சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஒன் வே - சினிமா விமர்சனம்

ஒன் வே - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒன் வே - சினிமா விமர்சனம்

தயாரிப்பாளரும் நாயகனுமான பிரபஞ்சன், வறுமையின் துயரத்தையும் துரத்தும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் அழகாகப் பிரதிபலிக்கிறார்.

வறுமையால் வாழ்வில் இழப்புகளைச் சந்திக்கும் இளைஞன், உயிரைப் பணயம் வைக்கும் ஓர் அபாயகரமான விளையாட்டில் மாட்டினால், அதுதான் ‘ஒன் வே.’

கோவை சரளாவின் கணவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ள, அவரின் மகன் பிரபஞ்சன் குடும்ப பாரத்தை ஒற்றை ஆளாய்த் தூக்கிச் சுமக்கத் தயாராகிறார். செல்போன் டவர் முதல் லாரி க்ளீனர் வரை பல வேலைகள் பார்த்தும் கடனை அடைக்க முடியாத சூழலில் வளைகுடா சென்று வேலை செய்ய முடிவெடுக்கிறார். அதற்கான பயணம், அவரை உயிருக்கு அச்சுறுத்தலான ஒரு பணக்காரர்களின் சாகச விளையாட்டில் கொண்டுபோய் விடுகிறது. அதிலிருந்து நாயகன் மீண்டாரா, குடும்பத்தின் துயர் துடைத்தாரா என்பதை இருவேறு களங்களை வைத்துச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

ஒன் வே - சினிமா விமர்சனம்

தயாரிப்பாளரும் நாயகனுமான பிரபஞ்சன், வறுமையின் துயரத்தையும் துரத்தும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் அழகாகப் பிரதிபலிக்கிறார். ஏதேனும் ஒரு துரும்பைப் பற்றிக்கொண்டு பிரச்னைகளில் இருந்து மீண்டுவிட மாட்டோமா எனும் பரிதவிப்பை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார். ‘ஒரு கொலை செய்தால்தான் உயிர் வாழவும் முடியும்; பணமும் கிடைக்கும்' எனும் சூழலில் தவிப்பைக் காட்டுகிறார். நாயகியே இல்லாத படத்தில் ஹீரோவின் தங்கையாக ஆரா. பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் அச்சத்தைக் கண்களிலேயே காட்டியவருக்கு இன்னும் நடிக்க அதிகம் வெளி கிடைத்திருக்கலாம். ‘தான் ஒரு நகைச்சுவை நடிகை மட்டுமல்ல. தேர்ந்த குணச்சித்திர நடிகையும்கூட' என்று நிரூபிக்கிறார் கோவை சரளா. தன் நிலையை நினைத்து வட்டார வழக்கில் புலம்புவது, கடன் கொடுத்துவிட்டு தன் வீட்டில் பாலியல் அத்துமீறல் செய்ய முயல்பவனைத் துணிச்சலுடன் எதிர்கொள்வது என்று தாயாகவே மாறியிருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் வினோத்.

கிராமத்து வறண்ட நிலப்பரப்பிலும் ‘விளையாட்டு' நிகழிடமான அரையிருட்டு அறைகளிலும் முத்துக்குமரனின் ஒளிப்பதிவு சிறப்பு. சோகத்தையும் திகிலையும் கலந்து வழங்குவதில் அஷ்வின் ஹேமந்தின் இசை வென்றிருக்கிறது. படம் முடியும்போது, புதிய மெட்டில் ஒலிக்கும் பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே' பாடல் சிறப்பு.

ஒன் வே - சினிமா விமர்சனம்

இரண்டு வெவ்வேறு வாழ்க்கைச்சூழலைத் தேர்ந்தெடுத்து அதைத் திறம்பட இணைத்ததில் வெற்றிகண்டிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல். செல்போன் டவரில் இருந்து ஒரு தொழிலாளி தவறிவிழும் காட்சி பதைபதைக்க வைத்துவிடுகிறது. அதேபோல் கடன் கொடுத்த வினோத், கோவை சரளா வீட்டில் நடந்துகொள்ளும் முறையும் அதிர்ச்சியை விளைவிக்கிறது.

கிராமத்து வறுமை வாழ்க்கையில் எதார்த்தப் பதிவாய்த் தொடங்கும் திரைப்படம் மனிதர்களின் உயிரோடு விளையாடும் பணத்திமிர் கொடூரத்தைத் திகிலுடன் சித்திரிப்பது பலம், பலவீனம் இரண்டும் என்று சொல்லலாம். இண்டர்போல் தொடர்பான காட்சிகள், கவர்ச்சி காட்டும் பெண் அதிகாரி ஆகியவை தேவையற்ற உறுத்தல்கள். கடன் கொடுத்துவிட்டுப் பாலியல் மீறல்கள் நிகழ்த்துவதைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் காவல்துறையே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

குறைகளைத் தாண்டி பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் புனைவுப் பயணம் இந்த ‘ஒன்வே'யில் நிகழ்ந்திருக்கிறது.