
கஷ்டப்பட்டு வேலை செஞ்சேன். எந்த வேலையும் செய்யத் தயங்காத மனசுதான் என்னை இதுவரைக்கும் கூட்டிவந்திருக்கணும்.
‘நவம்பர் ஸ்டோரி’ வெப்சீரிஸில் விசாரணை அதிகாரியாக அதகளம் செய்திருக்கிறார் அருள்தாஸ். புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரின் பாத்திரத்தை அப்படியே பிரதிபலித்திருந்த அருள்தாஸிடம் பேசினேன்.
“நெனச்சா இன்னும் ஆச்சர்யமா இருக்கு. ஊர்ல கல்யாணம், காதுகுத்துக்கு வீடியோ பிடிச்சுக்கிட்டு இருந்தவன் எப்படி சினிமா வரைக்கும் வந்தேன்னு தெரிய மாட்டேங்குது. மதுரை என் ஊரு! சினிமாவுக்கு சம்பந்தமில்லாத குடும்பம். படிப்பு வராது என்று தெரிஞ்சுபோச்சு. அப்படியே ஒரு சின்ன கேமராவை வாங்கிட்டு போட்டோ புடிச்சிட்டுத் திரிஞ்சேன். அப்புறம் வீடியோவுக்கு மாறவேண்டி வந்தது. அதிலும் அடுத்த கட்டத்திற்குப் போகணும்னு தோணுச்சு.

எங்க ஊருதான் டைரக்டர் பாலா. அப்பதான் அவரு பாலுமகேந்திரா கிட்ட இருந்துவந்து சினிமா டைரக்ட் பண்ணும் முயற்சில இருந்தார். ஊருக்கு வந்திருந்த அவர்கிட்ட, ‘ஏதாவது கேமராமேன்கிட்ட சேர்த்துவிடுங்க’ன்னு கேட்டேன். ‘நானே அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்... படம் கிடைச்சிட்டா என் படத்து கேமராமேன்கிட்ட வேலை பாரு’ன்னு சொன்னார். நான் அவர் பின்னாடியே சென்னைக்கு வந்துட்டேன். அவரு வேற வழி இல்லாமல் பாலு சார் அசிஸ்டன்ட் கோபால் கிட்ட சேர்த்துவிட்டார். பாலா அண்ணனே தட்டுத்தடுமாறி ஒரு பாதையைப் பிடிக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம் அது.
கஷ்டப்பட்டு வேலை செஞ்சேன். எந்த வேலையும் செய்யத் தயங்காத மனசுதான் என்னை இதுவரைக்கும் கூட்டிவந்திருக்கணும். மூணு படம் தனியா செய்தேன். என் வேலை பக்காவா இருந்தும் படம் போகல. சினிமாவுல ஜெயிக்கணும்னா, ஓடுற படத்துல நாம இருந்தாகணும்! இது ஒரு விசித்திரமான பூமி. உங்களுக்குப் பிடிச்ச விஷயமா சொல்லணும்! அதை மத்தவங்க மனசுக்கும் பிடிக்கிற மாதிரி சொல்லணும்! எல்லோரும்தான் எழுதுறாங்க, விளையாடுறாங்க. ஆனால் சில பேர் மட்டும் தானே ஜெயிக்கிறாங்க. காரணம், கிராஃப்ட். அந்த நுட்பம் பழகணும், அவ்வளவுதான்.


டைரக்டர் சுசீந்திரன் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே தெரியும். அவர்தான் என்னைக் கூப்பிட்டு ‘நீ பேசுறது எல்லாம் ஒரு டைப்பா இருக்குடா. இதுல நார்த் மெட்ராஸ் ரவுடியா நடி’ன்னு ‘நான் மகான் அல்ல’ படத்தில் இறக்கி விட்டார். ஒண்ணும் தெரியாமத்தான் அதில் நடிச்சேன். பாலா அண்ணன் பார்த்து ‘டேய், உன் கிட்ட வித்தை இருக்குடா’ன்னு சொன்னார். அடுத்தடுத்து கேரக்டர்களை மனசுக்குள்ள ஓட்டிப் பாத்து நடிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா பிடிபட்டிருச்சு.
ஒருநாள் நண்பன் சீனுராமசாமி கூப்பிட்டு ‘ஒரு சின்ன பட்ஜெட் படம் பண்றேன். ஹீரோ அகப்பட மாட்டேங்குறான். யார் வந்தாலும் நம்ம மனசுக்கு ஒட்டலை’ன்னு சொன்னார். எனக்குக் கதையும் தெரிந்ததால ‘நான் மகான் அல்ல’ படத்தில் கார்த்தி நண்பனா நடிச்ச என் நண்பன் விஜய்யைக் கூப்பிட்டுட்டு அவர்கிட்ட போனேன். அவருடைய அசிஸ்டன்ட் கிட்ட ‘இவர் நல்லா இருக்கார்னு சொல்லிடுங்க... இல்லாட்டி அடுத்த மூணு மாசத்துக்கு ஷூட்டிங் இருக்காது’ எனச் சொல்லிவிட்டேன். விஜய்யைப் பார்த்துவிட்டு சீனு தன் உதவியாளர்களிடம் ‘இவன் எப்படி’ எனப் புருவம் உயர்த்த, அத்தனை உதவியாளர்களும் ‘சூப்பர், அருமை’ என ஆரவாரித்தார்கள். நான் கொண்டு வந்துவிட்டது விஜய் என்று அழைக்கப்பட்ட விஜய் சேதுபதிதான். பெரும் நடிகனை ஒரு இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்துட்டோம்னு இன்னிக்கு வரைக்கும் எனக்குப் பெருமைதான்.
லட்சம் பேர் சினிமாவுக்கு வரணும்னு திரியுறாங்க. ஆனால் இதில் கொஞ்சம் பேர்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட இடத்தின் அருமை புரிஞ்சிருக்கேன். ஒரே மாதிரி கேரக்டர்களில் சிக்காமல் புதுசு புதுசா நடிக்கணும். பருத்திவீரனில் ‘சித்தப்பு’ கேரக்டர் நான் செய்ய வேண்டியது. ‘வாடா நடிக்க’ன்னு அமீர் அண்ணன் கூப்பிட, நான் கேமராமேனாக அப்ப கமிட்டாகிட்டேன். ஊருக்குப் போனா ‘நல்லா நடிக்கிறீங்க’ எனப் பாராட்டுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!”
அருள்தாஸ் முகத்தில் அப்படியொரு புன்னகை!