Published:Updated:

இப்போது இப்படி ஒரு படம் வெளிவர வாய்ப்பேயில்லை... `கண் சிவந்தால் மண் சிவக்கும்’ பேசும் அரசியல் என்ன?

கண் சிவந்தால் மண் சிவக்கும்

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’.

Published:Updated:

இப்போது இப்படி ஒரு படம் வெளிவர வாய்ப்பேயில்லை... `கண் சிவந்தால் மண் சிவக்கும்’ பேசும் அரசியல் என்ன?

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’.

கண் சிவந்தால் மண் சிவக்கும்
‘சூப்பர் ஹிட்’ வெற்றி பெற்ற கமர்ஷியல் திரைப்படங்களைத் தாண்டி, தமிழ் சினிமாவின் காலப் பயணத்தில் உருவான ‘நல்ல’ முயற்சிகளைப் பற்றிய கட்டுரைகளுக்கும் விகடன் வாசகர்கள் ஆதரவு தருவார்கள் என்கிற உறுதியான நம்பிக்கையின் மீது இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

1983-ம் ஆண்டு மார்ச் மாதம், 4-ம் தேதி வெளியான திரைப்படம் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’. இந்த தலைப்பைக் கேட்டவுடனே பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது.. ‘மனிதா... மனிதா... இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...' என்கிற பாடலாக இருக்கக்கூடும்.

ஆம். இளையராஜாவின் இசையமைப்பில் உருவான மிகச் சிறந்த பாடல்களை வரிசைப்படுத்தினால் அதில் இந்தப் பாடல் உறுதியாக இடம் பிடிக்கும். கேட்கும் போதே நாடி, நரம்பு அனைத்திலும் ரெளத்திர உணர்வைத் தூண்டுகிற பாடல்.

இளையராஜா - வைரமுத்து
இளையராஜா - வைரமுத்து

எந்தவொரு புரட்சியும் ஒரு திட்டமிட்ட தலைமையால் வழிநடத்தப்பட வேண்டும். இந்தப் பாடலின் துவக்க இசை இதைப் பிரதிபலிப்பது போலவே அமைந்திருக்கும். ஒரு சோகமான ஒற்றை வயலினின் முனகலோடு இந்தப் பாடல் துவங்கும். அதன் பின்னால் இன்னமும் சில வயலின்கள் இணைந்து கொள்ளும். இது இப்படியே பயணப்பட்டு ஒரு கட்டத்தில் உணர்ச்சிப் பெருக்கு வழிந்தோட உச்சக்கட்டத்திற்கு நகரும்.

இளையராஜா துவக்க காலத்தில், தங்களின் மூத்த சகோதரரான பாவலர் வரதராஜனின் இசைக்குழுவில் பொதுவுடமைச் சிந்தனையைப் பரப்பும் பாடல்களை இசைத்தவர். எனவே இயல்பாகவே அந்த உணர்வு இந்தப் பாடலில் மிக ஆழமாக எதிரொலித்தது எனலாம்.

பண்ணையாரால் கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கள் தலைவனை மீட்பதற்காக தன்னிச்சையான உக்கிரத்துடன் கிராமத்து மக்கள் கிளம்புவார்கள். ஆரம்பத்தில் தெரியும் தீப்பந்தங்களின் பின்னால் வேறு சில தீப்பந்தங்களும் இணையும் காட்சிக்கோர்வை, இசைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும்.

தங்களின் தலைவனை மீட்டு தோளில் தாங்கி அவர்கள் ஆரவாரமாக திரும்பும் போது வெளியே விடிந்திருக்கும். தொழிற்சாலை கோபுரத்தை நோக்கி கேமரா நகரும். zoom – in கோணத்தோடு இந்தப் பாடல் அர்த்தபூர்வமாக முடியும்.

"...சில ஆறுகள் மாறுதடா / வரலாறுகள் மீறுதடா / பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா / இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானதடா / அட'.. சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா…" என்று சிவப்புச் சிந்தனைகள் தெறிக்கும் உணர்ச்சிகரமான வரிகளை அற்புதமாக எழுதியிருப்பார் வைரமுத்து.

கே.ஜே.யேசுதாஸ்
கே.ஜே.யேசுதாஸ்

பொதுவாக பாடகர் ஜேசுதாஸிற்கு காதல், சோகம், தாலாட்டு போன்ற மென்மையான உணர்வுகளில் அமைந்த பாடல்களே அதிகம் பாடக் கிடைக்கும். அந்த மரபை உடைத்து அவருக்கு வித்தியாசமான பாடல்களைத் தந்தவர் இளையராஜா. ‘தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்’, ‘மோகம் என்னும் மாயப் பேயை’, ‘அடி... கானங் கருங்குயிலே’… போன்ற ஆவேசமான, துள்ளலிசைப் பாடல்களை பாட வைத்தவர்.

அந்த வரிசையில் ‘மனிதா.. மனிதா’ பாடலையும் சொல்லலாம். செல்லும் வழிக்கேற்ப ஒரு நதி வளைந்து வளைந்து செல்வது போல ஆவேசமாகவும் மென்மையாகவும் வெவ்வேறு ஸ்தாயிகளில் அற்புதமாக இந்தப் பாடலைப் பாடியிருப்பார் ஜேசுதாஸ். பாடலும் அட்டகாசமான முறையில் அரசியல் பொருள் தொனிக்க காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

`குருதிப்புனல்’
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ என்னும் நாவல், 1977-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது.

கீழ்வெண்மணிப் படுகொலைச் சம்பவத்தை வைத்து தனது நாவலை எழுதியிருந்தார் இந்திரா பார்த்தசாரதி. இந்தச் சம்பவத்தைப் பற்றி அறியாத இளம் தலைமுறையினர் தேடி வாசியுங்கள்.

‘விருமாண்டி’ திரைப்படத்தில் தூக்குத் தண்டனை கைதிகளைப் பற்றி ஆய்வு செய்ய வந்திருப்பார் ரோகிணி. அவரிடம் இடக்காக பேசும் சிறை அதிகாரி ‘உங்க ஊர் எது?” என்று கேட்பார். ‘கீழ்வெண்மணி’ என்று ரோகிணி பதில் சொன்னதும் அதிகாரியின் முகம் மாறும். அந்த மெல்லிய அதிர்விற்குப் பின்னால் நெடும் வரலாறு உள்ளது.

இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’
இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி என்னும் கிராமத்தில், இடதுசாரி இயக்கங்கள் ஏற்றித் தந்த உணர்வோடு, கூலி உயர்வு கேட்டுப் போராடிய ஏழை விவசாயிகளில் சிலர், ஆண்டைகளால் ஏவப்பட்ட அடியாட்களின் வன்முறைக்கு அஞ்சி ஒரு குடிசையில் பதுங்கியிருந்த போது குடிசையோடு கொளுத்தப்பட்டார்கள். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44.

நாவலில் உளவியல் பார்வையோடு தனி மனித பலவீனங்களையும் பதிவு செய்திருப்பார் இந்திரா பார்த்தசாரதி. ஆனால் சினிமாவிற்கு ஏற்றபடி தன் ரசனையையும் இணைத்து திரைக்கதையாக்கியிருந்தார் இயக்குநர் ஸ்ரீதர் ராஜன்.

விளம்பரத் துறையில் பணியைத் துவங்கிய ஸ்ரீதர் ராஜன், பிறகு சினிமா விமர்சகராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் மாறினார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘கண் சிவந்தால் மண் சிவக்கும், ‘சிறந்த அறிமுக இயக்குநர்’ என்கிற பிரிவில் தேசிய விருதைப் பெற்றது. ‘குருதிப்புனல்’ நாவலை வங்க மொழியில் உருவாக்குவதற்கான வாய்ப்புதான் முதலில் ஸ்ரீதர் ராஜனுக்கு கிடைத்தது. ஆனால் தஞ்சையில் நிகழ்ந்த ஒரு சமூகக் கொடுமையைப் பற்றி அந்த மொழியிலேயே திரைப்படமாக உருவாக்கினால்தான் பொருத்தமாக இருக்கும்’ என்று இயக்குநர் கருதியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு இரவு பூக்கள் (1986) பூக்கள் விடும் தூது (1987) ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கினார், ஸ்ரீதர் ராஜன். தனது லட்சியத்திற்கும் செல்கின்ற பாதைக்கும் உள்ள முரணை உணர்ந்து இயக்குவதிலிருந்து விலகினார். சென்சார் போர்டு, NFDC போன்றவற்றில் பொறுப்புகளை வகித்தவர் இவர். ஜெமினி கணேசனின் மகள்களில் ஒருவரான ஜெயலஷ்மியை (‘நினைவெல்லாம் நித்யா’ திரைப்படத்தின் நாயகி) திருமணம் செய்து கொண்டார்.

கண் சிவந்தால் மண் சிவக்கும்
கண் சிவந்தால் மண் சிவக்கும்

‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ திரைப்படத்தை ஒரு லட்சியவாத படைப்பு எனலாம். இப்போது பார்க்கும் போது படத்தின் உருவாக்கம் சில இடங்களில் சுமாராகவும் சலிப்பாகவும் தெரிந்தாலும் படத்தின் உள்ளடக்கமும் நோக்கமும் சமூகத்திற்கு அவசியமானது.

பத்திரிகையாளரான கெளதம், போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகாரம் நிகழ்த்தும் கொடுமைகளைப் பற்றி ஒரு காரசாரமான கட்டுரை எழுதுகிறான். ஆனால் நிர்வாகம் அதைப் பிரசுரிக்க மறுக்கிறது. கோபத்துடன் பணியை விட்டு விலகுகிறான்.

தான் வரைந்த ஓவியங்களை அவன் காட்சிப்படுத்தும்போது அருந்ததி என்கிற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. பரதநாட்டியக் கலைஞரான அவள், நந்தனாரின் கதையை நாடக வடிவில் வழங்க விரும்புகிறாள். ஆனால், அதை மக்களுக்கு நெருக்கமான கலையான தெருக்கூத்து வடிவத்தில் உருவாக்கலாம் என்கிற யோசனையைத் தருகிறான் கெளதம்.

இந்த நோக்கில் அவர்கள் தஞ்சை மாவட்டத்திற்குப் பயணப்படுகிறார்கள். தெருக்கூத்து ஆசானான தம்பிரானைச் சந்தித்து இது விஷயமாக ஆலோசிக்கிறார்கள். ஆனால் அங்கு நிகழும் சில பிரச்னைகள் கெளதமை உள்ளூர் அரசியலில் இழுத்துப் போடுகிறது. கூலி உயர்வு கேட்டு போராடும் ஏழை விவசாயிகளுக்கும் நில முதலாளிக்கும் நிகழும் போராட்டத்தில் அப்பாவி மக்கள் சிலர் கொல்லப்படுகிறார்கள்; சிலர் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் தன்னையும் பிணைத்துக் கொள்கிறான் கெளதம். இதனால் பண்ணையாளரான ராஜரத்னத்தின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறான்.

கண் சிவந்தால் மண் சிவக்கும்
கண் சிவந்தால் மண் சிவக்கும்

பிறகு என்ன நிகழ்கிறது என்பது உணர்ச்சிகரமான சம்பவங்களின் மூலம் விவரிக்கப்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பாத்தி என்கிற இளம் பெண்ணால் பண்ணையார் இறுதியில் கொல்லப்படுகிறார். ‘ஒரு தனிநபரை கொன்று விடுவது சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா?’ என்கிற கேள்வியை படத்தின் இறுதிக்காட்சி எழுப்பினாலும் சில சமூகப் புரட்சிகள் கடந்து வந்த பாதைகளில் அவற்றிற்கும் பங்கு இருக்கத்தான் செய்கிறது.

‘பாட்டாளிகளின் தோழன்’ பாத்திரத்தில் எப்போதும் சிறப்பாகப் பொருந்துகிறவர் ஜெய்சங்கர். ‘ஊமை விழிகள்’ திரைப்படத்திலும் இதைப் பார்க்கலாம். இந்தத் திரைப்படத்தில், பாமரத் தொழிலாளர்களுக்கு இடதுசாரி உணர்வை ஊட்டுகிற ‘வைரம்’ என்பவராக சிறப்பாக நடித்திருக்கிறார். கோபமும் துடிப்பும் உள்ள இளம் தொழிலாளி ‘காளை’யாக ராஜேஷ் அருமையாக நடித்துள்ளார்.
கண் சிவந்தால் மண் சிவக்கும்
கண் சிவந்தால் மண் சிவக்கும்

இந்தப் படத்தின் நாயகன் விஜய் மேனன். மலையாளத் திரைப்படங்களில் நிறைய நடித்துள்ளார். அங்கு ஏராளமான திரைப்படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணிபுரிந்துள்ளார். இவரை அறியாத தமிழ் பார்வையாளர்களுக்கு சட்டென்று அறியும் படி சொல்ல வேண்டும் என்றால் ‘வருஷம் 16’ திரைப்படத்தில் ‘மூர்த்தி’யாக வரும் வில்லன்.

தாடியும் கதர் ஜிப்பாவும் கண்ணாடியுமாக ஒரு இன்டலெக்சுவல் பாத்திரத்தில் நன்றாகவே பொருந்தியுள்ளார் விஜய் மேனன். நந்தன் கதையை பூர்ணிமா சீரியஸாக விளக்கும் போது இவர் இடக்கு செய்வது சுவாரஸ்யமான காட்சி. ஆனால் நடிப்பு சுமாராகத்தான் வந்திருக்கிறது. இவருக்கு குரல் தந்திருப்பவர் சுரேந்தர்.

துவக்கக் காலத்து பூர்ணிமா ஜெயராம், அருந்ததியாக நடித்துள்ளார். நடனக் கலைஞருக்கான தோற்றம் இருக்கிறது. தனது பாத்திரத்தின் எல்லைக்குள் குறைவின்றி நடித்திருக்கிறார்.

கண் சிவந்தால் மண் சிவக்கும்
கண் சிவந்தால் மண் சிவக்கும்

‘ஞானக்கிறுக்கன்’ பாத்திரத்தில் நடிகர் ரவீந்தர் நடித்திருக்கிறார். ஒப்பனைக்காக இவர் மெனக்கெட்டிருப்பது சிறப்பு. ஆண்டைகளால் ஏமாற்றப்பட்டு பித்துப் பிடித்து சமூகக் கோபம் கொள்கிறவராக நடித்துள்ளார். பண்ணையாரின் உருவப்பொம்மையை ஆவேசத்துடன் எரிக்கும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் இவர் சிறப்பாக நடித்துள்ளார். புன்னகையும் நயவஞ்சகமும் நிறைந்த பண்ணையாளராக கல்கத்தா விஸ்வநாதன் குறை சொல்ல முடியாதபடி நடித்துள்ளார்.

பிரபல நடனக் கலைஞர்களான தனஞ்செயனும் அவரது மனைவி சாந்தா தனஞ்செயனும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். இந்தத் தம்பதியினர் திரையில் தோன்றிய முதல் திரைப்படம் இதுதான்.

மேற்கு வங்க இயக்குநர் சத்யஜித்ரேயின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சோமந்த் ராய். சத்யஜித்ரேயின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான சுப்ரதா மித்ராவிடம் உதவியாளராக இருந்தவர். சுப்ரதாவின் பார்வையில் பிரச்னை ஏற்பட்ட பிறகு சத்யஜித்ரேவின் படங்களில் முதன்மை ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்கினார்.

இயக்குநர் ஸ்ரீதர் ராஜனுக்கு சத்யஜித்ரேவின் அறிமுகம் இருந்ததால் அதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார் சோமந்த் ராய். அவர் ஒளிப்பதிவு செய்த ஒரே தமிழ் திரைப்படம் இது. முன்பே குறிப்பிட்டபடி ‘மனிதா மனிதா’ பாடல் மிகச் சிறந்த முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. தீப்பந்தங்களின் வெளிச்சத்தை மட்டுமே கொண்டு கிராமத்து மக்கள் ஆவேசமாக நகர்வது சிறப்பாக பதிவாகியிருக்கிறது. ஆனால் சத்யஜித்ரேவின் கறுப்பு – வெள்ளை திரைப்படங்களில் வெளிப்பட்ட அழகியலும் சிறப்பும் இதில் ஏன் நிகழவில்லை என்பதற்கு இயக்குநர்தான் பதில் சொல்ல வேண்டும்.

Soumendu Roy
Soumendu Roy

இந்தத் திரைப்படத்தின் முக்கிய தொழில்நுட்ப பலங்களுள் ஒன்றாக இளையராஜாவின் இசையைச் சொல்ல வேண்டும். ‘மனிதா .. மனிதா’ என்கிற உணர்ச்சிகரமான பாடலைத் தாண்டி ராஜா பாடியுள்ள ‘வந்தாளே... அல்லிப்பூ’ என்கிற பாடல் இனிமையான ரொமாண்ட்டிக் பாடலாக அமைந்துள்ளது.

‘ஏலே.. கோபாலு… கள்ளு நம்ம தாய்ப்பாலு’ என்கிற பாடல், இன்றைய டாஸ்மாக் கலாசாரத்தின் முரணை உணர்த்துகிறது. ஜெய்சங்கரும் ராஜேஷூம் பண்ணையாரின் ஆட்களோடு மோதும் சண்டைக்காட்சியில், வழக்கமாக வெளிப்படும் பரபரப்பான இசையைத் தவிர்த்து வித்தியாசமாக இசையமைத்துள்ளார் இளையராஜா. கெளதமிற்கும் பாப்பாத்திக்கும் இடையில் நிகழும் மெல்லிய காதல் போன்ற காட்சிகளில் சுவாரஸ்யமான பின்னணி இசையைத் தந்துள்ளார்.

பரத நாட்டியக் கலை, நந்தன் கதையை விவரிக்கும் தெருக்கூத்து போன்ற விஷயங்கள் திரைக்கதையோடு இணைக்கப்பட்டிருப்பது சிறப்பானதுதான் என்றாலும் அதன் போக்கில் இடைச்செருகலாகவே தெரிகின்றன.

“உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு பண்ணலாம்னு நெனக்கிறேன்” என்று வழக்கறிஞர் சாருஹாசன் தொழிலாளர்களிடம் சொல்லும் போது “போலீஸ் கிட்ட இருந்துதான் எங்களுக்குப் பாதுகாப்பு தேவை” என்பது போன்ற துடிப்பான வசனங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்துவது போலவே அமைந்திருக்கின்றன.

கண் சிவந்தால் மண் சிவக்கும்
கண் சிவந்தால் மண் சிவக்கும்

முதலாளித்துவத்தின் அராஜகப் போக்கிற்கும் உழைக்கும் வர்க்கத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிகழும் போராட்டத்தின் வரலாறு நெடியது. அதன் கோரமான சாட்சியங்களுள் ஒன்று ‘கீழ்வெண்மணிப் படுகொலை’. நம் மண்ணில் நிகழ்ந்த இப்படியொரு முக்கியமான சமூகக் கொடுமையை வைத்து தமிழிலேயே பல அழுத்தமான படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

பாரதி கிருஷ்ணகுமார் உருவாக்கிய ‘ராமையாவின் குடிசை’ என்கிற ஆவணப்படம் இதன் பின்னணியை முழுமையாக விளக்கியிருக்கிறது. அரவிந்தன் (1997), அசுரன் (2019) போன்ற திரைப்படங்களில் இந்தச் சம்பவம் நினைவுகூரப்பட்டிருக்கிறது. இது போன்றவற்றைத் தவிர வேறு படைப்புகள் இல்லை.

இப்போது வெளிவந்திருந்தால் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படம் சென்சார், ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு உள்ளிட்டு பல தடைகளைச் சந்தித்திருக்கும்.

ஆனால், எண்பதுகளின் காலகட்டத்திலேயே இத்தகைய துணிகரமான, முற்போக்கான முயற்சியை கையில் எடுத்த இயக்குநர் ஸ்ரீதர் ராஜனின் சமூக அக்கறையும் கலை ரசனையும் பாராட்ட வைக்கிறது. கடந்த காலத்தின் வரலாற்றுத் தடயங்களை, திரைப்படங்களின் வழியாக நினைவுகூர்வதும் அவற்றின் தூண்டுதலில் மேலதிக தகவல்களை விரிவாக தேடியறிவதும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் அடிப்படையான கடமை. அந்த வகையில் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ திரைப்படத்தை பார்ப்பது மிக அவசியமானது.

இந்தத் தொடரில் அடுத்து எந்தப் படத்தைப் பார்க்கலாம்? கமென்ட்டில் பதிவிடுங்கள்.