25, டிசம்பர், 1981 அன்று வெளியான ‘கிளிஞ்சல்கள்’, அப்போது சூப்பர் ஹிட் திரைப்படமாக ஆனது. பொது ஜனங்களைத் தாண்டி இளம் தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக வந்து இந்தப் படத்தை மகத்தான வெற்றிப் படமாக்கினார்கள்.
இது அடிப்படையில் ஒரு சாதாரண காதல் திரைப்படம்தான். ஆனால் இதன் வணிக வெற்றி காரணமாக இதைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. அது தவிர, இந்தப் படத்தில் நிறைந்திருந்த இயல்பான நகைச்சுவைக் காட்சிகள், இளம் காதலர்களின் உணர்ச்சிகளின் தீவிரத்தைச் சொல்லும் சில ஆழமான காட்சிக் கோர்வைகள், இயல்பான தோற்றத்தைக் கொண்டவர்கள் பிரதான பாத்திரங்களில் நடித்தது.. போன்ற காரணங்களுக்காக குறிப்பிட வேண்டிய படமாக ஆகிறது.

அதற்கு முன் இதை இயக்கிய ‘துரை’ என்பவரைப் பற்றி சமகால இளம்தலைமுறை அறிய வேண்டியது அவசியம். ‘நீயா’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ‘கிளிஞ்சல்கள்’ போன்ற வணிக அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை இவர் இயக்கியிருந்தாலும் துவக்க காலக்கட்டத்தில் ‘அவளும் பெண்தானே’ (1974), ஒரு வீடு ஒரு உலகம் (1978) போன்ற சமூகப் பிரச்சினைகளை தீவிரமாக அலசும் திரைப்படங்களையும் உருவாக்கியிருந்தார்.
குடிசைப் பகுதியில் வாழும் மக்களை பின்னணியாக வைத்து, இவர் இயக்கத்தில் உருவான ‘பசி’ (1979) திரைப்படத்தில்தான் ஷோபாவிற்கு ‘சிறந்த நடிகை’ என்னும் பிரிவில் தேசிய அளவிலான விருது கிடைத்தது.
அடிப்படையில் கதைகளை எழுதுவதில் ஆர்வமிருந்த துரை, இயக்குநர் யோகானந்தின் வழிகாட்டுதலில் சினிமாவின் தொழில் நுட்பங்களில் இருந்த அடிப்படையான அறிவை துவக்கத்தில் பெற்றுக் கொண்டார். ஒரு சிறந்த இயக்குநராவதற்கு அவற்றை அறிந்திருப்பது அவசியம் என்று நினைத்தார்.
இந்தச் சமயத்தில் கன்னட நடிகரான கல்யாண்குமாரின் கண்ணில் பட்டார் துரை. இவரது திறமையை உணர்ந்த கல்யாண்குமார், கன்னட சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநரான ஜீ.வி.ஐயரிடம் உதவியாளராக சேர்த்து விட்டார். கன்னட உலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களில் துரை பணிபுரிந்தார். ராஜ்குமாரின் நூறாவது திரைப்படத்திற்கு கதையெழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கதை பரவலான வரவேற்பிற்கு உள்ளானது.
நடிகை பண்டரிபாயின் கணவரான ராமாராவின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழையும் வாய்ப்பு துரைக்கு கிடைத்தது. இவரது திறமையை உணர்ந்த ராமாராவ், இயக்குநராகும் வாய்ப்பை துரைக்கு அளித்தார். துரை இயக்கிய முதல் தமிழ் திரைப்படம் ‘அவளும் பெண்தானே’. ஒரு பாலியல் தொழிலாளி எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிய இந்தத் திரைப்படம், விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.
பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்கள் எதிரும் புதிருமாக இருப்பார்கள். ரசிகர்களின் செயற்பாடும் இதனையொட்டி இருக்கும். இந்தப் போக்கு ஒருவகையில் வணிகத்திற்கு நல்லது என்றாலும் இன்னொரு புறம் ரசிகர்களிடையே நிகழும் வன்முறைக்கு காரணமாக இருக்கும்.
இந்த இரண்டு முன்னணி நடிகர்களைத் தாண்டி அடுத்த நிலையில் சில நடிகர்கள் இருப்பார்கள். ஒரு வழக்கமான ஹீரோவின் அலப்பறைகள் அதிகம் இல்லாமல் இயல்பான கதை, தோற்றம், காட்சிகள் என்று நடித்து மக்களைக் கவர்வார்கள். இவர்களுக்கும் தனியானதொரு ரசிகக்கூட்டம் இருக்கும். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன் இப்படியொரு சாமானியர்களின் நாயகராக இருந்தார். இவர்களால்தான் அதிக அளவிலான சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் உருவாகும்.

இவரின் இந்த வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள் உறுதுணையாக இருந்தன என்றால் அது மிகையில்லை. ஓர் இயல்பான கதையை சுவாரஸ்யமாகச் சொல்லும் இயக்குநர்களும், இளையராஜாவின் இசையும் அமைந்து விட்டால் போதும், அது உத்தரவாதமாக வெற்றி பெறும் என்கிற நிலை எண்பதுகளில் இருந்தது. எனவே, இளையராஜாவின் கால்ஷீட்டைப் பெற்று விட்டால், அதுவே படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் என்கிற நிலை இருந்தது. தனக்கு கிடைத்த தொடர்ச்சியான வாய்ப்பை ஓய்வின்றி உழைத்து எதிர்கொண்டார் இளையராஜா. ஆனால் அவசர அடியாக அடித்து அவர் ஒப்பேற்றவில்லை. அவரது ஹார்மோனியத்தில் இசையென்னும் தேவதை நிரந்தரமாக குடியிருந்ததால், இயக்குநர் சொன்னவுடனேயே அதற்கேற்ற அருமையான மெட்டுக்கள் அவரிடமிருந்து உருவாகிக் கொண்டேயிருந்தன.
கன்னட சினிமாவான ‘கோகிலா’வில் பாலுமகேந்திராவின் மூலம் அறிமுகமாகிய மோகன், பிறகு அவரின் தமிழ் திரைப்படமான ‘மூடுபனி’யில் சிறிய வேடத்தில் வந்து போனார். பிறகு மகேந்திரன் இயக்கிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’வில் ஒரு பிரதானமான வேடம். ஹீரோ மாதிரியான பாவனையிருந்தாலும் அதில் மோகன் ஹீரோ இல்லை.
எனவே, மோகன் தமிழில் நடித்த ‘கிளிஞ்சல்கள்’ திரைப்படம்தான், ஒரு கதாநாயகனுக்குரிய வெற்றிப்பாதையை அவருக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது எனலாம். இதற்குப் பிறகு வெளியான ‘பயணங்கள் முடிவதில்லை’ அவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. இவரது படங்களில் பாடல்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், ‘பாடகர்’ போன்ற பாத்திரமாக வைத்து கதையெழுதினார்கள். எனவே ‘மைக்’ மோகன் என்கிற செல்லப் பெயரையும் ரசிகர்களிடமிருந்து இவர் பெற்றார்.

மெலிந்த தேகம், தெத்துப்பல், வெள்ளந்தியான சிரிப்பு என்று வழக்கமான கதாநாயனுக்குரிய அம்சங்கள் பெரிதும் இல்லையென்றாலும் இதுவே இவருக்கு ஒரு பலமாக அமைந்தது. இவரின் சராசரியான தோற்றத்தையும், நடிப்பையும் கண்டு தங்களில் ஒருவராக கருதி மக்கள் ரசித்தார்கள். குறிப்பாக கமல்ஹாசனுக்குப் பிறகு, அதிக ரசிகைகள் அந்தக் காலத்தில் இருந்தது மோகனுக்குத்தான். தனக்கு வரப்போகும் கணவன், மோகனைப் போல இருக்க வேண்டும் என்று கனவு கண்ட இளம் பெண்கள் அப்போது ஏராளம்.
‘பக்கத்து வீட்டு இளைஞன்’ என்கிற இயல்பான எண்ணத்தை மோகனின் ஆரம்பக் காலப் படங்கள் பார்வையாளர்களிடம் விதைத்தன.
ஏதோ ஒரு திரைப்படத்தில் நாயகியிடம் பேனாவை இரவல் வாங்கி, அதிலிருக்கும் இங்க்கை இவர் திருடிக் கொள்வார். ஸ்கூல் பையன்கள் செய்யும் இந்த அற்பமான காரியத்தை எந்த ஹீரோவாவது செய்வாரா? ஆனால் இது போன்ற இயல்பான நகைச்சுவையின் மூலம் பார்வையாளர்களின் பிரியத்தை சம்பாதித்த நாயகர்களுள் ஒருவராக மோகன் இருந்தார்.
‘கிளிஞ்சல்கள்’ திரைப்படத்தில், தேர்வில் தொடர்ந்து தோல்வியுற்று அப்பாவின் கோபத்தைச் சம்பாதிக்கும் பாத்திரம் மோகனுக்கு அமைந்தது. அம்மாவின் அடைக்கலமும் அரவணைப்பும்தான் இவருக்கு பாதுகாப்பு. இவரது தந்தை சிறிய அளவிலான பிரஸ் வைத்திருப்பார். எனவே ‘பிரஸ் முதலாளியின் மகன்’ என்கிற பந்தாவோடு அசட்டுத்தனமாக மோகன் உலா வரும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கும். “அப்பா.. எதுவாக இருந்தாலும் உள்ள கூட்டிக்கிட்டு போய் அடிங்கப்பா’ என்று மோகன் திருட்டுக் கெஞ்சு கெஞ்சுவது போன்ற காட்சிகள் அட்டகாசம். மோகனின் கண்டிப்பான தந்தையாக, ஜி.சீனிவாசன் அருமையாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவின் வழக்கப்படி மோகனும் பூர்ணிமாவும் முதலில் சற்று முட்டிக் கொண்டாலும் பிறகு காதலில் விழுவார்கள். மோகனின் வெள்ளந்தியான செயலும் தோற்றமும் பூர்ணிமாவைக் கவர்ந்து விடும். ஒருவருக்கொருவர் பார்வையினால் காதலைப் பரிமாறிக் கொண்டாலும் பேசுவதற்கு நிறையவே தயங்குவார்கள்.

காதலர்கள் சுதந்திரமாக புழங்குவதற்கான வெளி இன்று கூட இல்லை என்னும் போது எண்பதுகளின் காலக்கட்டத்திய சமூகக் கண்காணிப்பை எளிதாக யூகிக்கலாம். இதற்காக பக்கத்து வீட்டுச் சிறுவனை தூது அனுப்புவது உள்ளிட்டு பல உபாயங்களை இவர்கள் கையாள்வார்கள்.
பார்த்த சில கணங்களிலேயே செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்டு இரவு முழுவதும் சாட் செய்யும் சமகால தலைமுறைக்கு, ‘ஹலோ’ என்று சொல்வதற்கே திக்கித் திணறி தடுமாறும் இந்த அம்மாஞ்சி பாத்திரங்களைக் கண்டால் விநோதமாகவும் சிரிப்பாகவும் இருக்கலாம். ஆனால் எண்பதுகளின் காலம் அப்படித்தான் இருந்தது.
இந்தத் திரைப்படத்தின் நாயகி ‘பூர்ணிமா ஜெயராம்’ (பிறகுதான் ‘பூர்ணிமா பாக்யராஜ்). ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ என்னும் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானவர் பூர்ணிமா. ‘நெஞ்சில் ஒரு முள்’ என்கிற, பிரதாப் போத்தன் ஹீரோவாக நடித்த தமிழ் திரைப்படத்தின் மூலம் இங்கு அறிமுகமானார். அவரது இரண்டாவது தமிழ் படம் ‘கிளிஞ்சல்கள்’. இதில் ‘ஜூலி’ என்கிற இளம் கிறிஸ்துவப் பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். டூயட் காட்சிகளில் கவர்ச்சியான அம்சங்கள் இருந்த அதே சமயத்தில் நடிப்பிலும் சோடை போகவில்லை பூர்ணிமா.
பூர்ணிமாவை ஒரு தலையாக காதலித்து ஏங்கும் இளைஞனாக நடித்திருந்தார் திலீப். தன் தங்கையிடமே லவ் லெட்டர் தந்து அனுப்பும் கோணங்கித்தனமான அண்ணனாக, பயங்கர காதல் ஏக்கத்தில் இருப்பார். ஆனால் பூர்ணிமா, மோகனை விரும்புகிறார் என்பதை அறிந்தவுடன் மனம் மாறி அந்தக் காதலுக்கு உறுதுணையாக நிற்பார். தன்னைக் காதலிக்காத பெண்ணின் மீது பழிவாங்கும் எண்ணத்துடன் ஆசிட் வீசுவது உள்ளிட்ட பல வன்முறைகளைச் செய்யும் போக்கிற்கு பாடம் கற்றுத் தருவது போன்ற பாத்திர வடிவமைப்பை எண்பதுகளிலேயே வடிவமைத்த இயக்குநர் துரை மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

திலீப்பிற்கும் அவரது தந்தை வி.கே.ராமசாமிக்கும் நிகழும் முட்டல், மோதல்கள் சுவாரசியம். மூத்த தலைமுறை, இளைய தலைமுறையைக் கையாள வேண்டியது தொடர்பாக, அருமையானதொரு காட்சி, இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. என்னால் மறக்க முடியாத காட்சி இது.
மகன் சிகரெட் பிடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைவார் விகேஆர். அவரது மனைவியிடமும் சுட்டிக் காட்டுவார். பிறகு திலீப்பை அழைத்து ‘கையில என்னடா. பின்னாடி என்ன ஒளிச்சு வெச்சிட்டிருக்கே.. காட்டு’ என்று மிரட்டுவார். “அப்பாவாச்சே.. மரியாதை தரலாம்-னு சிகரெட்டை ஒளிச்சு வெச்சு பிடிச்சேன்.. இப்ப நீங்களே இப்படி கேட்கும் போது என்ன செய்யறது?” என்று தந்தையின் முகத்திலேயே புகையை ஊதுவார் திலீப்.
இந்தக் காட்சி நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருந்தாலும் தலைமுறை இடைவெளியை முறையாக கையாள வேண்டிய பாடமும் இதில் உள்ளது. “ஒரு வீடு ஒரு உலகம்’ படத்தைப் பாருங்கப்பா.. அதில் மேஜர் சுந்தர்ராஜன் நடிச்ச பாத்திரத்தைப் பார்த்தாவது.. ஒரு அப்பா எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சுக்கங்க” என்பார் திலீப். (அந்தப் படம் இதே துரை இயக்கியதுதான். சுயவிளம்பரத்தை இங்கே சாமர்த்தியமாக செருகி விட்டார் இயக்குநர்).

‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல் இதிலும் ஒரு இந்துப் பையனுக்கும் கிறிஸ்துவப் பெண்ணுக்கும் இடையில் தன்னிச்சையாக ஏற்படும் காதலை அவர்களின் பெற்றோர்கள் பிரிக்க நினைப்பார்கள். இதற்காக கடுமையான தடைகளை ஏற்படுத்துவார்கள்.
பூர்ணிமாவின் தந்தை மற்றும் தாயாக முறையே வி.கோபால கிருஷ்ணனும், சுகுமாரியும் நடித்திருந்தார்கள். மகளின் காதலை குரூரமாகப் பிரிக்கும் பாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களின் கோபத்தை சம்பாதித்திருந்தார் வி.கோபால கிருஷ்ணன். இந்தக் காதலுக்கு பிரதான தடை ‘மதம்’தான் என்பது பல காட்சிகளில் வெளிப்பட்டாலும் ‘பையனின் ஏழ்மையான அந்தஸ்துதான் காரணம்’ என்று ஒரு காட்சியில் வி.கோபாலகிருஷ்ணன் கூறுவார்.
பூர்ணிமாவின் பக்கத்து வீட்டுக்காரராக பயில்வான் ரங்கநாதன் நடித்திருந்தார். அங்கு சைட் அடிக்க வரும் மோகனை, இவர் பார்வையாலேயே மிரட்டி அனுப்பும் காட்சிகள் சுவாரசியம். இறுதிக்காட்சியில் மோகனைப் போட்டு புரட்டியெடுப்பார். காதல் தொடர்பான சச்சரவுகளில், சம்பந்தப்பட்டவர்களைத் தாண்டி அறிமுகமே இல்லாதவர் கூட நுழைய முடியும், காதலர்களைக் கண்காணித்து மிரட்டி அடிக்க முடியும் என்கிற அபத்தமான சமூக நடைமுறையை பிரதிபலிக்கும் காட்சி இது.
ஆரம்ப காலக்கட்டத்தின் தோற்றத்தில் நடிகர் செந்திலும் ஒரு காட்சியில் தலைகாட்டியிருப்பார். பப்ளிக் டெலிபோன் பூத்தில், பூர்ணிமாவுடன் மோகன் சுவாரஸ்யமாக கடலை போட்டுக் கொண்டிருக்கும் போது ‘எவ்ள நேரம்யா. பேசுவ?” என்று எரிச்சல் அடைவார் செந்தில்.

மலையாள சினிமாவில் சீனியர் ஆக்டராக விளங்கிய பி.சந்திரகுமாரும் ஒரு காட்சியில் தலைகாட்டுவார். ஸ்டேஷன் மாஸ்டரான வி.கே.ஆர், தன் மகன் திலீப்பின் பொறுப்பற்ற தன்மையைப் பற்றி அனத்தும் போது பக்கத்தில் நமட்டுச் சிரிப்புடன் நிற்பார்.
‘காதல் பைத்தியம்’ என்கிற பாத்திரத்தில் பாடகர் ஜாலி ஆப்ரஹாம் சில காட்சிகளில் தோன்றியிருந்தார். காதலர்கள் அசட்டுத்தனமாக பார்த்துக் கொள்ளும் போதும், பிரிக்கப்பட்டு துயரத்தில் வாடும் போதும் பின்னணியில் கவிதைத்தனமாக எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்.
‘கிளிஞ்சல்கள்’ படம் இயங்கும் பிரதேசமும் மிக எளிமையான தன்மையைக் கொண்டது. பொள்ளாச்சி என்னும் சிறுநகரத்தின் இயல்பான பின்னணி படத்தில் நிறைந்திருக்கும். நாயகன், நாயகியின் வீடு, அச்சாபீஸ், சர்ச் என்று சில இடங்களின் பின்னணியிலேயே படம் சுழன்று கொண்டிருக்கும். ‘ஒரு தலை ராகம்’ திரைப்படத்தைப் போலவே ரயில் நிலையம் இதில் ஒரு முக்கியமான பாத்திரமாக இருந்தது. பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டிருந்தன. கீழ்நடுத்தர வர்க்க வாழ்க்கையில், ரயில் எத்தனை இன்றியமையாத போக்குவரத்து சாதனமாக இருந்தது என்பதை இந்தக் காலக்கட்டத்து படங்களைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
இந்தத் திரைப்படத்தின் ஒரு கவர்ச்சிகரமான அம்சம், இதன் பாடல்கள். இந்த ஆல்பம் அப்போது சூப்பர் ஹிட் ஆகியிருந்தது. அத்தனை பாடல்களும் இன்றும் கூட கேட்பதற்கு இனிமையாக அமைந்திருக்கின்றன. பாடல்களை இயற்றியதோடு இசையமைக்கும் பொறுப்பையும் சிறப்பாகக் கையாண்டிருந்தார் டி.ராஜேந்தர். ‘விழிகள் மேடையாம்.. இமைகள் திரைகளாம்’ என்று பாடல் வரிகளில் தன் பிரத்யேக பாணியில் கலக்கியிருந்தார். எஸ்.ஜானகியும் கல்யாணும் பாடியிருந்தார்கள்.

‘அழகினுள் விளைந்தது.. மழையினுள் நனைந்தது’ என்கிற பாடலில் நாயகனும் நாயகியும் மழையில் நனைந்து விரக தாபத்துடன் பாடும் பாடலும் டி.ஆரின் பிரத்யேக முத்திரையைக் கொண்டிருந்தது. இந்தப் பாடலில் சற்று தாரளமாகவே கவர்ச்சி காட்டியிருந்தார் பூர்ணிமா. தன் வழக்கமான மாடுலேஷனில் அட்டகாசமாகப் பாடியிருந்தார் பாலு.
பக்கத்து வீட்டுப் பையனை கொஞ்சும் சாக்கில் காதலனைக் கொஞ்சும் பாடலான ‘சின்ன சின்னக் கண்ணா’ என்கிற பாடலும் கேட்க மிக இனிமையானது. பி.சுசீலா அருமையாகப் பாடியிருந்தார். ஜெயச்சந்திரன் பாடியிருந்த ‘காதல் ஒருவழிப்பாதை பயணம்’ என்கிற பாடலும் மிக உருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ‘கிளிஞ்சல்கள்’ படத்தின் வெற்றிக்கு டி.ஆரின் இசையும் ஓர் இன்றியமையாத காரணமாக இருந்தது.
ஏற்கனவே குறிப்பிட்டிருந்த படி, இந்தத் திரைப்படம் ஒரு வழக்கமான காதல் கதையைக் கொண்ட படமாக இருந்தாலும் இதன் மிகையல்லாத இயல்புத்தன்மை காரணமாகவே பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தது. இளம் வயதுப் பையனுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் உருவாகும் விதம், அதனுள் இருந்த தவிப்பு, ஏக்கம் போன்றவை ஒருபுறம் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டிருந்தன. போலவே, காதலர்களின் பிரிவும் துயரமும் உருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது.
காதல் திருமணங்களை எதிர்க்கும் பெற்றோர்களின் கல்மனதுகளை சலனப்படுத்தும் விதத்தில் காதலின் ஆழத்தை விவரித்திருந்தார் இயக்குநர் துரை.
ஆனால் கிளைமாக்ஸ்தான் சற்று செயற்கையாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஜோடியை ஒரு காவியக்காதலின் நாயகர்களாக சித்தரிக்க வேண்டும் என்று இயக்குநர் ஆசைப்பட்டாரோ என்னமோ...
தமிழ் சினிமாவின் இயக்குநர்களின் வரிசையில் ‘துரை’ பிரத்யேகமாக கவனிக்கப்பட வேண்டியவர் என்பதற்கான மறக்க முடியாத சாட்சியமாக ‘கிளிஞ்சல்கள்’ திரைப்படம் விளங்குகிறது.