சினிமா
தொடர்கள்
Published:Updated:

Oh MY doG - சினிமா விமர்சனம்

Oh MY doG - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
Oh MY doG - சினிமா விமர்சனம்

ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் திரைக்கதையும் வசனங்களும் நம்மைச் சிரிக்க வைக்கின்றன

குழந்தைகளையும் அவர்களின் உற்ற நான்குகால் நண்பனான நாயையும் பற்றிப் பேசும் படமே இந்த ‘ஓ மை டாக்.’

பெரும்பணக்காரரான வினய்க்கு நாய்கள் கண்காட்சியில் வெற்றி பெறுவதென்பது கெளரவப் பிரச்னை. அதற்காகப் பார்த்துப் பார்த்து நாய்களை வளர்க்கும் அவர் தன் பண்ணையில் பிறந்த, விழிச்சவால் கொண்ட நாய்க்குட்டியைக் கொல்ல உத்தரவிடுகிறார். அந்தக் குட்டி தன் சுட்டித்தனத்தால் தப்பித்து சிறுவன் அர்னவ் விஜயிடம் தஞ்சமடைகிறது. பெரும் போராட்டத்திற்குப் பின் வினய்யின் சதிவேலைகளைத் தாண்டி அர்னவ்வும் அவர் நாய்க்குட்டியும் வென்றார்களா என்பதே கதை.

அர்னவ் விஜய்க்கு இது நல்லதொரு அறிமுகம். உணர்ச்சிகளைத் தன்னால் முடிந்த அளவிற்கு வெளிக்காட்டி கவனிக்க வைக்கிறார். அருண் விஜய்க்கு இதில் ஆக்‌ஷனைக் குறைத்து, பாசத்தைப் பொழியும் வேலை. அவரும் தன் பங்கைச் செய்துவிட்டுக் கடக்கிறார். வினய் வழக்கமான தமிழ் சினிமா வில்லனாகவே மாறிக்கொண்டிருப்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி. விஜயகுமார், மஹிமா நம்பியார், பானுச்சந்தர் என ஏராளம் பேர் இருந்தாலும் கதையில் அவர்களுக்கான வெளி பெரிதாக இல்லை.

Oh MY doG - சினிமா விமர்சனம்

விலங்குகளை வைத்துப் படமெடுத்து குழந்தைகள், குடும்பங்களைக் கவரும் ட்ரெண்ட் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட நிலையில் மீண்டும் ஹஸ்கி நாய் வகை மூலம் அந்தப் போக்கைத் தொடங்கி வைத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. அழகாய் சேட்டைகள் செய்து பாஸ் மார்க் வாங்கும் அந்த ஜீவன்களே படத்தை ஓரளவிற்கு ரசிக்க வைக்கின்றன.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும் பாடல்களும் ஏமாற்றமே. மலைப்பிரதேசத்தின் இயல்பான பாங்கை அப்படியே கேமரா வழியே கடத்தியிருக்கிறார் கோபிநாத்.

ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் திரைக்கதையும் வசனங்களும் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. எஞ்சிய காட்சியமைப்புகள் எல்லாம் ஏற்கெனவே பலமுறை பார்த்துப் பழகியவை என்பதால் அடுத்து என்ன என்பதை யூகிக்கவே தேவையில்லை. முதல் காட்சி முடியும்போதே முடிவு இப்படித்தான் இருக்கப்போகிறது என்பதைக் கணிக்கமுடிகிற அளவிற்கான வீக்கான திரைக்கதை படத்தின் பெரிய மைனஸ்.

இளம் தலைமுறைக்கான போதனைகள் படத்தில் நிறையவே இருக்கின்றன. ஆனால் உடல்நலம் சரியில்லாத நாயை தங்களின் ஈகோ மோதலுக்காக மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ளும்படியான தொனி தென்படுவதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Oh MY doG - சினிமா விமர்சனம்

இந்தக் காலத்துக் குழந்தைகளின் வாசிப்பு, ரசனை எல்லாம் அடுத்த கட்டத்திற்குப் போய்விட்ட நிலையில், பழைய சாயலை விடுத்துப் புதுமை காட்டியிருந்தால் ஈர்த்திருக்கும் இந்த ‘ஓ மை டாக்.’