்துக் கொள்ள முயல்வார்கள். டைமரை செட் செய்து விட்டு கமல் வரத் தாமதம் ஆகி விடுவதால் அவரது பின்பக்கம் மட்டுமே பதிந்திருக்கும். பின்னாளில் அவர்கள் இணையப்போவதில்லை என்பதின் அடையாளமாக அதைப் பார்க்கலாம்.

‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் பல நெகிழ்ச்சியான, உணர்ச்சிகரகமான காட்சிகள் இருந்தாலும் சற்று இளைப்பாறும் வகையிலான காட்சிகளும் இருக்கும். போட்டோகிராஃபர் சிறுவனுக்கும் கமலுக்கும் இடையில் நிகழும் காமெடி கலாட்டாக்கள் அவை. புகைப்படம் எடுக்கத் தெரியாமல், கமல் கொசு அடிப்பதையெல்லாம் எடுத்து விட்டு ‘உன் மூஞ்சி.. உன் கேமிரா ஒரு டப்பா’ என்று சவடால் விடும் புஷ்டியான பையன்தான், பின்னாளில் கமல் நடிக்கும் படத்தையே இயக்கும் அளவிற்கு உயர்ந்தான். சக்ரி டோலட்டி என்கிற பெயர் கொண்ட அவர்தான் ‘உன்னைப் போல் ஒருவன்’, 'பில்லா 2' படங்களை இயக்கினார். தசாவதாரத்திலும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

கமல், சக்ரி டோலட்டி
கமல், சக்ரி டோலட்டி

இந்தப் படத்தில் வரும் சிறுசிறு பாத்திரங்கள் கூட அற்புதமாக நடித்திருக்கிறார்கள். கமல்ஹாசனின் தாயாக நடித்திருக்கும் ‘டப்பிங் ஜானகி’யின் நெகிழ்ச்சியான நடிப்பை பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும். தனது மகன் திருமணக்கூடத்தில், பிரபல டான்ஸரான மஞ்சு பார்கவிக்கு இணையாக நடனமாடுவதை ஆசையுடன் பார்க்கும் காட்சி அற்புதம். கமல்ஹாசனும் மஞ்சு பார்கவியும் ஆடுவதை ஒரே பிரேமில் வைத்து பிரமிக்க வைத்திருப்பார் கே.விஸ்வநாத். இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவு பி.எஸ். நிவாஸ். பாரதிராஜாவின் பல படங்களில் நம்மை கவனிக்க வைத்தவர், இந்தத் திரைப்படத்திலும் கவர்கிறார்.

“இவன் எங்க நமக்காக ஆடப்போறான். இந்த ஜென்மம் பூரா கத்துக்கிட்டு அடுத்த ஜென்மத்துலதான் ஆடுவான்" என்று எப்போதும் உரத்த குரலில் யாரையாவது கத்திக் கொண்டேயிருக்கும் கமலின் மாமா (சாக்ஷி ரங்காராவ்), அடுத்த காட்சியிலேயே "நல்லா ஆடினேடா பாலு” என்று இனிப்பு ஊட்டும் இடம் அற்புதமானது.

இது எஸ்.பி.சைலஜா நடித்த ஒரே திரைப்படம். கே.விஸ்வநாத்தின் உறவினரான இவர், இயக்குநரின் வற்புறுத்தலுக்காக நடித்தார். இதில் துடுக்குத்தனமும் மெல்லிய அகம்பாவமும் இருக்கும் பாத்திரத்தில் நன்றாகவே நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்காக தனது கடுமையான உழைப்பையும் மெனக்கெடலையும் தந்தார் கமல்ஹாசன். ‘அர்ப்பணிப்புள்ள நடனக்கலைஞன்’ என்கிற இந்தப் பாத்திரம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக, அப்போது மிக பிஸியாக இருந்த போதிலும் படப்பிடிப்புகளுக்கு இடையே உள்ள குறைந்த நேரத்தையும் பயிற்சிக்காகச் செலவழித்தார். அந்த உழைப்பு படம் முழுவதிலும் தெரிந்தது. மார்பு மற்றும் அக்குள் முடியை நீக்காமல் இவர் நடனக்காட்சிகளில் நடித்தது, மரபிற்கு விரோதமானது என்கிற விமர்சனங்கள் அந்தச் சமயத்தில் எழுந்து அடங்கின.

தென்னிந்திய சினிமாவில் பிராஸ்தஸ்டிக் மேக்கப் சகஜமாகி விட்ட (இதன் முன்னோடியும் கமல்தான்) இப்போதைய சூழலில், ஒரு நடிகர் வயதானவராக தோற்றம் தருவது எளிது. இந்த வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் ‘வயதான பாத்திரம்’ என்றால் தலையில் சற்று வெள்ளையடித்து விடுவார்கள். அவ்வளவுதான்.

சலங்கை ஒலி
சலங்கை ஒலி
ஆனால் இதற்காகவும் கமல் அப்போதே நிறைய மெனக்கெட்டிருப்பதை கவனிக்க முடியும். கலைந்த தலைமுடி, ஓட்டை விழுந்த செருப்பு, காந்தி கண்ணாடி, கதர் ஜிப்பா, தளர்ந்த நடை என்று புறத்தோற்றத்திலும் சரி, கண்களைச் சுருக்கிப் பார்ப்பது, வலி தாளாமல் சாய்ந்து விழுவது என்று உடல்மொழியிலும் சரி, ஒரு வயதானவரின் பாத்திரத்தை கனகச்சிதமாக வெளிப்படுத்த முயன்றிருப்பார்.

நடனத்தின் மீது இவருக்குள்ள ஆர்வமும் அர்ப்பணிப்பும் பல காட்சிகளில் வெளிப்பட்டிருக்கும். பரதநாட்டியம், கதகளி ஆகியவற்றைத் தொடர்ந்து ‘கதக்’ கற்றுக் கொள்வதற்காக இவர் நாட்டியப்பள்ளிக்குச் செல்வதும் அங்குள்ள மாணவியிடம் நடன பாவத்தினாலேயே தன் கோரிக்கையை வைப்பதும் இந்தப் படத்திலுள்ள சிறந்த காட்சிகளுள் ஒன்று.

நம்மிடம் உள்ள பாரம்பரியமான கலைகளை மெல்ல இழந்து வருகிறோம். இது சார்ந்த நினைவூட்டலை பொறுப்பும் அக்கறையும் உள்ள கலைஞர்கள், தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். கே.விஸ்வநாத் அப்படியொரு அற்புதமான இயக்குநர். ‘சலங்கை ஒலி’ அப்படியொரு அற்புதமான முயற்சி.

இந்தத் திரைப்படத்திற்காக ‘சிறந்த இசையமைப்பாளராக’ இளையராஜாவிற்கும் சிறந்த பாடகராக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. இது தவிர நந்தி விருது, பிலிம்பேர் விருது என்று ஏகப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்தன. பொதுவாக கமல் நடிக்கும் திரைப்படங்களின் தெலுங்கு வடிவத்திற்கு எஸ்.பி.பி.தான் டப்பிங் பேசுவார். ஆனால் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று வடிவத்திற்கும் கமலே குரல் தந்தார்.

சலங்கை ஒலி
சலங்கை ஒலி

வெகுசன அம்சங்களிலிருந்து நிறைய விலகி நின்றிருந்தாலும் இந்தத் திரைப்படத்தின் அருமையை தென்னிந்திய ரசிகர்கள் உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். வெளியான அனைத்து மொழியிலும் இந்தத் திரைப்படம் வணிகரீதியாகவும் வெற்றியடைந்து நீண்ட நாள்கள் ஓடியது.

நட்பு, காதல், குருபக்தி போன்ற உன்னதமான விஷயங்களை இந்தத் திரைப்படம் நமது மரபின் வழிநின்று வலியுறுத்துகிறது. நடனக்கலை உள்ளளவும் ‘சலங்கை ஒலி’யின் சிறப்பும் ஒலித்துக் கொண்டே இருக்கும். கே.விஸ்வநாத், இளையராஜா, கமல்ஹாசன், ஜெயப்ரதா என்னும் அற்புதமான கூட்டணியில் உருவான இந்த ‘கிளாசிக்’ திரைப்படத்தை இளைய தலைமுறையினர் தவற விடவே கூடாது.

இந்தப் படம் குறித்த உங்களின் விமர்சனங்களை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள். அதேபோல் இந்தத் தொடரில் அடுத்து எந்தப் படத்தைப் பற்றி பார்க்கலாம் என்பதையும் தெரிவியுங்கள்.